பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
மாற்றங்கள், எப்போது வேண்டுமானாலும் வரும். அது ‘எப்போது’ என்பதுதான் கேள்வி. எப்போது என்று தெரியாமல் இருப்பதுதான் சுவாரஸ்யம். சிலவிஷயங்கள், சில தருணங்களில் நடக்கும் போது, என்னவோ பண்ணும். ஏதோ சொல்லும். அதை நாம் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவோம்.
‘எனக்கென்னவோ மனசு சொல்லுது. இது சரியா வரும்னு’ என்று சொல்லுவோம் இல்லையா. அப்படியான தருணங்கள், எல்லோர் வாழ்விலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், பல சமயங்களில், நம்முடைய மனமானது, நம்முடைய விருப்பத்தின்படியே முடிவுகளை எடுக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
‘என் மனசுக்கு என்னவோ தப்பாத் தெரியுது. அதனால வேணாம்னு நினைக்கிறேன்’ என்பார்கள். அதற்குக் காரணம்... அந்தக் காரியத்தைச் செய்யவேண்டாம் என்று ஏற்கெனவே முடிவெடுத்திருப்போம். அதனால் ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் சொல்லிக் கொண்டே இருப்போம். நல்லதோ கெட்டதோ... நம் மனசுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்தே ஆக வேண்டும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிக்கிறோம்தானே. அது... இப்படித்தான்!
ராம்சுரத் குன்வர், பகவான் ரமணரின் முன்னே அமர்ந்து கொண்டு, மோன நிலைக்குச் சென்று அப்படியே இருந்தார் அல்லவா. அவர் கண்விழிக்கும் வரை, தவத்தில் இருந்து கலைந்து எழுந்திருக்கும் வரை, பகவான் ரமண மகரிஷி, ராம்சுரத்குன்வரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவரின் உதட்டில் இருந்து புன்னகையை மலரவிட்டிருந்தார். கண்களில் கருணையும் உதட்டோரத்தில் அன்புமாக ரமணர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை, கண்விழித்துப் பார்த்த ராம்சுரத் குன்வர், நெகிழ்ந்து போனார்.
சட்டென்று எழுந்து ரமணரை நமஸ்கரித்தார். ரமணரும் கைதூக்கி ஆசீர்வதித்தார். ஆனால் அவருடைய கண்கள் வேறெங்கும் செல்லவே இல்லை. உதட்டின் புன்னகை விலகவே இல்லை. அது தன் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்பதாக நினைத்துப் பூரித்தார் ராம்சுரத் குன்வர்.
அதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து திரும்பவும் ஊருக்குத் திரும்பினார். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கங்கைக் கரையிலேயே பொழுதைக் கழித்தார். திடீரென்று காசிக்குச் சென்றார். மீண்டும் ஊருக்கு வந்தார். சிலநாட்கள் கழித்து, இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றார். இமயமலையில் சிலகாலம் தங்கினார். அங்கே கடும் தவத்தில் ஈடுபட்டார். பிறகு சொந்த கிராமத்தை வந்தடைந்தார்.
இப்படி, ஊர் ஊராகச் சென்ற போதும், அவர் மனம் ஏனோ, ஏதோவொரு தவிப்பில் இருந்தது. எதையோ விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்பது போலவே இருந்தார். அந்த எது என யோசிக்க யோசிக்க... மொத்த ஊரையும் விட்டுப் பிரிந்திருப்பதாக உணர்ந்தார். அந்த ஊர்... திருவண்ணாமலை.
ஆக, காசிக்கும் இமயமலைக்கும் போனாலும் மனம் என்னவோ திருவண்ணாமலையிலேயே இருந்தது. திருவண்ணாமலையை நினைக்கும் போதெல்லாம், ரமணரின் அண்மையும் ஆசியும் நினைவுக்கு வந்தன. ரமணரின் பார்வை வழியே கிடைத்த பேரன்பு, இன்னும் இன்னுமாகக் கிடைக்க வேண்டுமே என்பதாக யோசித்தார்.
அவரால், சொந்த ஊரில் இருக்க முடியவில்லை. அதாவது இருக்கத் தோன்றவில்லை. ஏதோவொன்று ராம்சுரத் குன்வரை உந்தித் தள்ளியபடியே இருந்தது. திருவண்ணாமலை முழுக்க சுற்றியதெல்லாம் அசைபோட்டார்.
திருவண்ணாமலை ரயில்வே நிலையமும் அருகில் உள்ள புன்னை மரமும் கண்களில் வந்து நின்றன. மளமளவென மலையேறியதெல்லாம் நினைத்துப் பார்த்தார். பின்னாளில், ரமண பகவானின் சகோதரர் மகன் கணேசன் இதுகுறித்துச் சொல்லும் போது, ‘பகவான் ரமணர் வேகமாக திருவண்ணாமலையின் மலையை ஏறிவிடுவார். அவரளவுக்கு யாராலும் வேகமாக ஏறமுடியாது. பகவான் யோகி ராம்சுரத்குமார், அதேபோல மளமளவென மலையேறுவார்’ என்று தெரிவித்தார்.
ஒரு தவிப்புடனும் முள்ளில் நிற்பது போன்ற துடிப்புடனும் கிராமத்தில் இருந்தார் ராம்சுரத் குன்வர். ‘என்னை ஆட்கொள்ளமாட்டீர்களா’ என்று உள்ளிருந்து கேட்டார். அதாவது, வெளியே குரலில்லாமல், நா அசையாமல், உள்ளுக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்.
காசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான சொந்த ஊரிலிருந்தபடியே, திருவண்ணாமலையில் இருக்கிற பகவான் ரமணரிடம் கேட்டார். ‘என்னை ஆட்கொள்ளுங்கள்’ என்று கேட்டார். ‘என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார். நார்த்ரா எனும் கிராமத்தில் இருந்தபடி , பகவான் ரமணருக்கு தன் எண்ண அலைகளால், கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.
இதுகுறித்தும் கணேசன் தெரிவித்துள்ளார்.
‘இப்படித்தான் ஒருமுறை... பகவான் ரமணருடன் ஆஸ்ரமத்தில் எல்லோரும் இருந்தோம். அந்த சமயத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமார் வடக்கே காசிக்கு அருகில் உள்ள அவருடைய கிராமத்தில் இருந்தார். ஒருநாள்... பகவான் ரமண மகரிஷியுடன் ஆஸ்ரமத்தில் இருந்தபோது, அமைதியாக இருந்தார் பகவான். அவர் ஏதேனும் சொல்லுவாரா என்று எப்போதும் போலவே அப்போதும் காத்திருந்தோம். நீண்ட நேரமாக பகவான் ரமணர் மெளனமாகவே இருந்தார்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த போது, வந்ததற்குப் பிறகு ஒருகட்டத்தில், பகவான் ரமணர் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, பகவான் யோகி ராம்சுரத்குமார் எங்களிடம் சொன்னார்... ‘நான் ஊரில் இருந்தபோது, பகவான் ரமணர் சம்மதித்தார். அதை உணர்ந்தேன்’ என்று தெரிவித்தார்.
எனக்கு சட்டென்று ஒருவிஷயம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை, நாங்கள் எல்லோரும் பகவான் ரமணருடன் உட்கார்ந்திருந்த போது, ஏதும் பேசாமல் அமைதியாக, மெளனமாக இருந்தார் என்று சொன்னேன் அல்லவா. அந்த சமயத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமார், அவருடைய ஊரான, காசிக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்தார்.
அந்த சமயத்தில், பகவான் ரமணர் திடீரென்று ஒரேயொரு வார்த்தை சொன்னார். பிறகு மீண்டும் அமைதியாகிவிட்டார்.
அதாவது, பகவான் ரமணரை நினைத்து, அவரை நோக்கி, ‘என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றாரல்லவா பகவான் யோகி ராம்சுரத்குமார். ‘என்னை ஆட்கொள்ளுங்கள்’ என்று கேட்டார் அல்லவா! அதற்குதான் இங்கே ஆஸ்ரமத்தில் இருந்தபடியே ரமண பகவான் பதில் சொன்னார். அவர் சொன்ன பதிலைத்தான், பகவான் யோகி ராம்சுரத்குமார் அங்கிருந்தபடி கேட்டதாகத் தெரிவித்தார். இதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது என்று விவரித்துள்ளார் கணேசன்.
பகவான் ரமணர் சொன்ன அந்த ஒரு வார்த்தை... என்ன ?
‘சரி!’
இந்த ‘சரி’ எனும் ஒற்றை வார்த்தையை, வடக்கே இருந்தபடி கேட்டுத் தெரிந்துகொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
அதன் பிறகு, ‘சரி’ என்கிற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் பகவான். யார் என்ன கேட்டாலும் யாரிடம் என்ன பேசினாலும் பேச்சினூடே ‘சரி’ ‘சரி’ சரி’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்படிச் சொல்லும்போதெல்லாம் குழந்தையாகிப் போனார் ஞானக்குழந்தை பகவான் யோகி ராம்சுரத்குமார்!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
- ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago