திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பழமை வாய்ந்த குடவரை கோயிலான கருநெல்லிநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகாசி - விருதுநகர் சாலையில் திருத்தங்கல்லில் உள்ள மலை குன்றில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோயில், பழமையான கருநெல்லிநாதர் கோயில், முருகன் கோயில் ஆகியவை உள்ளன. கருநெல்லிநாதர் கோயிலில் 2005-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 7-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை மீனாட்சி அம்பாள் சமேத கருநெல்லிநாதர் கோயில் கருவறை விமானம் மற்றும் பரிவார தெய்வங்கள் சந்நிதி விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு கருநெல்லிநாதர், மீனாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

நேற்று மாலை மீனாட்சி அம்பாள் சமேத கருநெல்லிநாதருக்கு திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. இரவு மீனாட்சி அம்பாள் சமேத கருநெல்லிநாதர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தேவி, தக்கார் சுபாஷினி ஆகியோர் செய்தி ருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE