குருவே... யோகி ராமா! 54: சூர்ய வம்சம்

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்

ராமநாமத்தின் மகிமை அளவிட முடியாதது. அதன் மகிமையும் ராமநாமத்தைச் சொல்லுவதால் உண்டான பலன்களும் எல்லையே இல்லாதவை. பகவான் ராமபிரானின் திருநாமத்திற்கு உண்டான மகிமையை நாம் உணருவதற்காகவே, நமக்கு உணர்த்துவதற்காகவே வந்தவர்கள்... சுவாமி போதேந்திராள். பகவான் யோகி ராம்சுரத்குமார்!

அதனால்தானோ என்னவோ... ‘விசிறிமட்டை சாமியாரை அழைச்சிண்டு, கோவிந்தபுரம் போ. போதேந்திராள் சுவாமி அதிஷ்டானத்துக்குக் கூட்டிண்டு போ’ என்று சந்திரமெளலி எனும் பக்தரிடம் காஞ்சி மகா பெரியவா சொன்னார்.

சந்திரமெளலி என்பவர், சங்கர மடத்துடனும் தொடர்பு கொண்டவர். திருவண்ணாமலைக்கு வந்தது முதல், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அன்பையும் பெற்றிருந்தார்.

இந்த விஷயங்களையெல்லாம் பகவான் யோகி ராம்சுரத்குமாரிடம் சொல்ல... சில நிமிடங்கள் கண்மூடி தியானித்தபடியே இருந்தார். பிறகு ’பரமாச்சார்யாள் எங்கே இருக்கிறாரோ அதுவே எனக்கு கோவிந்தபுரம்’ என்றார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

இந்தச் சம்பவம் குறித்து மெய்சிலிர்க்க விவரித்திருக்கிறார் ரா.கணபதி அண்ணா.

டாக்ஸியில் அழைத்துப் போகச் சொல்லியிருந்தார் மகா பெரியவா. மேலும் அதற்குப் பணமும் கொடுத்துவிட்டிருந்தார்.

அதன்படியே சந்திரமெளலி ஏற்பாடு செய்த டாக்ஸியும் வந்து வாசலில் நின்றது.

சந்திரமெளலி அமைதியாக இருந்தார்.

பகவான் யோகி ராம்சுரத்குமார் எழுந்தார். விறுவிறுவென நடந்து, காரில் ஏறிக்கொண்டார். சந்திரமெளலியும் ஓடிவந்து ஏறினார். டிரைவரிடம்... ‘காஞ்சிபுரம் போ’ என்றார்.

அதிர்ந்து போனார் சந்திரமெளலி. என்ன செய்வதென்று தெரியவில்லை. சொல்லவும் முடியவில்லை. தவித்து மருகிய நிலையில் இருந்தார்.

மாலை நான்கரை மணி. காஞ்சியின் ஸ்ரீமடத்துக்கு வந்து நின்றது டாக்ஸி.

பகவான் யோகி ராம்சுரத்குமார் காரை விட்டு இறங்கினார். யோகியாரை சரிவரப் புரியாதவர்கள், தெரியாதவர்கள், மடத்து ஊழியர்கள் சிலர் ஓடிவந்து, வாசலில் மறித்தார்கள். ‘பெரியவாளையெல்லாம் இப்போ பாக்கமுடியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

அவர்கள் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள்ளாக... அங்கே... மகா பெரியவா, பகவான் யோகியாருக்கு எதிரே வந்து நின்றார்.

யோகி விழுந்து வணங்கினார். விழுந்தவர் எழுந்தார்.

எதிர்ப்பு உணர்ச்சியே இல்லாத இதய இசைவு கொண்ட இரு மஹா புருஷர்கள் எதிரெதிரே நின்றனர். இருவரும் இரு கரங்களையும் உயர்த்தினர். உள்ளத்தால் பிணைந்த இருவருமே உள்ளங்கைகளை விரித்து அப்படியே நின்றனர். ஒருவரது இரு கரங்களும் எதிர் எதிரே மற்றவரது இரு கரங்களும் என சிலையென நின்றனர்.

கனத்த மௌனம். கண்கள் வழியே பேசிக்கொள்வது போல், அவர்கள் கரங்களின் வாயிலாகப் பேசிக்கொண்டார்கள் போலும்! அவர்களது உட்சாரம் கரங்களின் வழி பெருகி கங்கையும் யமுனையுமாக கலந்து உரையாடினவோ... என்கிறார் ரா.கணபதி அண்ணா.

சங்கரனின் சேகரத்தில் உள்ள சந்திரன் பெருக்கும் அமுதுதான் கங்கை. யமுனையோ சூரிய புத்திரி- சூரிய தேஜஸில் இருந்து பெருகியவள். ஞானக் கதிரொளியும் கருணை நிலவொளியும் கலந்தே மக்களுக்கு அபய வரத ஹஸ்தங்களின் உரையாடல் தொடர்ந்தது.

பெரியவாள் திரும்பி ஸ்ரீ மடத்தின் உட்புறம் நடந்தார்.

யோகி திரும்பி ஸ்ரீ மடத்தின் வாயிலுக்கு நடந்தார்.

‘அவர் ஸூர்ய வம்சம்’ என்று காஞ்சி மகா பெரியவா... அருகில் இருந்தவர்களிடம் சொன்னார்.

அருண ஜோதியாய் திருவண்ணாமலைக்கு வந்த பகவான் யோகி ராம்சுரத்குமாரை, சூர்யவம்சம் என்று உணர்ந்து போற்றினார் காஞ்சி மகாபெரியவா!

சூரிய சந்திரர்கள் உள்ளவரை... காஞ்சி மகானின் புகழும் அருளும் இருக்கும். அதேபோல், காஞ்சி மகாபெரியவா அருளிக்காட்டிய பகவான் யோகி ராம்சுரத்குமாரின் புகழும் பேரருளும் இருக்கும்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

-ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்