காரைக்குடி அருகே மாசி படையல் விழா: அசைவ விருந்தளித்த புகுந்த வீட்டு பெண்கள்

By செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அருகே பிறந்த வீட்டுப் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மாசி படையல் விழாவில், அவர்களுக்கு புகுந்த வீட்டுப் பெண்கள் அசைவ விருந்தளித்தனர்.

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீமாவிழியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பிறந்த வீட்டுப் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, மாசி படையல் விழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி படையல் விழா நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக காலையில், ஸ்ரீமாவிழியம்மன், ராக்காச்சி அம்மன், ஸ்ரீவீரகாளி அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பிறந்த வீட்டுப் பெண்களை புகுந்த வீட்டுப் பெண்கள் வரவேற்றனர்.

பின்னர், அவர்கள் கொண்டு வந்த கோழி, சேவல் மற்றும் உறவினர்கள் வழங்கிய 50 ஆடுகள் பலியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, அசைவ உணவு சமைத்து பரிவாரத் தெய்வங்களுக்கு மாசி படையல் இட்டு வழிபாடு செய்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் பிறந்த வீட்டுப் பெண்களை அமர வைத்து, புகுந்த வீட்டுப் பெண்கள் அசைவ உணவை பரிமாறினர். மற்றவர்களும் அசைவ உணவை உண்டு மகிழ்ந்தனர். சைவ உணவும் பரிமாறப்பட்டது.

தங்களை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் நடைபெறும் மாசி படையல் விழா மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவை யும் தருவதாக பிறந்த வீட்டுப் பெண்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE