திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

திருவிழாவில் 10-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடந்தன. காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது.

தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் காலை 7.20 மணிக்குத் தொடங்கியது. திரளான பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ரத வீதிகளில் வலம் வந்த தேர்காலை 9.05 மணிக்கு நிலையை அடைந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில், திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், கோயில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சித் தலைவர் சிவஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெப்ப உற்சவம்: விழாவின் 11-ம் நாளான இன்று (பிப். 24) மாலை சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி ரதவீதிவழியாக தெப்பக்குளம் சேர்கின்றனர். அங்கு இரவில் சுவாமி, அம்மனுடன் தெப்பத்தில் 11 முறை வலம் வரும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

நாளை மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், வீதி வலம் வருதலும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேர்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE