பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்
குரு என்பவர் எப்போதும் எல்லோருக்கும் அவசியம். குருவைக் கொண்டாடிக் கொண்டே இருக்கவேண்டும். ஆச்சார்யர் என்பவர், கடவுளுக்கு நிகரானவர். அவரை, குருவை ஆராதித்துக் கொண்டே இருக்கவேண்டும். ஆராதனை செய்யச் செய்ய, குருவின் பேரருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில், அவரும் ஆச்சார்யராகி விடுகிறார் என்கிறது தர்மசாஸ்திரம்.
பகவான் யோகி ராம்சுரத்குமார், தன்னுடைய குருநாதர்களாக பாண்டிச்சேரி சுவாமி அரவிந்தரையும் பகவான் ரமண மகரிஷியையும் பப்பா ராம்தாஸ் சுவாமிகளையும் சொல்லியிருக்கிறார். இவர்களே என் குருமார்கள் என்று போற்றிக் கொண்டாடியிருக்கிறார். இவர்களே என் தந்தைகள் என்று வணங்கியிருக்கிறார்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், அந்த தரிசன ஹாலில், மூவரின் திருவுருவப் படங்களும் இன்றைக்கும் இருக்கின்றன. பகவான் யோகி ராம்சுரத்குமார், மூன்று குருமார்களின் புகைப்படங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து, எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று அவர் சொன்னபடியே வைக்கப்பட்டிருக்கின்றன.
1952ம் வருடத்தில் இருந்து 1959ம் வருடங்கள் வரை, எங்கெல்லாமோ சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலைகளில் தியானத்தில் ஆழ்ந்திருந்த பகவான் யோகி ராம்சுரத்குமார், தியான நிலையில் இருக்கும் போது மட்டுமின்றி, மற்ற எல்லா நேரங்களிலும் கூட, மோன நிலையிலேயே இருந்தார். திருவண்ணாமலைக்கு வந்த பிறகுதான், பழைய நிலைக்கு வந்தார் என்கிறார்கள் பக்தர்கள்.
பகவான் ரமணரின் சகோதரரின் மகனான கணேசன் என்பவரிடம், சுந்தரேச ஐயர், ‘இவர் எப்போது வந்தாலும் சாப்பாடு போடவேண்டும். இவர் பைத்தியம் அல்ல. இவர் யோகி. இவர் பெயர் பகவான் யோகி ராம்சுரத்குமார்’ என்று சொன்னார். இந்த சுந்தரேச ஐயர் என்பவர்தான், முதன்முதலாக ‘பகவான் யோகி ராம்சுரத்குமார்’ என்று அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கினார் என்று சொல்கிறார்கள்.
பிறகு, பகவான் யோகி ராம்சுரத்குமார் எப்போது ரமணாஸ்ரமத்துக்கு வந்தாலும், அவருக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கணேசன். ஒருமுறை கணேசனிடம், ‘ரமணாஸ்ரமத்தில், முன்பெல்லாம் தமிழ்ப்பாராயணம் சொல்லப்பட்டு வந்தது. இப்போது பாடப்படுவதில்லை. திரும்ப அதுபோல் பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்’ என்றார். இதைப் பார்க்கிற போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஒருகட்டத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்ப்பது குறைந்திருந்தது. இதுகுறித்து கணேசன் கூறும்போது, ‘எப்போதாவதுதான் பார்க்கும்படி இருந்தது. பகவான் யோகி ராம்சுரத்குமார், ரயிலடியில் புன்னைமரத்தடியில் இருப்பார். நான் மதுரைக்குச் செல்ல பஸ் ஸ்டாண்ட் வந்தால், திடீரென்று அங்கே வந்து எதிரில் நிற்பார். ‘இந்தா... பூ... ஒரு ரூபா கொடு’ என்பார். நான் பூவை வாங்கிக் கொண்டு ஒருரூபாயைத் தருவேன். பிறகு பல மாதங்கள் கழித்துதான் பார்ப்பேன்’ என்கிறார்.
இப்படித்தான் ஒருமுறை திருக்கார்த்திகை தேரோட்டம். தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என்பார்களே. இங்கே திருவண்ணாமலையில், உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ஆஸ்ரமத்தை நிர்வகிக்க கணேசனுடன் அவரின் சகோதரர் மணியும் அவர் மனைவியும் உதவிக்கு வந்திருந்தார்கள். மேலும் கணேசனின் தோழியான அனுராதா என்பவரும் ஆஸ்ரமத்தில் இருந்தார்.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து, ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே வந்து, சுவாமி தேரில் பவனி வரும் காட்சியை கண்ணாரத் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது எவருமே எதிர்பார்க்காத வண்ணம், கணேசனுக்கு எதிரே வந்து நின்றார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
ஒரு கையில் சிரட்டை, இன்னொரு கையில் விசிறி. தோளில் ஏகப்பட்ட சால்வைகள். அனுராதாவும் மற்றவர்களும் பகவானைப் பார்த்து மிரண்டுதான் போனார்கள். அங்கிருந்து நகருவதிலேயே இருந்தார்கள். ‘என்ன கணேசன். வரச்சொல்லி ஆள் அனுப்பினேன். தமிழ்ப்பாராயணம் என்னாச்சு/ எதுவுமே இல்லியே...’ என்றார் பகவான்.
‘அப்போது தமிழ்ப் பாராயணம் பாடப்பட்டது. அவர்களில் பலர் இப்போது இல்லை. அதனால் யாருக்கும் அந்தப் பாடல்கள் தெரியவில்லை. எப்படியாவது அதைத் தொகுக்கும் முயற்சிகள் செய்யவேண்டும்’ என்றார் கணேசன்.
சட்டென்று அனுராதாவின் பக்கம் கையைக் காட்டிய பகவான் யோகி ராம்சுரத்குமார், ‘இவங்ககிட்ட கொடு. அதுக்காகத்தான் வந்திருக்காங்க’ என்று அந்தப் பெண்மணியைப் பார்க்காமலேயே கணேசனைப் பார்த்துக் கொண்டே சொன்னார். உடனே கணேசன், அனுராதாவைப் பார்த்தார். அவரும் மலங்கமலங்க விழித்தார். இரண்டுபேரும் பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்த்தார்கள். ஆனால் அவர் அங்கே இல்லை. அந்தக் கூட்டத்தில் அவ்வளவு சீக்கிரம் எப்படிக் கடந்தார் என்றெல்லாம் தெரியாமல் குழம்பினார்கள்.
யாரிவர்? திடீரென்று வந்தார். ஏதேதோ கேட்டார். என்னைக் காட்டி, அதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு, தடாலென்று காணாமலும் போனார். என்னைப் பற்றி என்ன தெரியும் இவருக்கு? சரி... இவரைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்து கொள்ளவேண்டும் என ஆவல் கொண்டார்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து கணேசன் சொல்லச் சொல்ல, ஆச்சரியத்துடனும் மலர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்தார் அனுராதா.
மகான்கள் அப்படித்தான். அவ்விதம்தான். அவர்களைப் பற்றி நினைக்க நினைக்க, சொல்லச் சொல்ல, பேசப் பேச மனதிலும் முகத்திலும் ஓர் மலர்ச்சி வந்து உட்கார்ந்து கொள்ளும். தன் கருணையையும் அருளையும் காட்டத் தொடங்கிவிடுவார்கள் மகான்கள்.
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அருள்... அங்கே அனுராதா எனும் பெண்மணிக்குப் பூரணமாகக் கிடைத்தது.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
- ராம் ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago