அடையாளம் என்கிற சொல்லும் செயலும் மனித வாழ்வின் மிகப் பெரிய அடையாளங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அடையாளம் இருக்கும். குட்டையானவர், நெட்டையானவர், கருப்பு சிகப்பு, பணக்காரர் ஏழை, நல்லவர் கெட்டவர், நம்பிக்கையானவர் ஏமாற்றுபவர் என பல அடையாளங்கள். இவற்றுக்கு மத்தியில் நமக்கென ஓர் அடையாளத்துக்காக ஏங்குவோம்; அந்த அடையாளம் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்போம்.
கடவுள் குடிகொண்டிருக்கிற கோயிலையே அடையாளம் காட்டிய கதைகள், அந்தக் கோயிலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் நம் தாத்தாபாட்டிகளும், அப்பா பெரியப்பாக்களும் அக்கம்பக்கத்துக்காரர்களும் கதைகதையாய் சொல்லிக் கேட்டிருப்போம்.
கிராமத்தில், வயலில் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி வேலை செய்யும் போது, திடீரென யாருக்கோ அருள் வரும். ஆடுவார்கள். திமிறுவார்கள். அனைவரும் வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, அவரிடம் ஓடிவருவார்கள். அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அவரை ஆசுவாசப்படுத்த முனைவார்கள்.
அப்போது அருள் வந்து ஆடுகிற நபர், ‘அதோ... அந்த மரத்துக்குக் கீழே ஒரு புற்று இருக்கு. அந்தப் புற்றுக்குள்ளே நான் இருக்கேன். நான் அம்மாடா’ என்று சொல்லி மயங்கி விழுவார்கள்.
அங்கே தோண்டிப் பார்க்க... அழகிய அம்மனின் விக்கிரகம் தென்படும். அல்லது சிவலிங்கம் கிடைக்கும். பிறகு அங்கே கோயில் கட்டுவார்கள். சிலையை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வார்கள். வழிபடுவார்கள். இன்றைக்கும் வழிபட்டுக் கொண்டே இருக்கிறோம்.
இப்படித்தான்... மிகப்பெரிய யானையை சின்னதான அங்குசம் அடக்குவது போல், கடவுளையும் கடவுள் சக்தியையும் யாரோ சாமானியர்கள், ஏதோவொரு தருணத்தில், ஏதோவொரு விதமாக வெளிக்காட்டுவார்கள். இது அந்தச் சாமானியரால் நிகழ்ந்ததா. இல்லை. அது தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. அதுவே சக்தி. அந்தச் சக்தி யாரையோ வைத்துக் கொண்டு நம்மிடம் விளையாடும்.
1854ம் வருடம். அந்த ஊரில் கண்டோபா கோயில் என்பது மிகவும் சாந்நித்தியம். அங்கே வருடந்தோறும் தீமிதித் திருவிழா பிரமாண்டமாக நடைபெறும். அந்த இளைஞன், இந்த ஊருக்கும் இந்தக் கோயிலுக்கும் இந்தக் கோயிலின் தீமிதித் திருவிழாவுக்கும் வருவது இதுவே முதல் முறை.
தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என்பார்களே... அப்படித்தான் இருந்தது தீமிதி விழாவும். ஏகக் கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள். கொண்டாட்டங்கள். குதூகலங்கள். கோலாகலங்கள். சந்தோஷங்கள்.
அப்படியொரு கூட்டத்தில் அந்த இளைஞனும் இருந்தான். ஊரே வழிபாட்டின் முனைப்பில் இருந்தது. அப்போது அங்கே அருள் வந்து தடாலென்று ஆடினாள் ஒரு பெண்.
கோயிலும் பூஜையும் வழிபாடும் வழிபாட்டின் போது இப்படி யாரேனும் அருள் வந்து ஆடுவதும் புதிதல்ல. ஆனாலும் கூட்டத்தில் இருந்து அங்கிருந்தும் இங்கிருந்துமாக ஓடிவந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அருகே வட்டமாக நின்று கொண்டார்கள். அந்த இளைஞனும் நின்றிருந்தான்.
அருள் ஆடிய அந்தப் பெண், கூட்டத்தில் இருந்த அந்த இளைஞனை உற்றுப் பார்த்தாள். வெறிக்கப் பார்த்தாள். சட்டென்று கைகொட்டிச் சிரித்தாள். இடியெனச் சிரித்தாள். சிரித்துக் கொண்டே அவனைக் கும்பிட்டாள். திரும்பவும் உற்றுப் பார்த்தாள். மீண்டும் கைகொட்டிச் சிரித்தாள். ஆனந்தமாகச் சிரித்தாள். இந்த முறை சாஷ்டாங்கமாக விழுந்து அந்த இளைஞனைப் பார்த்து, அவன் இருக்குமிடம் நோக்கி நமஸ்கரித்தாள். எழுந்து, நிமிர்ந்தவள்... அந்த இளைஞனை கைகாட்டினாள்.
அவள் சுட்டிக்காட்டிய இடம் பார்த்தார்கள் பலரும். அந்த இளைஞனைக் கண்டார்கள். அவனுக்கு 16 வயதுதான் இருக்கும். முகத்தில் அப்படியொரு தேஜஸ். கண்களில் அப்படியொரு தீட்சண்யம். யாரிவன் என்பது போல் எல்லோரும் பார்த்தார்கள். ஏன் இவனைக் கைகாட்டுகிறாள் என்று யோசித்தார்கள். யோசித்தபடியே பார்த்தார்கள்.
‘நீதானே... நீதானே...’ என்றாள் அந்த இளைஞனைப் பார்த்து! ‘இது யார் தெரியுதா...’ என்று அனைவரையும் கேட்டாள். ‘போன ஜென்மத்துல எங்க ஊரு பாதாள குகைல, பாதாள அறைல நீதானே தவமிருந்தே. பன்னெண்டு வருஷம் தவமிருந்தது நீதானே...’ என்றாள் அருளாடிக் கொண்டே!
கூட்டம் அதிசயித்தது. இன்னும் ஓடிவந்து கூடியது. ‘யாருப்பா... யாருப்பா...’ என்று எட்டிப் பார்த்தது. எல்லோரும் அவனை, அந்த இளைஞனை, 16 வயது இளைஞனை, தேஜஸ் ஒளி வீசிய வாலிபனை மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அனைவரும் நமஸ்கரித்தார்கள். ஏதோவொரு தூண்டுதல்... அப்படி அவர்களைச் செய்ய வைத்தது.
அந்தப் பெண் மீண்டும் ஆடினாள். ஆடிக் கொண்டே இருந்தாள். ‘நீ சாமிடா. எங்களையும் ஊரையும் காக்க வந்த சாமிடா. எங்களை விட்டுட்டுப் போயிடாதே. இந்த ஊரை விட்டுட்டுப் போயிடாதே. எங்களையும் ஊரையும் நீதான் காப்பாத்தணும். நீதான் எங்களுக்காக வந்திருக்கிற சாமி’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் நமஸ்கரித்தாள்.
இப்படிச் சொல்வதற்கு காரணம் இருந்தது. அந்த ஊரில், மணி, மாள் என்று இரண்டுபேர். அந்த இரண்டுபேரும் நூறு ஆட்களுக்குச் சமம். ஆயிரம் மிருகங்களுக்கு இணையானவர்கள். மிருக குணத்துடன் இருப்பவர்கள். அரக்க சிந்தனையுடன் வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஊரில் அவர்களுடைய அட்டூழியத்தைச் சொல்லி மாளவே இல்லை. அவர்கள் கொடுத்து வரும் தொல்லையிலிருந்தும் துயரத்தில் இருந்தும் மக்கள் மீளவே இல்லை. மீளவே முடியவில்லை.
ஒருவருக்கொருவர் சொல்லிப் புலம்பினார்கள். கண்ணீர் விட்டார்கள். கதறினார்கள். அழுதார்கள். அந்த அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாது தவித்தார்கள். மருகினார்கள். நெஞ்சிலடித்துக் கொண்டு துடித்துப் போனார்கள்.
ஒருநாள்... எல்லோரும் சேர்ந்து, பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றார்கள். ‘எம் சிவனே... எம் சிவனே...’ என்று கைகூப்பிக் கதறினார்கள். ‘எங்களைக் காப்பாத்து’ என்று வேண்டினார்கள்.
அந்த மக்களின் துயர் துடைக்க, அசுரர்களை அழிக்க, சிவபெருமான் உக்கிரமானதொரு வடிவத்தை அனுப்பி வைத்தார். அந்த உக்கிர தெய்வம்தான் கண்டோபா. இந்தக் கண்டோபா தெய்வத்துக்குத்தான் இன்றைக்கும் படையலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் பக்தர்கள். நன்றி சொல்லுகிற விழாவாகக் கொண்டாடுகிறார்கள் ஊர்மக்கள்.
அந்த ஊரையும் அங்கே விழாவுக்கு வந்த இளைஞனையும் சொல்லவே இல்லையே..!
அந்த ஊரைச் சொன்னால்... அந்த இளைஞனைச் சொல்லிப் பரவசமாவீர்கள் நீங்கள்.
‘எங்களையும் ஊரையும் காக்க வந்த சாமி நீ. இந்த ஊரையும் எங்களையும் நீதான் காப்பாத்தணும். நீ சாமிடா...’ என்று அந்தப் பெண் இளைஞனைப் பார்த்துச் சொன்னாள் அல்லவா.
அந்த ஊர்... இன்றைக்கு அற்புதமான ஊராகிவிட்டது. அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தை, அடுத்த ஊருக்கோ அந்த மாவட்டத்துக்கோ தெரியாமல் இருந்த காலமும் உண்டு.
ஆனால் இன்றைக்கு உலகம் முழுக்க அந்த ஊர் பரிச்சயம். ஒருமுறையேனும் அந்த ஊர்ப் பெயரைச் சொன்னாலே புண்ணியம். உலகின் எந்த மூலையில் இருந்தெல்லாமோ அங்கு தினமும் வருகிறார்கள்.
இதோ... இப்போது இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட... பல்லாயிரக்கணக்கான மக்கள், அந்த ஊரில் தங்கள் காலடியை வைத்திருப்பார்கள். அந்த பூமி... இன்றைக்குப் புண்ணிய பூமி.
அந்த ஊர்... ஷீர்டி.
ஜெய் சாய் ராம்!
-அருள்வார்
தொடர்புக்கு: ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago