ஒட்டன்சத்திரத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்

By செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரம்: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இங்கு குழந்தை வடிவில் கையில் வேலுடன் முருகன் அருள்பாலிக்கிறார். வேண்டுதல்கள் நிறைவேற இங்கு குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தைப் பூசத் திருவிழாவின் போது பாத யாத்திரையாக வரும் லட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட்ட பிறகே பழநிக்கு செல்கின்றனர்.

இக்கோயிலில் கடந்த 1999-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர், கோயில் கோபுரங்கள், கட்டிடங்கள் சிதிலமடைந்திருந்தன. கும்பாபிஷேகம் நடந்து 24 ஆண்டுகள் ஆனதால், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்.13-ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான வேள்வி பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால வேள்வி தொடங்கியது.

தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலை சுற்றி வந்தனர். அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், திண்டுக்கல் தொகுதி எம்பி வேலுச்சாமி ஆகியோர் கொடியசைக்க, காலை 9 மணிக்கு பழநி தேவஸ்தான ஸ்தவராஜ பண்டிதர் அமிர்தலிங்க குருக்கள் தலைமையில், மூலவர் கோபுரம் மற்றும் அனைத்து சந்நிதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டனர். மூலவர் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில், இணை ஆணையர் ( பொ ) பாரதி, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு முருகன் படம், பஞ்சாமிர்தம், லட்டு, விபூதி, புனிதநீர் அடங்கிய பிரசாதப் பை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE