வெற்றிவேல் முருகனுக்கு...17: ஆறு வகை நைவேத்தியம், மாலைகள்... ராகு தோஷம் நீக்குவான் முருகன்!

By வி. ராம்ஜி

அகத்திய முனிவருக்குத் தமிழையும், குமர குருபரருக்கு பேசும் திறனையும், முத்துசாமி தீட்சிதருக்குப் பாடும் வல்லமையையும், ஔவை பிராட்டிக்கு ஞானத்தையும் தந்தவர் முருகப் பெருமான்.

ஆறுமுகன், அங்காரக சொரூபன். ஜோதிட சாஸ்திரத்தில் அங்காரகன், பூமிநாதன். ஆதலால் தன்னை வணங்குவோருக்கு பூமியையும் பூமி சார்ந்த செல்வத்தையும் தந்து அருளுகிறான் முருகப் பெருமான். ‘சரவணபவ’ என்பதே முருக பக்தர்களது ஜபமந்திரம்.

ஏழு ஆவர்ணங்களைக் கொண்ட சுப்ரமண்ய யந்திரத்தை அமைத்தும் திருப்புகழ், திருமுருகாற்றுப் படை, கந்தர் அனுபூதி மற்றும் சுப்ரமண்ய புஜங்கம் ஆகியவற்றை பாடியும் முருகனை வழிபடலாம்.

காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் ஆகிய ஆறு பகைவர்களை அழித்து, வீடுபேறு எனும் வரத்தைப் பெற முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசிக்க வேண்டும்.

‘உல்லாச நிராகுல யோக இத சல்லாப வினோதனும் நீயலையே’ என்பது ஆறுபடை வீட்டின் தத்துவம். நம் உடலிலும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்கள் உள்ளன.

சரி... சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழும் ஆனைமுகனின் தம்பியுடைய திருத்தலங்களில் ஒன்றைப் பார்ப்போமா?

திருவிடைக்கழி. இது எங்கே இருக்கிறது தெரியுமா என்று கேட்டால், நிறைய பேருக்கு தெரியாது. திருக்கடையூர் தெரியும்தானே. அபிராமி அன்னை குடிகொண்டிருக்கும் திருக்கடையூருக்கு மிக அருகில் உள்ள தலம் திருவிடைக்கழி.

சூரபத்மன் முதலான மூன்று அசுரர்களை முருகக் கடவுள் அழித்த திருத்தலங்கள் மூன்று இடங்களாக அமைந்துள்ளன. தாரகாசுரன் என்பவனை அழித்த இடம் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் என்கிறது புராணம். மற்றொரு அசுரனான சிங்கமுகனை, கந்தக் கடவுள் வதம் செய்த தலம் போரூர் என்றும் சூரபத்மனனை அழித்த இடம் திருச்செந்தூர் என்றும் போற்றுகின்றனர்.

இந்த சூரசம்ஹாரத்தின் போது, அன்னை பார்வதிதேவியிடம் வேல் வாங்கி போர் செய்தார் முருகன் என்கிறது புராணம். ஆனால், அன்னையிடம் வேல் வாங்கினாலும் தந்தையின் அருளைப் பெற்று, தந்தையுடனேயே சந்நிதி கொண்டிருக்கும் திருத்தலம் விசேஷமாகப் போற்றப்படுகிறது.

நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு அருகில் உள்ளது திருவிடைக்கழி எனும் திருத்தலம். நின்ற திருக்கோலத்தில், இங்கே கம்பீரத்துடனும் சிரித்த திருமுகத்துடனும் அருள்பாலிக்கிறார் முருகக் கடவுள்.

எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், இங்கே கருவறையில் முருகப்பெருமான் நின்றிருக்க, அருகில் சிவலிங்கமும் காட்சி தருவது விசேஷம் என்று வியந்து சொல்கின்ன்றனர் பக்தர்கள்!

அசுரக் கூட்டங்களைக் கொன்றதால் தோஷம் உண்டாயிற்ரு. அந்த தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் உள்ள குரா எனும் மரத்தடியில் அமர்ந்து, தந்தையார் சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தார் முருகக் கடவுள். அதில் மகிழ்ந்த சிவனார், மைந்தன் முருகனுக்கு, குரா மரத்தடியில் திருக்காட்சி தந்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளினார் என்கிறது ஸ்தல புராணம்!

இந்தத் தலத்தில் இன்னொரு சிறப்பு... ராகு பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, கந்தபிரானை தவமிருந்து வணங்கி, அருள் பெற்றார். எனவே ராகு தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசுப்ரமண்யரை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், தோஷ நிவர்த்தி பெறலாம். ராகு முதலான தோஷங்கள் விலகும் என்று போற்றுகிறார்கள்.

தைப்பூச நன்னாளில்... இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சார்த்தி, செவ்வரளி மாலை சூட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் பக்தர்கள்.

திருவிடைக்கழி முருகனை வணங்குங்கள். ராகு தோஷம் நீங்கி, சந்தோஷமும் உற்சாகமும் பொங்க வாழ்வீர்கள்!

அடுத்து இன்னொரு முருகன் கோயில்.

இதுவும் திருக்கடையூருக்கு அருகில்தான் உள்ளது. அதாவது திருக்கடையூருக்கு அந்தப் பக்கம் திருவிடைக்கழி. இது இந்தப் பக்கம் இருக்கிறது. ஊரின் பெயர் செம்பனார்கோவில். திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது செம்பனார்கோவில்.

இங்கே, தந்தை சிவனார் அருள்பாலிக்கும் ஆலயமும் உண்டு. மைந்தன் முருகப்பெருமான் அருள் வழங்கும் கோயிலும் இருக்கிறது. பழைமையான இந்தக் கோயிலில் தேவேந்திர மயிலுடன், அழகுக் கோலம் காட்டி ஆட்சி நடத்துகிறார் முருகப்பெருமான்!

ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேதராக, 12 கரங்களில் ஆயுதங்களுடன், தேவேந்திர மயிலின் மீது அமர்ந்தபடி, ஸ்ரீசண்முக சுப்ரமணியர் காட்சி தருகிறார். பொதுவாக கந்தனுக்கு வலப்புறம் நோக்கி நிற்கும் மயிலின் முகம் இங்கே இடப்புறம் நோக்கி நிற்பது விசேஷம்!

இங்கே, முருகக்கடவுள், தனது ஆறு கிரீடங்களிலும் முறையே ஸ்ரீபிரம்மன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபரமேஸ்வரர் மற்றும் ஸ்ரீபார்வதிதேவி ஆகியோரின் சக்தியைப் பெற்றிருப்பதாக ஐதீகம்.

ஆகவே, இவரை வணங்கினால், மும்மூர்த்தியரையும் முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.. தைப்பூச நன்னாளுக்கு முன்னதாக, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் துவங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகின்றன தைப்பூசத் திருவிழா.

தினமும் ஒவ்வொரு வித அலங்காரத்தில், முருகப்பெருமான் திருவீதியுலா வரும் அழகனை, அழகன் முருகனை, அவனுடைய அழகைக் கண்டால் சிலிர்த்துப்போவோம்!

தைப்பூசத் திருநாளில் ஸ்ரீசண்முக சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வில்வம், அரளி, மருக்கொழுந்து, ரோஜா, முல்லை, தாமரை என ஆறு விதமான மலர்களால் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் என ஆறு வகை சாதங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

தேவ மயிலுடன் காட்சி தரும் கந்தனை வணங்கினால், சந்தான பாக்கியம் கிடைக்கும். கல்யாண வரம் கைகூடும். ஆறு வகை நைவேத்தியத்தில் ஒன்று, ஆறு வகை மாலைகளில் ஒரு பூமாலை என முருகக் கடவுளுக்குப் படைத்து வழிபட்டால், தொழில் சிறக்கவும் வியாபாரம் வெற்றி பெறவும் துணை நிற்பான், வேலப்பன்!

-வேல் வேல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்