சுவாமி சரணம்! 36: மகிஷி வதம்..!

By வி. ராம்ஜி

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!

ஐயப்ப கோஷங்கள் எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றன. பிள்ளையார் கோயிலோ முருகன் கோயிலோ, அம்மன் கோயிலோ சிவன் கோயிலோ... எங்கு பார்த்தாலும் அங்கே ஏதேனும் ஒரு சந்நிதியில் கூட்டமாய் சுற்றி அமர்ந்து கொண்டு, சரணகோஷங்கள் ஒலிக்க, இருமுடிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள். குடும்பத்தார் சூழ்ந்திருக்க, குருசாமியின் துணையுடன் சபரிமலை யாத்திரைக்குக் கிளம்ப ஆயத்தமாவதன் முக்கியமான விஷயமே இந்த இருமுடிக் கட்டுதல்தான்!

தன் அம்மாவுக்காக, அம்மாவின் தீராத தலைவலி குணமாக வேண்டும் என்பதற்காக, புலியின் பால் வேண்டும் என்று வைத்தியர் சொன்னதற்காக, காட்டுக்குச் சென்று, புலி வேட்டையாடக் கிளம்பினான் மணிகண்டன்.

அப்போது, உன்னுடன் படையையும் அனுப்புகிறேன் எனச் சொன்னார் பந்தளராஜா. அது தகப்பனின் கவலை. வேண்டாம் அப்பா. கூட்டம் சேர்ந்தால், புலிகள் ஓடிவிடும். பிடிக்கமுடியாது. தனியாகவே செல்கிறேன் என்றான் உறுதியுடன்... மணிகண்டன்!

உடனே, மன்னன் ராஜசேகரன், குலதெய்வமான ஈசனை வேண்டினார். சிவனாருக்குப் படைத்த முக்கண் கொண்ட தேங்காயையும் பயணத்தின் போது பசியாறுவதற்காக உணவுப் பொருட்களுமாக ஒருதுணியின் இரண்டுபக்கத்திலுமாக வைத்துக் கட்டி, மணிகண்டனிடம் கொடுத்தார். அந்த இரண்டு பக்கமும் சமமாக இருந்தன. முடிச்சுகள் நன்றாகப் போடப்பட்டிருந்தன. இதைக் கொண்டுதான், இருமுடி என்பதே உருவானதாகச் சொல்வர். அதாவது ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக இருந்தபோது எடுத்துச் சென்றதைப் போலவே இப்போதும் இருமுடி எடுத்துக் கொண்டு ஐயன் ஐயப்பனை நாம் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்!

பந்தள தேசத்தின் எல்லையைக் கடந்தான் மணிகண்டன். வனத்துக்குள் சென்றான். அங்கே... எப்போது வருவார்... எப்போது வருவார்... என ஐயன் ஐயப்ப சுவாமியின் வருகைக்காக, இந்திராதி தேவர்களும் முனிவர்களும் யோகிகளும் சிவபூத கணங்களும் காத்துக் கொண்டிருந்தனர்.

மணிகண்டனைக் கண்டதும் ஓடிவந்து வரவேற்றார்கள். வாழ்த்தினார்கள். வணங்கினார்கள். ஆராதித்தார்கள். பூமாரி பொழிந்தார்கள். எங்கள் துக்கமெல்லாம் இனி அழியப்போகிறது. மகிஷி எனும் அரக்கியின் கொட்டம் ஒழியப் போகிறது எனக் குரலெழுப்பி ஆரவாரித்து ஆனந்தித்தார்கள்.

அந்த வனத்தில் உள்ள மலையின் உச்சிக்கு மணிகண்டனை அழைத்துச் சென்றார்கள். அங்கேயொரு ஆசனம் உண்டுபண்ணினார்கள். அது... சிம்மாசனம். புலியைப் பிடிக்க வந்த மணிகண்டனுக்கு சிம்மாசனம். தங்கம் போல் தகதகப்பு மின்னக் காட்சி தருகிற மணிகண்டன் எனும் பாலகனுக்கான ஆசனம் அது. அந்த மலைதான்... மலையின் உச்சிதான் பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமா. காந்தமலை, பொன்னம்பல மேடு என்றெல்லாம் இன்றைக்கும் போற்றப்படுகிற இந்தப் பகுதி, சபரிமலை வழிபாட்டின் மிக முக்கியமான தலம். இதை தட்சிண கயிலாயம் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். இங்கிருந்துதான் பம்பா நதி உற்பத்தியாகிறது என்கிறார்கள். அதனால் தட்சிண கயிலாயம் என்று போற்றப்படும் இந்த இடத்தில் இருந்து உருவாவதால், பம்பா நதிக்கு தட்சிண கங்கை என்றும் ஓர் பெயர் உண்டு!

நல்லது நடப்பதைப் பின்னாளில்தான் அறிவோம். அதேசமயம், தனக்கு வருகிற கெட்டதை சட்டென்று அறிந்து கொள்வார்கள் துர்குணம் கொண்டவர்கள். தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் யோகிகளும் சேர்ந்து, ஓர் பாலகனை ஆராதிக்கிறார்கள். பூஜிக்கிறார்கள். அவனைக் கொண்டு தன்னை அழிக்க முற்பட்டிருக்கிறார்கள் என அறிந்தாள் மகிஷி அரக்கி. கொந்தளித்துப் போனாள். கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

அந்த மலையின் உச்சியில் என்னை அழிக்கத் திட்டமிடுகிறார்களோ என கொக்கரித்தாள். உடன் இருந்தவர்களையெல்லாம் சரமாரியாகத் திட்டினாள். கண்ணில் தென்பட்டதையெல்லாம் எட்டி உதைத்தாள். ஆங்காரத்தில் கண்மண் தெரியவில்லை அவளுக்கு!

என்னை அழிக்கத் திட்டமா. பாலகன் யாரவன். அவனா என்னைக் கொல்லவந்தவன். யாரடா நீ எனக் கோபமானாள். அதே உக்கிரத்துடன் கிளம்பினாள். எத்தனைப் படைகள் வந்தாலும் என்னை அசைக்கக் கூட முடியாது என விழிகள் உருட்டி கர்ஜித்தாள். இந்தப் பாலகன் என்ன சுண்டைக்காய்.. என எகத்தாளம் காட்டினாள்.

மலைக்கு வந்தாள். மணிகண்டனைப் பார்த்தாள். மலைத்துப் போனாள். அதேசமயம் சுதாரித்துக் கொண்டாள். ‘அடேய் பொடிப்பயலே’ என்று நக்கலடித்தாள். ’இன்றுதான் உன் ஆயுளின் கடைசிநாள். எறும்பை நசுக்குவது போல் உன்னை நசுக்கப் போகிறேன்’ என்று மலையே அதிரும்படிச் சிரித்தாள்.

அங்கே... யுத்தம் தொடங்கியது. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் எப்போதுமே நடந்துகொண்டே இருக்கிற யுத்தம் அது. மகிஷியின் அசுரக் கூட்டம் அசுரத்தனமாய் பாய்ந்தது. தேவர்களின் படையும் பூதகணங்களுமாகச் சேர்ந்து மணிகண்டனுடன் நின்று, தோள் கொடுத்து போரிட்டன.

மகிஷியின் அசுரப்படையில் இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களை மணிகண்டனின் படையினர் அழித்தபடி முன்னேறினர். மகிஷியின் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது.

மகிஷி, மணிகண்டனை நோக்கி பாணங்களை எய்துகொண்டே இருந்தாள். அவளின் அத்தனைப் பாணங்களையும் வியூகங்களையும் தவிடுபொடியாக்கினான் மணிகண்டன். அவளின் தந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை அவனிடம்!

அதேசமயம், மணிகண்டன் விடுத்த ஒவ்வொரு பாணமும் குறி தப்பாமல், மகிஷியின் உடலில் பாய்ந்தன. பாய்ந்த இடத்தில் இருந்து, ரத்தம் பாய்ந்து வந்தபடி இருந்தது. ரத்தம் வெளியேற வெளியேற பலம் குறைந்தது. பலம் குறையக் குறைய, வீரியம் இழந்தாள். வீரியம் இழக்க... தைரியம் காணாமல் போனது. தைரியம் போனதும் அங்கே பயம் முழுவதுமாய் ஆக்கிரமித்தது. வாழ்வில், முதன்முதலாக பயப்பட்டாள். பல்லாயிரக்கணக்கானோரை பயப்பட வைத்தாள். பயத்தின் பிடியில் சிக்குண்டாள். தவித்தாள். மருகினாள். கலங்கினாள். தன் கால்களும் கைகளும் சொன்னது சொன்னபடி கேட்காத நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்தாள். இன்னும் உதறலெடுத்தது அவளுக்கு! நம் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டாள். நாம் அழியப் போகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டாள்.

யாரிவன். இந்தச் சிறுவனுக்கு ஏது இத்தனை பலம். இவன் ஹரிஹரனின் புத்திரனாக, ஹரிஹரனில் இருந்து வந்தவனாக இருக்கவேண்டும். அப்படி வந்திருந்தால்தான் நம்மை இப்படி இறந்துபோக வைக்கமுடியும். ஆக வந்தவன் மகா பலம் பொருந்தியவன். அதனால்தான் பிரம்மாவின் வரமே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த வரத்துக்குத் தக்கபடியே, ஹரியின் மகனாக, ஹரனின் மைந்தனாக வந்திருக்கிறான் இவன். விதிப்படி நடக்கிறதா. விதி முடியப் போகிறதா நமக்கு.

அரண்டு போய் அரனின் மைந்தனைப் பார்த்தாள். ஹரியின் மகனைக் கண்டு நடுநடுங்கிப் போனாள். மணிகண்டன் நெருங்கி வந்தான். அருகில் வந்தான். அவளை உற்றுப் பார்த்தான். அவளின் தலைக் கொம்புகளைப் பிடித்தான். அப்படியே தூக்கினான். சுழற்றினான். சுழற்றி வீசினான். வீசியெறிந்தான். அவள் விழுந்து சிதைந்தாள். சிதைந்து செத்துப் போனாள். அந்த இடம் அழுதா நதி என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது.

வானில் இருந்து பூமழை பொழிந்தது. மணிகண்டனை எல்லா தெய்வசக்திகளும் கொண்டாடின. முனிவர்களும் யோகிகளும் தேவர்பெருமக்களும் ஆனந்தத்தில் திளைத்தனர். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர்.

இவை அனைத்தையும் சிவனாரும் மகாவிஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தனர். மண்ணுலகில் இறங்கினர். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வந்தார். இறங்கினார். தன் ரிஷபத்தை, காளையை ஓரிடத்தில் கட்டிப் போட்டார். அந்த இடமும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது. காளையைக் கட்டிப் போட்ட இடம், காளை கட்டி என்று அழைக்கப்படுகிறது.

செத்துக் கிடந்த அரக்கி மகிஷியில் இருந்து ஓருடல் வெளியே வந்தது. அவள் அரக்கி அல்ல. அழகிய இளம்பெண். அவள் பெயர் லீலாவதி. சாபத்தில் இருந்து விமோசனம் கிடைத்து வெளியே வந்தாள்.

’உங்களால்தான் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றேன்’ என்று மணிகண்டனை, சாஸ்தாவை, ஐயப்ப சுவாமியை விழுந்து நமஸ்கரித்தாள். கைகூப்பியபடி, இனி நான் தங்களுக்கு உரியவள். தங்களுக்குச் சொந்தமானவள். என்னை மணம் செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றாள்.

‘என்னடா இது வம்பாப் போச்சு’ என்று யோசித்தார் மணிகண்ட சுவாமி!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்