கிறிஸ்துவின் தானியங்கள்: இறைமகனின் பாலைவன நாட்கள்

By அனிதா அசிசி

நே

ற்று விபூதிப் புதன். தவக்காலத்தின் முதல் நாள். கடவுளின் அருளைப் பெறவும் அவருடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ளவும் அரிய வாய்ப்பை வழங்கும் காலமே தவக்காலம். “நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்” எனும் விவிலியத்தின் தொடக்க வாசகங்களை எடுத்துக் கூறி நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளத்தை வரைந்து இறையாசி வழங்கும் வழிபாட்டுடன் தவக்காலத்தின் முதல் நாளாக விபூதி புதன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விபூதி புதனுக்கு முன்வரும் திங்கள்கிழமையைத் தூய திங்கள் என்றழைத்து அன்றே தவக் காலத்துக்கான தயாரிப்பைத் தொடங்கிவிடுகிறார்கள். கிறிஸ்தவம் என்றில்லாமல் இந்தியப் பண்பாட்டு மரபில் சைவ, வைணவ, சமண, பௌத்த, பகாய் சமயங்களில் மட்டுமின்றி உலகின் தொன்மையான யூத மரபிலும் அதன் தொடர்ச்சியாக உருவான கிறிஸ்தவ, இஸ்லாமிய மரபிலும் நோன்பிருந்து உடலையும் மனதையும் தயாரிக்கும் தவமுயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சோதனைக்காரனின் தோல்வி

கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, விபூதி புதன் முதல் உயிர்ப்பு ஞாயிறு வரையிலான 46 நாட்களையும் இயேசுவை முன்னுதாரணமாகக் கொண்டு தங்கள் வாழ்வைக் கடவுளுக்கு உகந்ததாக மாற்றும் தவமுயற்சியாகப் பின்பற்றிவருகிறார்கள் கிறிஸ்தவர்கள். இயேசு தனது ஆன்மிக வாழ்வைத் தொடங்கும்முன் அவரது 30-வது வயதில் யோர்தான் நதியில் யோவானிடம் ஞானஸ்தானம் பெறுகிறார். அதன் பின்னர் கடவுளுடைய சக்தி அவரை யூதேயா பாலைவனத்துக்கு வழிநடத்திச் செல்கிறது.

பாலைநிலத்தில் இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிகிறார். தன்னைக் கடவுள் இந்த உலகுக்கு அனுப்பிவைத்த காரணத்தை மனதில் ஏந்தி அவர் தியானித்தார். இந்தப் புவி வாழ்வில் அவர் எதிர்கொள்ளவிருந்த எல்லாக் காரியங்களுக்காகவும் அவர் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார்.

அந்த 40 நாட்களும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. 40-ம் நாள் முடிவில் பசி அவரை வாட்டியெடுத்தது. 40 நாட்கள் தவத்தின் இறுதிக் கட்டத்திலாவது அவரைத் தோல்வி அடையச் செய்வதற்காக சோதனைக்காரனாகிய சாத்தான் அங்கே வருகிறான். அப்போது இயேசுவிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். அதற்கு இயேசு, உணவால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனிதன் உயிர் வாழ்வான் என எழுதப்பட்டிருக்கிறதே என்று பதில் கூறினார்.

பாலை நிலத்தில் பனியைப் போல் மன்னா உணவைப் பொழியச் செய்த கடவுளின் மகனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தி இருக்கிறது. எனினும், தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக அதைப் பயன்படுத்துவது தவறு என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால் சாத்தான் சொன்னதைச் செய்ய அவர் மறுத்துவிடுகிறார்.

தந்தையைச் சோதிப்பது தவறு

சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “ ‘உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.

இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான். சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே”என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.

மீண்டும் தரப்படும் வாய்ப்பு

இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளிலிருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. சாத்தானைத் தீய குணங்களின் தூண்டுதல் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், இயேசுவின் பாலைவன தவவாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து சாத்தான் என்பவன் நம் கண்களுக்குத் தெரியாத கடவுளின் படைப்பைக் கெடுக்கிற ஒருவன் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்ல; பூமியில் உள்ள அதிகார மையங்களில் பெரும்பான்மையானவை சாத்தானின் கைகளில் இயங்குகின்றன என்பதையும் அவற்றை அவன் எப்படி ஆட்டிப்படைக்கிறான் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். உலக ராஜ்ஜியங்களில் பல அவன் கையில் இல்லை என்றால், அவன் எப்படி இயேசுவுக்கு இவற்றைத் தருவதாகச் சொல்லியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.

சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.

உடலும் மனமும் ஒரே நிலையில் செயல்பட ஒன்றித்து வாழ்வதற்காக இறைதுணை வேண்டிப் பிரார்த்தனை செய்தல், வயிற்றுக்கு உணவு அளிக்காமல் காயவிட்டு தவம் செய்தல், தேவையற்ற நுகர்வுத் தவிர்ப்புகளைச் செய்தல், நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்தல் என்பன தவக்காலத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்