பிப்ரவரி 13 சிவராத்திரி: வேடனுக்கு அருளிய சிவபெருமான்

By வி.சுந்தர்ராஜ்

வநிதி என்னும் முனிவர் திருவைக்காவூர் வில்வ வனவேசுவரர் கோயிலில் தங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள், வேடன் ஒருவன், மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தான். அந்த மான் கோயிலுக்குள் புகுந்து, அங்கிருந்த முனிவரிடம் தஞ்சமடைந்தது. முனிவரும் அந்த மானுக்கு ஆதரவளித்தார். ஆனால், வேடன் முனிவரைத் தாக்க ஆயத்தமானான். உடனே சிவபெருமான் புலி உருவெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்திலேறிக் கொண்டான்.

புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே தங்கியிருந்தான். பசியும் பயமும் அவனை வாட்டியது. இரவும் வந்தது. களைப்பு மிகுதியால் உறக்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி வேடன் வில்வ மரத்தில் இருந்த ஒவ்வொரு இலையாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருக்க, அவை புலி வடிவிலிருந்து சிவபெருமான் மேலே விழுந்துகொண்டிருந்தன.

அன்று மகாசிவராத்திரி நாள், ஊண் உறக்கமின்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமலேயே கிடைத்தது. அதனால் இறைவன் காட்சியளித்து வேடனுக்கு மோட்சமளித்தார்.

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டன; அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுகின்றன. இதனால் இத்தலத்துக்கு வில்வாரண்யம் என்றும், சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

வில்வ வடிவில் வேதங்கள்

வில்வவனேசுவரர் கோயில் திருவைக்காவூரின் மத்தியில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் முகப்பு ஆடம்பரமற்று சிறு மண்டபமாக அமைந்துள்ளது. கோயிலின் வாசல் தென்புறத்தில் கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் கோயிலிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரவேற்பது போன்று நந்தி தேவர் கிழக்கு நோக்கியுள்ளார்.

கோயிலின் மூலவரான வில்வ வனேசுவரரை நாம் தரிசித்துவிட்டு தென்பிராகாரத்தில் பிரம்மதீர்த்தமாகிய கிணற்றையும் அதன்பின் தல விருட்சமான வில்வ மரங்களையும் தரிசிக்கலாம். வேதங்கள், வில்வ வடிவில் நின்று தவம் புரிவதாகத் தலபுராணம் கூறுகிறது. வில்வம், மகாசிவராத்திரி தினத்தின் சிறப்பை இத்தலத்தில் விளக்க காரணமாக இருந்தது. வேடனுக்குத் தஞ்சமளித்துப் பின் மோட்சமும் வாங்கித் தந்த இடம் இது. இம்மரத்தை வணங்கி வில்வ மரத்தின் மேல்புறத்தில், சப்த கன்னிகள் தவம்செய்யும் காட்சியைக் கண்டு, மேற்குப் பிராகாரத்தில் தெற்கு முனையில் வல்லப விநாயகரை வழிபடலாம்.

விஷ்ணுவும் பிரம்மாவும் துவார பாலகர்கள்

மேற்குப் பிராகாரத்தின் நடு நாயகமாகத் திகழ்பவர் ஆறுமுகப்பெருமான். இவரை வணங்கிவிட்டு வடக்கு பிராகாரத்துக்குச் சென்றால் ஸ்ரீ சர்வஜன ரட்சகி அம்பாளின் தனி ஆலயத்தை அடையலாம். மிக அழகிய தோற்றத்தைக் கொண்ட இந்த அம்பாள் ‘வளைக்கை நாயகி’ என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள். இந்தத் தலத்தில் வாசற்படியின் இரு புறங்களிலும் விஷ்ணுவும் பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவார பாலகர்களாக நிற்பதைக் காணலாம். மேலும், வடபுறத்தில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

கோயிலின் எதிரில் உள்ள திருக்குளம் எம தேவனாலும், கோயிலின் அக்னி மூலையில் உள்ள கிணறு அக்னி பகவானாலும், தென் பிராகார கீழக்கோடியிலுள்ள கிணறு பிரம்மனாலும் தோற்றுவிக்கப்பட்டதால் முறையே எம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படுகின்றன.

இத்தலத்தில் பெருவிழா என்பது மாசி மாதத்தில் மகாசிவராத்திரி விழாதான். இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும். திருவைக்காவூரின் தென்பகுதியில் மண்ணியாறும் வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆறும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரண்டு ஆறுகளுக்கு மத்தியில் உள்ள இந்தத் தலம் சிவராத்திரிக்குச் சிறப்பு பெற்ற தலமாகும்.

மகாசிவராத்திரி சிறப்பு விழா

பிப்ரவரி 13 அன்று மகாசிவராத்திரி விழா இந்தக் கோயிலில் இரவு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் அண்டக்குடி கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவைக்காவூர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்