ஆன்மிகச் சுற்றுலா: ஒன்பது நரசிம்மர்கள் உறையும் அஹோபிலம்

By பிருந்தா கணேசன்

இயற்கை, புராணம், வரலாறு என்று அனைத்து அம்சங்களுக்கும் சிறப்புப் பெற்ற தலம் அஹோபிலம். நரசிம்மர், நவ நரசிம்மராகத் திகழ்வது இந்த ஓரிடத்தில்தான். மேல் அஹோபிலம், கீழ் அஹோபிலம் என்று இரு நிலைகளாகப் பிரிக்கப்பட்டது. கீழ் அஹோபிலத்திலுள்ள பிரகலாத வரதர் கோயில்தான் கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்று விளங்குகிறது.

இது சின்ன அஹோபிலம் என்றும் திகுல திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்யகசிபுவை அழித்து, பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்த்திய தலம் இது.

மிகுந்த உக்கிரத்துடன் ஜ்வாலா மூர்த்தியாகத் தோற்றமளிக்கும் இறைவன், சாந்த மூர்த்தியாகப் பிரகலாத வரனாகக் காட்சி கொடுக்கும் இடமும் இதுதான். கொடியவனை அழிக்கும் பலி பீடமாக அவரது தொடை மாறினாலும் லக்ஷ்மியை அன்புடன் அமர்த்திக்கொள்ளும் சிம்மாசனமாக மாறியதும் இங்கேதான்.

இரண்ய வதம் நடந்தது இங்கேதான் என்று நம்பப்படுகிறது. அதற்கு அடையாளமாக மலை உச்சியில் உக்கிரஸ்தம்பம் என்ற தூண் உள்ளது. எந்தத் தோற்றம் அரக்கனின் மனதில் கிலியை ஏற்படுத்தியதோ அதே வடிவம் பக்தனை வாரி அணைத்தது.

‘அஹோவீர்யம், அஹோசௌர்யம், அஹோபஹுபராக்ரம, நரசிம்மம் பரம் தெய்வம், அஹோபிலம் அஹோபலம்’ என்ற பிரபத்தி ஸ்லோகம் மூலம் தெரிகிறது. மற்றொரு கூற்றின்படி பிலம் என்றால் குகை. மிகப் பெரியதாக இருந்ததால் அஹோபிலம்.

மலைகளிலும், காடுகளிலும் ஏறி, இறங்கி ஒவ்வொரு கோயிலாகக் காண்பது மனதுக்குத் திருப்தி அளிக்கிறது என்றாலும், எல்லாக் கோயில்களையும் காண்பதற்குச் சாகசமும் உடல் ஆரோக்கியமும் மனத்தின்மையும் அவசியமானது.

மலை மேல் 6 கோயில்களுக்கு மட்டுமே செப்பனிடப்பட்ட பாதைகள் உள்ளன. மற்றவற்றுக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் கிடையாது. பின் நம் கால்கள்தான் நம்மை இட்டுச் செல்லும் ஊர்திகள். கோயில்கள் இரு மலைகளில் பரவியுள்ளன.

கபில நரசிம்மர்

கருடாத்ரி, வேதாத்ரி மலைகளுக்கிடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பாவநாசினி நதிக்கரையில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் எனப்படும் கபில நரசிம்மர் ஆலயம். அதிக சிரமமில்லாமல் தரிசிக்கக்கூடிய இந்த ஆலயம் அடிவாரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கருவறை குறுகலான குகை அமைப்பில் இடம்பெற்றுள்ளது. குகையின் மத்தியில் சுயம்புவாக அஹோபில நரசிம்மர். அருகிலேயே லட்சுமி சமேதராக உற்சவர். உருவத்தில் சிறியவராக இருந்தாலும் உக்கிரம் அதிகம்.

இரண்ய வதம் முடிந்ததும் தேவர்களுக்கும் கருடனுக்கும் இங்கு காட்சி அளித்தார். சீதையை ராமர் தேடியபோது இந்த நரசிம்மரைத் தொழுதார். ஆதி சங்கரர் காபாலிக வழிபாடு செய்பவர்களிடம் தன் கையை இழந்தபோது லட்சுமி நரசிம்ம கரவலம்ப ஸ்தோத்திரம் இயற்றித் தன் கரத்தை மீட்டார். ஒரு சிவலிங்கத்தையும் சுதர்சனச் சக்கரத்தையும் இங்கே நிறுவினார்.

இங்கிருந்து தொடங்குகிறது சாகசப் பயணம்; கரணம் தப்பினால் மரணம். சில இடங்களில் நதி நண்பனைப் போல கூடவே வருகிறது. ஹோ என்ற நீர்வீழ்ச்சி. நனைந்துகொண்டே செல்வது புத்துணர்வு அளிக்கிறது. எட்டு கிலோமீட்டர் பயணம் செய்தால் எதிரே தெரிவது பிரம்மாண்டமான உக்ரஸ்தம்பம். அதை அடைவது பிரம்மப் பிரயத்தனம். இந்த இடத்தில்தான் தூணைப் பிளந்துகொண்டு மூர்த்தி வெளிப்பட்டார்.

ஆனால், சம்ஹாரம் செய்தது வேறு இடம். அதுதான் ஜ்வாலா நரசிம்மரின் இருப்பிடம். கருடாத்ரி, வேதாத்ரி மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் அச்சிலச்சாயா மேரு என்ற குன்றின்மேல் இருப்பது இவரின் ஆலயம்.

பாதை வளைந்து நீண்டு செல்கிறது. மலையை ஒட்டியிருக்கும் குறுகிய விளிம்புப் பாதையில்தான் செல்ல வேண்டும். பவநாசினி ஆறு புரண்டு ஓடுகிறது. மழைக் காலங்களில் இதுவே ஆர்ப்பரிக்கும் அருவி. இயற்கையாக அமைந்திருக்கும் திறந்த வெளி குகையில் குடிகொண்டுள்ளார் பெருமான். மூலவரையும் சேர்த்து மூன்று விக்ரகங்கள். கண்கள் தெறிக்க மிகக் கொடூரமான தோற்றத்துடன் நரசிம்மர். எட்டு கைகள். மடியில் இரண்யனைக் கிடத்தி இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார்.

இடது கைகளில் ஒன்று கால்களை அழுத்துகிறது. இரண்டு கரங்கள் அவன் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளத் தயார் நிலையில் உள்ளன; மேலும் இரண்டு கரங்களில் சங்கு சக்கரங்கள். பாதத்தின் அருகே தொழுதவண்ணம் பிரகலாதன். தீயவற்றை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

நீண்ட காலம் அவருடைய கோபக் கனலைத் தாள முடியாமல் இந்த இடம் தகித்துக்கொண்டிருந்ததாம். அதனால் ஜ்வாலா நரசிம்மர். சிற்பத்தின் வலப்புறம் நரஹரி தூணைப் பிறந்து வெளிப்படும் தோற்றம்.

இடது புறம் இருவருக்குமான போர்க்கோலம். திரும்பும் வழியில் அருகிலேயே நீரூற்றுடன் கூடிய ரத்த குண்டம் என்ற தீர்த்தம். நீரடி மண்ணின் செந்நிறம் இந்தப் பெயரைத் தந்துள்ளது. இதில்தான் நரசிம்மர் வதம் முடிந்த பின் கைகளைக் கழுவிக்கொண்டார் என்கிறது புராணம்.

இங்கிருந்து 3 கிலோமீட்டர் கீழிறங்கினால் வருவது மாலோலரின் ஆலயம். இங்கிருந்து காணும் அபரிமிதமான இயற்கைக் காட்சிகளை நேரில்தான் ரசிக்க வேண்டும். இங்கு பகவான் சௌம்ய ரூபத்துடன் காட்சி தருகிறார். மா என்றால் லட்சுமி; லோலன் என்றால் காதலிப்பவன். இதை நிரூபிக்கும் வகையில் நரசிம்மர் அன்பு ததும்பும் முகத்துடன் மடியில் தேவியுடன் இங்கு காதல் வயப்பட்டு காட்சி தருகிறார்.

பழங்குடி தெய்வம் செஞ்சு லட்சுமி

பவன நதிக்கரையில் குடிகொண்டுள்ளவர் பவன நரசிம்மர். இது க்ஷேத்திர ரத்னம் என்றும் அழைக்கப்படுகிறது. மேல் அஹோபிலத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கருடாத்ரி மழையின் தென்புறம் அமைந்திருக்கும் இந்தக் கோயில் அடர்ந்த காட்டில் மலைவாசிகள் கோயிலாகத் திகழ்கிறது. நவ நரசிம்மர்களில் இங்கு செல்வதுதான் மிகக் கடினமானது. நடந்து சென்றால் வழியில் செஞ்சு மக்களின் குடியிருப்பைக் கடந்து செல்ல வேண்டும். பழங்குடியினரால், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில்தான் இது. அந்த இனத்தவரின் பெண்ணான, மகாலக்ஷ்மியின் அவதாரமுமாகிய செஞ்சு லக்ஷ்மியை நரசிம்மர் காதலித்து மணந்தார்.

வைஷ்ணவர்களின் வாழ்க்கை லட்சியமாக இத்தலம் இருந்தாலும் அடியவர்கள் அனைவரும் காண வேண்டிய கோயில் இது.

01chsrs_lakshminaraநரசிம்மரைத் தேடி

சென்னையிலிருந்து மும்பை மெயிலில் சென்றால் விடியற்காலை கடப்பாவில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் 3 மணி நேரம் பயணித்தால் ஆலகெட்டா என்ற இடத்தை அடையலாம். (எந்த இடத்திலிருந்து வந்தாலும் அங்குதான் இறங்க வேண்டும்). பின் அங்கிருந்து சிறிய பேருந்திலோ மற்ற வாகனங்களிலோ 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அஹோபிலத்தை அரை மணி நேரத்தில் அடையலாம்.

பேருந்து: சென்னையிலிருந்து கர்னூல் வழியாக ஐதராபாத் செல்லும் பேருந்தில் சென்றால் ஆலகெட்டாவில் இறங்கலாம்.

தங்குவதற்கு அவ்வளவாக வசதியில்லை. சென்னையில் உள்ள அஹோபில மடம்தான் அங்கே கோயில்களைப் பராமரிக்கிறது. அவர்களும் அங்கு ஒரு பெரிய விடுதி அமைத்துள்ளார்கள். வசதி வேண்டுவோர்க்கு ஆந்திரா சுற்றுலா ஹரிதா ஹோட்டல் அமைத்துள்ளது. அர்ச்சகர்கள் அனைவரும் தமிழர்களே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்