ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறந்தால் தண்டனை உண்டு: குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேச்சு

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: உழைக்க யார் மறுத்தாலும் மறந்தாலும் தண்டனை உண்டு. ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறந்தால் தண்டனை உண்டு என்ற திருவிளையாடலை மதுரைதான் நடத்திக்காட்டியது என்று குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.

மதுரை மருத்துவக்கல்லூரி நுழைவுவாயிலில் உள்ள வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை விழா புதன்கிழமை தொடங்கியது. இவ்விழாவிற்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். டாக்டர் எஸ்.எஸ்.அண்ணாமலை சாமி வரவேற்றார். இதில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஏ.ரத்தினவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். டாக்டர் பி.மீனாம்பாள் நன்றி கூறினார். இதில் டாக்டர்கள் ஆர்.ரவீந்திரன், வி.குமாரவேல், எஸ்.ஜி.பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், யாகசாலை பூஜையை தொடங்கி வைத்து குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: மூலமாகவும் முதலுமாகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். நாம் எந்த செயலைச் செய்யத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவோம். அது நமக்குள்ளே ஊறுகிற ஒரு இயல்பான உணர்வு. காரணம் விநாயகப்பெருமான் எந்தச்செயலை தொடங்கினால் வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பார். ஆனால் இங்கு இருக்கும் விநாயகர் பெயரே வெற்றி விநாயகர். குழந்தைகளுக்கு பிடிக்கும் கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் போன்ற உணவுகள் அனைத்தும் பிள்ளையாருக்கும் பிடிக்கும். பிள்ளைகளுக்கு சாப்பிட வேண்டும் என்பதால் அது பிள்ளையாருக்கு பிடித்த உணவாகும். அழகு எதுவென்றால் ஆடம்பரத் புறத்தோற்றமல்ல. அகத்தோற்றம்தான். பயன்பாடுதான் அழகு என்பதை நிரூபித்தவர் விநாயகப்பெருமான்.

வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதுவார். அப்படி எழுதும்போது எழுதுகோல் இல்லாமல் தேடும்போது தனது வெள்ளைத்தந்தத்தை உடைத்து அதே எழுதுகோலாக பயன்படுத்தினார். அழகான வெள்ளைத்தந்தம் உடைந்து பயன்பாடாயிற்று. இன்று அரசாங்கம் சார்பில் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் நடைபெறுகிறது. ஆனால் அன்றைக்கே சிவபெருமான் வேலைவாய்ப்பு திட்டத்தில் , ஆதரவற்ற ஒரு கிழவிக்காக வேலை பார்த்தார். மன்னனின் ஆணைப்படி கிழவி கூலியாக தந்த பிட்டுக்காக வேலை பார்த்தார். பிட்டு சாப்பிட்டுவிட்டு வேலை பார்க்காமல் வைகைக் கரையில் தென்றல் காற்றில் படுத்துறங்கினார். பாண்டியன் மன்னன் வந்தபோது வேலை செய்யாமல் படுத்துறங்கிய சிவபெருமானை அடித்தான். அவர் மீது அடித்த அடி எல்லா உயிர்கள் மீதும் விழுந்தது.

என்ன காரணம், எல்லோரும் கண்டிப்பாக உழைக்க வேண்டும் என்பதை உணர்த்தத்தான். உழைக்க யார் மறுத்தாலும் மறந்தாலும் தண்டனை உண்டு என்பதை நிரூபிக்கத்தான். ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறந்தால் தண்டனை உண்டு என்ற திருவிளையாடல் மதுரைதான் நடத்திக்காட்டியது. ஒருவர் எல்லோருக்காகவும், எல்லோரும் ஒருவருக்காகவும் என்ற அன்பு வாழ்க்கை, பக்தி வாழ்க்கை சமய வாழ்க்கை மனிதத்தை மேம்படுத்துகிற வாழ்க்கையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்.22) காலை 9.45 மணி அளவில் வெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE