குருவே...யோகி ராமா..! 32: திருச்சுழி தந்த பகவான்!

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

திருச்சுழி. இப்போதைய விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டைக்கு அருகில் உள்ளது. அன்றைக்கு மதுரை ஜில்லாவில் இருந்த சின்னஞ்சிறிய கிராமம். மதுரையிலோ மதுரைக்கு அந்தப் பக்கமோ திருச்சுழி என்ற கிராமத்தைச் சொன்னால், நிறைய பேருக்குத் தெரியாது.

விருதுநகர் தெரியும், அருப்புகோட்டை தெரியும், கமுதி கூட தெரியும். திருச்சுழியா... என்று அந்தக் காலத்தில் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்கள் நிறையபேர் உண்டு.

இத்தனைக்கும் சுமார் இரண்டாயிரம் வருடப் பழைமை வாய்ந்த அற்புதமான கோயில் திருச்சுழியில் இருக்கிறது.

சிறிய ஊர்தான் திருச்சுழி. அந்த ஊரின் பாதியளவுக்கு இருக்கிறது அங்கே உள்ள சிவன் கோயில். அழகிய ஆலயம். கருங்கல் கட்டுமானத்திலான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த, அற்புதமான கோயில். ஊரின் பெயர்தான் சுவாமிக்கு. அப்படிச் சொன்னால் பொருத்தமாக இருக்காது. இறைவனின் பெயர்தான் ஊருக்கும் அமைந்தது. ஆமாம்... சிவனாரின் திருநாமம் திருச்சுழிநாதர்.

அதுமட்டுமா. திருச்சுழி நாதர், திருமேனி நாதர், பூமி நாதர் என்றெல்லாம் கூட பெயர்கள் கொண்டு சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார் சிவனார்!

எழில் மிகுந்த கிராமம். வயல்கள் நிறைந்த பூமி என ஒருகாலத்தில் இருந்தது. முக்கியமான சிவனாரின் திருநாமங்களாக, திருமேனி நாதர், பூமி நாதர், மணக்கோல நாதர், கல்யாண சுந்தரர் என்று நான்கு உண்டு என்கிறது ஸ்தல புராணம். அதாவது, நான்கு யுகங்களிலும் நான்கு திருநாமங்களுடன் சிவபெருமான் அருள்பாலித்தார் என்கிறது புராணம். தற்போது கலியுகத்தில்... திருமேனி நாதராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

நம்மையெல்லாம் தாங்கிக் காக்கிற பூமாதேவியானவள், அரக்கர்களைக் கொன்றொழித்தாள். அப்படி அரக்கர்களைக் கொன்ற பாவத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள். அந்தப் பாவத்தில் இருந்தும் சாபத்தில் இருந்து மீள்வதற்காக, இங்கே இந்தத் திருச்சுழி எனும் பூமிக்கு வந்தாள் பூமாதேவி. இங்கு தீர்த்தக்குளம் ஒன்றை உண்டுபண்ணினாள். அந்தக் குளத்தில் தினமும் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டாள். இதில் மனமிரங்கிய சிவபெருமான், பூமாதேவியின் சாபம் தீர்த்து அருளினார். பாவம் போக்கி அருளினார் என்கிறது புராணம்.

இங்கே இன்றைக்கும் திர்த்தக் குளம் இருக்கிறது. இதை பூமாதேவி உண்டு பண்ணிய திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம். இந்தக் குளம், ரொம்பவே விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள். பின்னே... நாம் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் என சகலத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கிற பூமாதேவியின் சாபத்தையே போக்கி அருளிய தலம் என்றால், திருச்சுழி எத்தனை மகத்துவம் மிக்கது என்பது புரிந்துவிடும்!

திருச்சுழியின் சிறப்பு இன்னும் உண்டு. அருளாளர்கள் பலரையும் அடையாளம் காட்டியிருக்கிறது திருச்சுழி. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், சாதாரணரில்லை என்பது நமக்கெல்லாம் தெரியும். சிவனாரின் பக்தர் மட்டுமின்றி, சிவபெருமானுக்கு ஆத்ம நண்பனாகவும் திகழ்ந்தவர் என்பதும் அறிவோம்.

ஒருமுறை, தெற்கே பயணப்பட்ட சுந்தரர், திருச்சுழிக்கு அருகில் மடம் ஒன்றை அமைத்துத் தங்கியிருந்தார். அன்றிரவு சுந்தரரின் கனவில் வந்துவிட்டார் சிவபெருமான். ‘நான் அங்கே இருக்கிறேன். நீ இங்கே என்ன செய்கிறாய்?’ என்று கேட்க, ஆடிப்போனார் சுந்தரர். அதுமட்டுமின்றி, அப்போது சுந்தரருக்கு திருக்காட்சி தந்தருளினாராம் சிவனார்.

பூமாதேவிக்கு சாபமும் பாவமும் போக்கிய திருத்தலம் அல்லவா, திருச்சுழி. இங்கு வந்து சிவ தரிசனம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும் என்பதாக ஐதீகம். அதேபோல், பூமாதேவிக்கு அருளிய தலம் என்பதால், பூமி தொடர்பான சிக்கல்களையும் வழக்குகளையும் தீர்த்து வைக்கிறார் பூமிநாதர்.

பூமாதேவிக்கு அருளியவர், பூமியில் உள்ள மொத்த மனிதர்களுக்கும் நன்மைகள் நடக்க திருவுளம் கொண்டார். பூமாதேவியின் பாவங்களையெல்லாம் போக்கியவர், இங்கே மனிதர்கள் அனைவரின் பாவங்களையும் போக்குவது என முடிவு செய்தார்.

சுந்தரருக்கு அருளிய சிவபெருமான், ஒவ்வொரு தருணங்களிலும் சுந்தரரின் மகிமையை உலகுக்குக் காட்டிக் கொண்டே இருந்தார். உணர்த்திக் கொண்டே இருந்தார். அதேபோல், அருளாளர்களை அடையாளம் காட்டுவது என நினைத்தார் ஈசன்.

இன்னொரு விஷயம்... திருச்சுழி கோயிலில் ஏற்றப்படும் மோட்ச தீபம் ரொம்பவே விசேஷமானது. இறந்தவர்களின் திதி அல்லது அமாவாசை முதலான நாட்களில், இறந்தவர்களை நினைத்து மோட்ச தீபமேற்றினால், நம்முடைய முன்னோர் மோட்ச கதி அடைவார்கள்; சிவபதம் அடைவார்கள் என்பது ஐதீகம். மேலும் பித்ருக்களின் ஆசீர்வாதமும் இறைவனின் பேரருளும் கிடைத்து சந்ததி சிறக்க வாழலாம் என்பது நம்பிக்கை!

அதாவது, வாழும் போது சொர்க்கம் போலான அமைப்புடன் நிம்மதியாக வாழவேண்டும். இறந்த பிறகு, ஈசனே கதியென்று மோட்சத்தை அடையவேண்டும். இந்த இரண்டும்தானே நம்முடைய எதிர்பார்ப்பு.

பூமாதேவிக்கு சாப விமோசனம் தந்தது போல், சுந்தரருக்கு காட்சி தந்து அருளியதுடன் அவரின் ஆற்றலையும் பக்தியையும் உலகுக்கு உணர்த்தியது போல், இறந்தவர்களுக்கு மோட்ச கதியை தந்தருள்வது போல்... எல்லாமாக ஓர் அருளாளரை அடையாளம் காட்டவேண்டும் என திருவுளம் கொண்டார் தென்னாடுடைய சிவன்.

அப்படியான தருணமும் வந்தது.

திருச்சுழியில் சுந்தரம் ஐயர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். கிராமத்தினருக்கே உண்டான இனிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரின் மனைவி அழகம்மையார். கருணையும் கனிவும் கொண்ட பெண்மணி. சதாசர்வ காலமும் குடும்பத்தை ஒரு கண்ணாகவும் பக்தியை மறுகண்ணாகவும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்த இரண்டுபேருக்கும், பூமிநாதர்தான் எல்லாமே. வீடு, வீடு விட்டால் கோயில் என்று வாழ்க்கையை அமைத்து, நிம்மதியும் நிறைவுமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நாகசாமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.

அடுத்த இரண்டு வருடங்களில், அழகம்மையார் மீண்டும் கருவுற்றார். குளிர்ந்த மார்கழி மாதத்தில்... அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த முறையும் ஆண் குழந்தை. ஊரே குதூகலித்தது. எல்லோரும் வந்து வந்து பார்த்தார்கள்.

பின்னாளில்... அந்தக் குழந்தையை, உலகமே பார்க்க வரும் என்பதும் எல்லோரும் கொண்டாடி மதிப்பார்கள் என்பதும் மதித்து பூஜிப்பார்கள் என்பதும் அப்போது யாருக்கும் தெரியாது.

அந்த இரண்டாவது குழந்தைதான்... வேங்கடரமணன். சரியாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால்... பகவான் ஸ்ரீரமண மகரிஷி!

இன்றைக்கு திருச்சுழியை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். திருச்சுழி எங்கே இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. திருச்சுழியில் உள்ள பூமிநாதர் கோயிலை பலரும் வந்து தரிசித்திருக்கிறார்கள். தரிசித்துச் செல்கிறார்கள்.

திருச்சுழியில் அவதரித்து, திருவண்ணாமலையில் வாழ்ந்து, மகான் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஸ்ரீரமண மகரிஷியை, எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். எல்லோரும் தரிசித்து வணங்கியிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில், சூட்சுமமாய் இருந்துகொண்டு, வருவோருக்கெல்லாம் அருள்வழங்கி நிம்மதியைத் தந்துகொண்டிருக்கிறார் ரமண பகவான்.

தெற்கே போ என்று சாது கட்டளையிட புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு வந்த ராம்சுரத் குன்வர், அவருடனேயே ஆஸ்ரமத்தில் சிலகாலம் தங்கினார். அதையடுத்து திருவண்ணாமலைக்குப் போ என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்க... அதன்படி திருவண்ணாமலைக்கு வந்தார் ராம்சுரத் குன்வர். அங்கே... ரமணாஸ்ரமம் சென்றார். பகவான் ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசித்தார்.

அருளாளர்களின் அருள் செய்யும் வேலை இது. அவர்களின் திருப்பணிகளில், தலையாய பணி இது. அருளாளர்கள், எப்போதும் அருளாளர்களை அடையாளம் காட்டுவார்கள். காட்டிக் கொண்டே இருப்பார்கள்.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்