தாயே நீயே துணை! 3: மகாலக்ஷ்மி... சரஸ்வதி... காளிகாம்பாள்!

By வி. ராம்ஜி

அம்மன் அற்புதங்கள்... தலங்கள்!

மூன்று தேவியர் என்று மகாசக்தியைப் போற்றிக் கொண்டாடுவோம்தானே. முப்பெருந்தேவியர் என்று ஆராதித்து வழிபடுகிறோம் அல்லவா. சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தால், முப்பெருந்தேவியரின் சக்தியையும் அருளையும் பெறலாம் என்பது உறுதி!

லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவில்... ‘ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷண ஸேவிதா’ என ஓரிடம் வரும். கவனித்திருக்கிறீர்களா.

அதாவது, மகாலக்ஷ்மியும் சரஸ்வதியும் இரண்டு கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். ஆகவே சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாளை,கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், மகாலக்ஷ்மி வழங்குகிற பொன்னையும் பொருளையும் தந்தருள்வாள். சரஸ்வதிதேவியாக இருந்து கல்வியையும் ஞானத்தையும் தந்து அருள்பாலிப்பாள் . அத்துடன், காளிகாம்பாளாக இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனோதைரியம் தந்து, மனக்கிலேசங்கள் விலக்கி, எதிர்ப்புகளையெல்லாம் அழித்தொழித்து அருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்!

யாதுமாக நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீதுநன்மையெல்லாம் - நின்றன்

செயல்களின்றி இல்லை

போதும் இந்த மாந்தர் வாழும்

பொய்மை வாழ்க்கையெல்லாம்

ஆதிசக்தி தாயே - என் மீது

அருள்புரிந்து காப்பாய்!

என்று மகாகவி பாரதியார் பாடியது, இந்த காளிகாம்பாளைத் தரிசித்துதான் என்கிறார்கள் பக்தர்கள்.

சென்னை பாரிமுனைக்கு, பிராட்வே என்றொரு பெயரும் உண்டு. இங்கே, சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மகாகவி பாரதியார், அடிக்கடி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து, அம்பாள் சந்நிதியிலேயே பலமணி நேரம் அமர்ந்திருப்பாராம்.

ஞானச்சுடர் என்று மகாகவியைப் போற்றுவோம். அதேபோல் வீரபுருஷர் என்றும் அவரின் வீரதீர தைரியங்களைச் சொல்லிப் பூரிப்போம். இங்கே, வீரத்துக்குப் பெயர் பெற்ற காளிகாம்பாளின் திருச்சந்நிதியில் , தன் பாட்டாலேயே பரங்கியரை கிடுகிடுக்கச் செய்த மகாகவி பாரதியார் வழிபட்ட அற்புதமான திருத்தலம் என்று சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்!

செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலவேளையில், ஏராளமான பெண்கள் இங்கு வந்து, துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர். அப்படியே, காளிகாம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூலத்துக்கு எலுமிச்சை செருகி, தீபங்களேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தந்தருள்கிறாள் காளிகாம்பாள் என்று கண்ணீருடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறார்கள் பெண்கள்.

பொதுவாகவே சென்னையும் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரமும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள். காரணம், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்பாள் என்ற பெயரில் புராதனமான ஆலயங்கள், தமிழகத்தில் வேறு ஊர்களில் காண்பது மிகக் குறைவு. அப்படி காமாட்சி எனும் திருநாமத்துடன் திகழும் ஆலயங்கள், மிக மிக சக்தி வாய்ந்த திருத்தலம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், மயிலையின் நாயகி கற்பகாம்பாள். தமிழகத்தில், கற்பகாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை கோயில்கொண்டிருப்பதும் அரிதினும் அரிது என்கிறார்கள். அப்படி, கற்பகாம்பாள் எனும் திருநாமத்துடன் கோயில் இருந்தால், அங்கே மயிலாப்பூர் போலவே கற்பகாம்பாளின் அருளாட்சி அமைந்திருக்கும் என்கிறார்கள் சக்தி வழிபாடு செய்யும் அன்பர்கள்!

அதேபோல், காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன், சென்னை பாரிமுனையில் குடிகொண்டிருப்பது போல், தமிழகத்தில் அம்பிகை கோயில் கொண்டிருப்பது வெகு அரிது, அபூர்வம் என்கிறார்கள். ஒருவேளை, காளிகாம்பாள் வேறு எங்கேனும் கோயில்கொண்டிருந்தாலும், இந்தத் தலத்தைப் போல், சாந்த சொரூபினியாக இருப்பாளா என்றும் தெரியவில்லை என்கிறார்கள்.

இங்கே... காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அமைதியே உருவானவள். கனிவும் கருணையும் நிறைந்தவள். சிரித்த முகம் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களை, தன் குழந்தைகளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருப்பவள். அப்படிப் பார்த்துப் பார்த்து அருள்பவள்.

அதனால்தான், காளிகாம்பாள் கோயிலில், எல்லா நாளும் குவிகிறார்கள் பக்தர்கள். தனக்கு உள்ள குறைகளையும் கஷ்டங்களையும், வீட்டுப் பெரியவர்களிடத்தில் சொன்னால் எப்படி மனதுக்கு நிம்மதியும் தீர்வும் கிடைக்குமோ... அப்படித்தான் காளிகாம்பாளிடம் வந்து, தங்கள் குறைகளையெல்லாம் முறையிட்டுச் சொல்கிறார்கள். கண்ணீர்விட்டுத் தெரிவிக்கிறார்கள்.

வாழ்க்கைச் சக்கரம் இனிதே உருண்டோடிச் செல்ல... அற்புதமாய் பயணிக்க... அருளும் ஸ்ரீசக்ர நாயகி அவள். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, ஸ்ரீசக்ரம்... காளிகாம்பாள் சந்நிதியில் அவளுக்கு முன்னே இருப்பதை தரிசித்திருக்கிறீர்களா.

அந்த ஸ்ரீசக்ர தரிசனம்... ஆயிரம் மடங்கு பலன்களை வாரி வழங்கும் என்பதை அறிவீர்கள்தானே.

காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றால், காளிகாம்பாளையும் அவளுக்கு முன்னே இருக்கிற ஸ்ரீசக்ரத்தையும் முழு ஈடுபாட்டுடன் தரிசித்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

மகாலக்ஷ்மியை ஒரு கண்ணாகவும் சரஸ்வதிதேவியை இன்னொரு கண்ணாகவும் கொண்டு வீற்றிருக்கும் காளிகாம்பாள், தனம் தானிய லாபத்தையும் கல்வி ஞானச் செல்வங்களையும் அள்ளி அள்ளித் தந்தருள்வாள் உங்களுக்கு!

- தரிசனம் தொடரும்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்