சுவாமி சரணம்! 41: பட்டாபிஷேக திருவாபரணம்!

By வி. ராம்ஜி

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!

வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்தால் போதும். அடுத்தடுத்து நடப்பதெல்லாம் நல்லதாகவே அமைந்துவிடும் என்று பெரியவர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால்தான் பெரியோர் என்று மதிப்புடனும் மரியாதையுடனும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமா? அவர்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் கூட மதிக்கத்தக்கதாகவும் போற்றத்தக்கதாகவும் இன்றைக்கும் இருப்பதை, என்றைக்குமே நினைவில் வைத்துக் கொண்டாடலாம்!

ஆக, வாழ்வில் ஒரேயொரு நல்லது நடந்துவிட்டால், அடுத்தடுத்து நல்லவையே நடக்கும். பந்தள தேசத்து மன்னன் நல்லாட்சி நடத்தினான். மக்களின் துயர் கண்டு கலங்கிப் போனான். அவர்களின் துயர் போக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டான். மக்களை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். தேசமும் தேசநலனுமே பெரிதென வாழ்ந்தான். ஆனால் என்ன... குழந்தை பாக்கியம் இல்லை.

ஒரு பக்கம் மக்களின் மீதான அபிமானம், இன்னொரு பக்கம் இறைவன் மீதான பக்தி என வாழ்ந்து வந்த கடமை மாறாத மன்னனுக்கு கடவுள் நல்லது தராமல் விட்டுவிடுவானா. புராணப் புராதனக் கணக்குகளையெல்லாம் கடந்து இன்றைக்கும் ஐயப்பனைப் பற்றிப் பேசுகிற போதெல்லாம் பந்தளதேசத்தின் மகாராஜாவையும் பேசிக் கொண்டிருக்கிறோம். குழந்தை இல்லையே என்று கலங்கிக் கொண்டிருந்த மன்னனுக்கும் மகாராணிக்கும் அந்தக் கடவுளின் அம்சமே குழந்தையாக வந்ததும் அந்தத் தெய்வக் குழந்தையை சீராட்டி அவர்கள் வளர்த்ததும் பாக்கியம்; பூர்வ ஜென்மப் புண்ணியம். ஏழேழு கோடிக்குமான வரம்.

‘நீ யாரப்பா?’ என்று மணிகண்டனிடம் மன்னனும் மகாராணியும் கேட்க, ’அதை நான் சொல்கிறேன்’ என்று அங்கே வந்தார் அகத்திய முனிவர். இது அந்த மன்னனுக்கும் அரண்மனைக்கும் பந்தள தேசத்துக்கும் கிடைத்த இன்னொரு வரம்.

அகத்தியர் சாமான்யரில்லை. சாதாரணரும் இல்லை. சத்புருஷர். மகா முனிவர். கடும் தவத்தால் சிவனாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர். திருக்கயிலாயத்தில் சிவனாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர். சிவ பார்வதியின் திருமணம். தேவர்களும் முனிவர்களும் பரிவார தெய்வங்களும் பரிகார தேவதைகளும் பூதகணங்களும் ஞானிகளும் யோகிகளும் என பெருங்கூட்டம் திருக்கயிலாயத்தில்!

ஒருபக்கம் கூட்டம் சேர... இன்னொரு பக்கம் சாய... தெற்கே சென்று சமன்படுத்து அகத்தியா... என்று சிவனார் அகத்தியரை அழைத்துச் சொல்ல, முகம் சுருங்கிப் போனார் முனிவர். ‘என் அம்மைக்கும் அப்பனுக்கும் திருமணம். கண்ணாரத் தரிசிக்கலாம் என கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், என்னை தெற்கே அனுப்புகிறீர்களே... இதென்ன சோதனை’ என்று குமுறி அழுதார் அகத்தியர்.

‘கவலை வேண்டாம் முனிவரே. உனக்காக எங்களின் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறோம். கவலைப்படாமல் பூமியைச் சமன்படுத்து’ என்று அனுப்பிவைத்தார். அதன்படியே... சொன்னதன்படியே சிவபார்வதியாக சேர்ந்து, ரிஷபாரூடராக அகத்தியருக்கு திருக்காட்சி தந்தருளினார் என்கிறது புராணம்!

இப்படியொரு பாக்கியம் கிடைக்குமா. அப்பேர்ப்பட்ட பாக்கியம் பெற்ற முனிவர், பந்தள நாட்டின் அரண்மனைக்கு வந்திருக்கிறார் என்றால் அது இன்னும் புண்ணியம் அல்லவா என்று நினைத்து நினைத்துச் சிலிர்த்தார். மகாராணி சகிதமாக அகத்தியரை நமஸ்கரித்தார்.

அகத்திய மாமுனிவர், மகிஷி அரக்கியையும் பிரம்மாவிடம் வாங்கிய வினோத வரத்தையும் சிவனாரும் விஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய மணிகண்ட தெய்வத்தையும் அந்த அவதார நோக்கம் நிறைவேறிய இப்போதைய தருணத்தையும் சொல்லி முடித்தார். பதறித்துடித்து வெடித்துக் கதறினார்கள் மன்னனும் மகாராணியும்! ‘என்னே பாக்கியம்... என்னே பாக்கியம்’ என்று தலைக்கு மேலே கைகூப்பி தடாலென்று விழுந்து மணிகண்ட தெய்வத்தை வணங்கினார்கள்.

‘நீ தெய்வக் குழந்தை என்று நினைத்தேன். ஆனால் தெய்வமே குழந்தையாக அல்லவா அவதரித்திருக்கிறது. இது எங்கள் எந்த ஜென்மத்துப் புண்ணியமோ... என்று நெக்குருகிப் புலம்பினார்கள்.

சற்று நிதானத்துக்கு வந்த மன்னன் ராஜசேகரன், ‘உன் அவதார நோக்கம் முடிந்துவிட்டது என்கிறாய். என் கடமை ஒன்று மீதமுள்ளதே. பந்தள தேசத்துக்கு உன்னை மன்னனாக ஆக்க வேண்டும். உனக்குப் பட்டம் சூட்ட, உடனே ஏற்பாடுகள் செய்கிறேன்’ என்றான். மகாராணியும் அதாவது மணிகண்டனின் தாயாரும் அப்படியே சொன்னாள்.

அதையெல்லாம் கேட்ட மணிகண்டன், ‘என்னை மன்னித்துவிடுங்கள் தந்தையே! மகிஷியை அழிக்கும் நோக்கம்... அந்த அவதார நோக்கம் முடிவடைந்தது. அடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் எப்போதும் உண்டு எனக்கு. இது என் அவதாரத்தின் பலாபலன். இந்த மொத்த பலனும் அகிலத்துக்கும் அகிலத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டாமா. அதுதானே முறை. எனவே, எனக்கென்று ஓரிடம். அங்கே இருந்தபடி அனைத்து ஜீவராசிகளையும் உய்விக்கப் போகிறேன் அன்னையே! நான் அமரப் போகும் இடமே எனக்கான சிம்மாசனம்’ என்றான் பணிவுடன்!

மன்னனும் மகாராணியும் புரிந்து கொண்டார்கள். மணிகண்டா... ஒரேயொரு கோரிக்கை என்று இழுத்தார் ராஜசேகர மகாராஜா. அவரே தொடர்ந்தார்... ‘உன் பட்டாபிஷேகம் எப்போது நடந்தாலும் அதற்கான ஆபரணங்களை தயார் செய்து வைத்திருக்கிறேன். அவற்றை வருடத்துக்கு ஒருநாளேனும் அணிந்து கொண்டு சிம்மாசனத்தில் அமர வேண்டும். இந்தச் சின்ன ஆசையை நிறைவேற்றித் தருவாயா மணிகண்டா’ என்று கேட்டார்.

இனிய ஐயப்ப பக்தர்களே... இன்றைக்கும் அந்த ஆபரணங்களை, ஐயப்ப சுவாமி வருடத்துக்கு ஒருமுறை அணிந்து கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறார். அந்த ஆபரணங்களுக்கு, ஐயன் ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள், மேள வாத்தியங்கள் முழங்க, கேரள இசை வாத்தியங்கள் ஊரையே அதிரவைக்க, அந்த ஆபரணங்களுக்கு பூஜையும் வழிபாடும் செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க, இந்த வைபவம் விமரிசையாக நடைபெறும். இதைப் பார்க்கிறவர்கள் சிலிர்த்துப் போகிறார்கள். அந்த ஆபரணங்கள் கொண்ட பெட்டி... திருவாபாரணப் பெட்டி என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வருகிறது.

பந்தள ராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த ராஜா இன்றைக்கும் இருக்கிறார். ஆபரணப் பெட்டிகள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று கொண்டுவரப்படும் காட்சி சிலிர்க்கச் செய்யும்.

அந்தத் திருவாபாரணப் பெட்டியைத் தரிசிப்பதே பெரும் புண்ணியம். மகா பாக்கியம். ஒவ்வொரு ஐயப்பசாமி மார்களின் இல்லங்களில் சுபிட்சத்தைத் தரக்கூடிய அற்புதம்.

வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையெல்லாம் தரும் திருவாபாரணப் பெட்டியின் தரிசனத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள்!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்