ஊழல் அம்பலமாகும்; கடும் தண்டனை உறுதி; கோயில் தீ விபத்துகளால் கவலை வேண்டாம்: யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

By வி. ராம்ஜி

திருச்செந்தூர், மதுரை, திருவாலங்காடு என கோயில்களில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதைப் பார்த்து, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கவலைப்படவேண்டாம். இறை சக்தி, தன் இருப்பைக் காட்டும் செயல்கள் இவை. இதனால் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும். நேர்மையான அதிகாரிகள் வெளியே தெரியும் காலம் வரப்போகிறது என்று தெரிவிக்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

திருச்செந்தூரில் மண்டபம் இடிந்து விழுந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள சிலையில் தங்கத்தைக் காணவில்லை. தமிழகத்தின் பல கோயில்களில் சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன. பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மண்டபத்தில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு கோயிலின், ஸ்தல விருட்சம் தீவிபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஆண்டாள் குறித்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தின் போது ஏன் எழுந்திருக்கவில்லை என்று சங்கர மடம் மீது குற்றப் புகார் வாசிக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் உள்ள கோயில் ஒன்றில், அம்பாளுக்கு சுடிதார் அலங்காரம் செய்தது என ஆன்மிகத்தை நோக்கியே தமிழகம் பல புயல்களைச் சந்தித்து வருகிறது.

ஏன் இப்படி? விபத்துகள் எதனால்? என்றெல்லாம் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீயிடம் கேட்ட போது, அவர் அளித்த விரிவான விளக்கங்களைப் பார்ப்போம்.

''தெய்வத்தையோ தெய்வம் இருக்கும் கோயில்களையோ நாம் காப்பாற்ற வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தருணத்திலும் கடவுளின் சாந்நித்தியம் இப்படித்தான் வெகுண்டு வெளிப்படும். இந்த விபத்துகளெல்லாம் அப்படி வீறுகொண்டு எழுந்து, பல உண்மைகளை உலகுக்கு உணர்த்துவதற்காகத்தான் நடக்கின்றன.

அந்நியர்களின் படையெடுப்பின் போது, தன்னையும் இந்த ஊரையும் பாதுகாத்துக் கொண்டவள் அன்னை மீனாட்சி. தேரோடும் வீதிக்குள் தீயணைப்பு வண்டி வரமுடியவில்லை. அந்தப் பகுதியில் எல்லாம் இருக்கிற ஆக்கிரமிப்புகளை இன்று உலகுக்கே காட்டி விட்டாள் அம்பாள் என்றுதான் சொல்ல வேண்டும்

வரக்கூடிய நாட்களில், இங்கே இன்னும் பிரச்சினைகள் பெரிதாகும். மிகப்பெரிய அளவில், எதிர்பாராத முடிவுகளெல்லாம் வரும். திரிசங்கு நிலையில் இருக்கிற ஆட்சிக்கு சித்திரைப் பிறப்பிற்குப் பிறகு தீர்வு கிடைக்கும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அதிகாரத்தை வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்த அதிகாரிகள் சிக்குவார்கள்.

மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு அதிகாரி, ஓரிடத்தில் இருக்கக் கூடாது. இவையெல்லாம் மாறும். தூக்கி பந்தாடப்படுவார்கள். இந்த கிரகங்களின் சேர்க்கையும் சனி பகவான் அமர்ந்திருக்கும் இடமும் அப்படித்தான் வீரியத்துடன் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.

சிவன் சொத்து குலநாசம். சிவன் சொத்து மட்டுமா. பெருமாள் சொத்தும் குலநாசம்தான். கோயில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது இன்னும் வெளிச்சத்துக்கு வரும். சிலையில் தங்கம் திருடியதெல்லாம் பூதாகரமாக வெடிக்கும். கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள். ஊழல் செய்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள், ஊழலுக்குத் துணை நின்றவர்கள் என அனைவரும் களையெடுக்கப்படுவார்கள். நேர்மையான அதிகாரிகள், வெளிச்சத்துக்கு வருவார்கள்.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலயங்கள், மடாதிபதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கோயில்கள் என கோயில்களின் வருமானத்திற்குக் குறைவே இல்லை. ஆனால், நாற்றமில்லாத கழிவறையை எங்கேனும் வைத்திருக்கிறார்களா. அவையெல்லாம் இன்னும் சிறிது நாளிலேயே சரியாகும். நவக்கிரக ஸ்தலங்களுக்கும் முக்கியமான தலங்களுக்கும் எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள் பக்தர்கள். சுட்டெரிக்கும் வெயிலில், பிராகார வலம் வருகிறார்கள். அந்தப் பாவம் சம்பந்தப்பட்டவர்களை விட்டுவிடுமா? அதற்குத்தான் இந்த விபத்துகள். இன்னும் இப்படியான விபத்துகள் நடக்கத்தான் செய்யும். அதன் மூலம் ஒவ்வொரு ஊழலும் பிரச்சினைகளும் வெளியே தெரிந்து, சீர்செய்யப்படும்.

ஒரு கோயிலின் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிவது நல்லதல்ல. அதேசமயம், இறை சக்தியானது, நமக்குள் ஒரு பாதுகாப்பை, தெளிவை உண்டாக்குவதற்குத்தான் இது நடந்திருக்கிறது. சகோதரத்துவம் கொண்டு சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த பூமியில், நயவஞ்சகர்கள் கூட்டம், பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் என வலியுறுத்துகிறது, இந்த விபத்து. நாம்தான் பாதுகாப்பாகவும் ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.

ஆகவே மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கவலை கொள்ளவேண்டாம். நீதிமன்றங்களே இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு, கிடுக்கிப்பிடி போடும் நிலை விரைவில் வரும். எதற்கெடுத்தாலும் சுத்தம், சுகாதாரம், நிர்வாகம் என்பதற்கு திருப்பதி போல வருமா என்று சொல்லிக்கொண்டிருந்தோமே... இனி தமிழகத்தில் உள்ள கோயில்கள், அப்படி சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் சாமான்ய பக்தர்களுக்கு வசதிகளுடனுமாக மாறப்போகின்றன. அப்படியான மாற்றங்களுக்காகத்தான், இத்தனை விபத்துகளும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்