புணேயில் அமிர்த கலச விழா வேத சம்மேளன்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தக் ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ் கிரி மஹராஜ் 75-வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு புணேயில் நடைபெற்ற அமிர்த கலச விழா வேத சம்மேளனத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ் கிரி மஹராஜ். பிப். 4 முதல் 11-ம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் இவரது 75-வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களில் உள்ள சன்மார்க்க சாதுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புணேயில் கோலாகலமாகத் தொடங்கிய கீதா பக்தி அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனுக்கிரகபாஷணம் வழங்கி பக்தர்களை ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது வாழ்த்துரையில், “காணாபத்யம் முதல் சைவம் வரை ஷண்மத தலங்களின் தாயகமாக மகாராஷ்டிர மாநிலம் விளங்குகிறது. பல சாதுக்களை மகாராஷ்டிரா நமக்கு அளித்துள்ளது. ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி நீண்ட ஆன்மிக பயணத்தைக் கொண்டவர். இவருக்கும் ஸ்ரீமடத்துக்கும் நல்ல பழக்கம் உள்ளது. ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி பகவத் கீதையை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எடுத்துச் சென்று அதை விஷ்வ கீதையாக மாற்றியுள்ளார். மேலும் அதை பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் காரணியாக நமது வைதீக இந்து தர்மம் திகழ்கிறது. பகவத் கீதை நம்மை நல்ல பாதையில் வழிநடத்திச் சென்றுள்ளது. மராட்டிய மொழியில் தியானேஷ்வரால் எழுதப்பட்ட பகவத் கீதையின் விளக்கவுரையான ‘ஞானேஷ்வரி’யை தமிழில் மொழிபெயர்க்க காஞ்சி மகா ஸ்வாமி தீவிர முயற்சி மேற்கொண்டார்” என்றார்.

ஒரு வார கால நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேத சபா, சாஸ்திர சபைகள், பஜனைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE