பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்
அடுத்தவரின் துன்பத்தை, தன் துன்பமாகக் கருதும் குணம்தான், மனித குணங்களிலெல்லாம் உயர்ந்தது. சொல்லப்போனால், இதுவே மனித குணம். இன்னொருவரின் வேதனையும் துக்கமும் தமக்கானதாகப் பார்க்கிற புத்தி, மிகப் பெரிய விசாலமான மனசின் விலாசம். துரதிர்ஷ்டவசமாக, இது பலருக்கு இல்லை என்பதே உண்மை.
அதேநேரம், அடுத்தவர் பெயர் என்ன, அவர் ஜாதி என்ன, நல்லவரா கெட்டவரா என்று எதுவுமே பார்க்காமல், பிறரின் துக்கங்களையும் கவலைகளையும் எவர் போக்குகிறாரோ அவரே மகான் என்று போற்றப்படுகிறார். ஞானி என்று கொண்டாடப்படுகிறார். இந்த உலகில், நம்மைக் காப்பாற்றவும் காபந்து செய்து வழிநடத்தவும் நம் சோகங்களையெல்லாம் போக்கி அருளவும் என வாழ்ந்தவர்தான் ஷீர்டி சாயிபாபா.
இன்றைக்கும் அவர் நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நமக்கும் நம் சந்ததிக்குமான மிகப்பெரிய ஆசீர்வாதம். வரம். அவரின் அருளைப் பெறவும் அவரின் கருணைப்பார்வை நம் மீது படவும்... நாம் ஷீர்டிக்கு செல்ல வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படிச் சென்றால்தான் அங்கே அவரைத் தரிசித்தால்தான் நமக்கு எல்லா செளபாக்கியங்களையும் வழங்குவார் என்பதெல்லாம் கிடையாது. இருந்த இடத்திலிருந்தே, அதாவது நாம் இருக்கிற இடத்திலிருந்தே பாபாவை மனதார நினைத்துக் கொண்டாலே போதும்... ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஓடோடி வருவார் சாயிபாபா. நம் அம்மாவைப் போல் நம் மீது கருணை காட்டி, நம் தந்தையைப் போல் நம்மை வழிநடத்தி, குருவைப் போல் நமக்கு வழிகாட்டியாகவும் இருந்து இந்த இப்பிறவியில் நம்மைக் காத்தருள்வார் சாயிபாபா என்பது சத்திய வாக்கு!
ஷீர்டியில் இருந்துகொண்டு, அகில உலகத்தையும் தன் கண்பார்வையாலும் திருவார்த்தைகளாலும் மனோரதமான சிந்தனையாலும் வளப்படுத்தினார் சாயிபாபா. இவருக்கு முன் நின்று, தன் குடும்ப வறுமையைச் சொன்னவர்களுக்கு விரைவிலேயே செழுமையைத் தந்த அருளாடல்களை இன்றைக்கும் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார்கள் பக்தர்கள் பலர்.
வறுமையால் வாடியவர்கள், இவரின் அருளால் வளமைக்கு மாறினார்கள். வழக்கில் சிக்கிக் கொண்ட சொத்துகள், இவரின் வார்த்தைகளால் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். சொத்தும் பங்களாவும் இருந்து, குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இவர் கை தூக்கி ஆசீர்வதித்துத் தந்த விபூதிப் பிரசாதம்... பிள்ளைச் செல்வத்தைத் தந்தருளியது.
இப்படி, பாபாவின் அருளைப் பெற்றவர்கள், தட்டு முழுக்க பணத்தைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, இவரின் காலடியில் வைத்து வணங்கினார்கள்.
எதையும் கேட்க மாட்டார் பாபா. கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. இல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் இந்த மகான். தேவைகள் என்பதையெல்லாம் கடந்த நிலையில் இருப்பவர் என்பதை நம்மைப் போன்ற சாமானியர்கள் அறிய மாட்டார்கள். நமக்கு சந்தோஷமும் திருப்தியும் மன நிறைவும் தருவது எது? பணம். அந்தப் பணத்தையே பாபாவுக்கு வழங்கினார்கள்.
அவரும் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. பணமா... யாருக்கு வேணும் என்று கேட்டுப் புறக்கணிப்பதில்லை. இப்படி அன்பர்கள் வழங்கிய பணத்தையெல்லாம் மக்களுக்கே வழங்கினார் சாயிபாபா. ஷீர்டியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களின் திருப்பணிகளுக்குச் செலவிட்டார். கோயில்களைப் புனரமைத்து, பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.
அங்கே... கோயில்களின் புனரமைப்பு நடக்க நடக்க, பாபாவின் சாந்நித்தியம் இன்னும் இன்னுமாகப் பெருகிற்று. அந்த சாந்நித்தியத்தால், பக்தர்கள் பலரும் பலனடைந்தார்கள். பலம் பெற்றார்கள். பாவத்தில் இருந்து மீளச் செய்துவிட்டார் எங்கள் பாபா என்று கொண்டாடினார்கள். ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
யாரிடம் பேசினாலும் என்ன பேசினாலும் எப்போது பேசினாலும் எதுகுறித்துப் பேசினாலும் ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று வார்த்தையை ஆரம்பிக்கும் போதும் பேச்சை முடிக்கும் போதும் சொன்னார்கள். வார்த்தைக்கு வார்த்தை கூட சாய்ராம் சாய்ராம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள் சிலர்!
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தங்கள் குடும்பத்தில் , உறுப்பினர் போலவே வரித்துக் கொண்டார்கள். சாயிபாபாவும் அந்தப் புனித மகானும் எவரிடமும் பாரபட்சம் பார்க்காமலேயே எல்லோரையும் ஒரேவிதமாகவே பாவித்தார். ஏழை பணக்கார வித்தியாசங்களெல்லாம் பாபாவிடம் கிடையாது. ஒரு பரம ஏழை கூட, பாபாவின் முன்னே வந்து நின்று விட்டால், பாபாவின் அருள் கிடைத்துவிடும் என்பது உறுதி. அப்படி அருளை வைத்துச் சொன்னால், அந்த ஏழை மிகப்பெரிய கோடீஸ்வரன் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். சாதாரண ஊழியரும் அரசாங்க ஊழியரும் பாபாவுக்கு ஒன்றுதான். அரசுப் பதவி, கோடிகோடியாய் பணம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே இருந்ததுதான் பாபாவின் தனிப்பட்ட மகத்துவ குணம் என்பதை, பாபாவை அறிந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இன்று வரைக்கும் நாம் கண்ணீர் சிந்தும்போதெல்லாம் சூட்சும ரூபமாக வந்து, நம்மை, நம் கண்ணீரைத் துடைக்கின்றன பாபாவின் கருணைக் கரங்கள் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை.
திருமணமாகி ஒன்பது வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை அந்தத் தம்பதிக்கு. இதனிடையே இதனாலேயே குடும்பத்தில் சண்டை, குழப்பம், பிரிவுகள். கணவனும் மனைவியும் ஒருகட்டத்தில் பிரிந்து போனார்கள். அந்தப் பெண், அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள். அங்கே... அம்மாவின் வீட்டுக்கருகே ஒரு சாயிபாபா கோயில். சிறிய கோயில். அந்தக் கோயிலில், வியாழக்கிழமை தோறும் சென்று, பாபாவை தரிசனம் செய்து வந்தாள். நான்காவது வாரத்தில், தன் கோரிக்கைகள் அடங்கிய பிரார்த்தனைச் சீட்டு எழுதி யார் யாரோ அங்கிருக்கும் பெட்டியில் போடுவதை அப்போதுதான் பார்த்தாள்.
பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு, கணவருடன் சேர வேண்டும், சேர்ந்து வாழவேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு, வேண்டிக் கொண்டதை, சீட்டில் எழுதி, பெட்டியில் போட்டுவிட்டு, பாபாவை நமஸ்கரித்துவிட்டு வந்தாள். ஐந்தாவது வியாழக்கிழமை பாபா கோயிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்குச் சென்றவள், அதிர்ந்து போனாள். ஆச்சரியப்பட்டுப் போனாள். கணவனும் மாமியாரும் வந்திருந்தார்கள்.
பிறகு, அவளின் கணவன், மனைவியை அழைத்துக் கொண்டு, ஊருக்குச் சென்றான். அதையடுத்த நான்காவது மாதம், அவள் கருவுற்றாள். டாக்டர்கள் கரு உண்டாகியிருப்பதை உறுதி செய்தார்கள்.
அந்தக் குடும்பம் அவளைக் கொண்டாடியது. அவள், சாயிபாபாவைக் கொண்டாடத் தொடங்கியிருந்தாள். பாபாவின் சிலை ஒன்றை வாங்கி, பூஜையறையில் வைத்து, தினமும் வணங்கி வந்தாள். கணவர் மனம் திருந்தி திரும்பி வந்ததற்கும் கரு வளர்வதற்கும் சாயிபாபாவின் பேரருளே காரணம் என உணர்ந்தாள். பூரித்தாள். புளகாங்கிதம் அடைந்தாள். சொல்லிவைத்தாற் போல், அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதுவும்... ஓர் வியாழக்கிழமையன்று பிறந்தது.
இப்போது மொத்த வீடும் சாயிபாபாவின் அருளை உணர்ந்து சிலிர்த்தது. குழந்தைக்கு ‘சாய்ராம்’ என்றே பெயர் சூட்டியது. இன்றைக்கு லட்சக்கணக்கான சாயி குடும்பங்களில், இவர்களும் ஒன்று!
சாயிபாபா உங்கள் தாய். எதுவேண்டுமானாலும் கேளுங்கள். சாயிபாபா உங்களுடைய தந்தை. எதை வேண்டுமானாலும் வழங்குவார். சாயிபாபா உங்களின் குரு. உங்களுக்கு என்ன வழங்க வேண்டும் என்பதை நீங்கள் கேட்காமலேயே வழங்கி அருள்வார் சாயிபாபா! நம் கண்ணீரைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் சாயிநாதன்!
ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்..!
- அருள்வார்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago