மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவுக்காக 85 அடி உயர கொடிமரம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவுக்காக, சர்க்கார்பதி வனப் பகுதியில் இருந்து, மூங்கில் கொடி மரத்தை வெட்டி எடுத்து வரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோயிலிலிருந்து புறப்பட்டகோயில் முறைதாரர், அருளாளிகள், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார், மாசாணியம்மன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து கோயில் கொடிமரத்துக்கு 85 அடி உயரமுள்ள மூங்கிலை தேர்வு செய்து வெட்டியெடுத்தனர். அந்த மரத்துக்கு சர்க்கார்பதி மாரியம்மன் கோயிலில் விபூதி, குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து சிவப்பு, மஞ்சள் புடவைகளால் மூங்கிலை சுற்றிக்கட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

நேற்று மாலை 4.30 மணிக்கு சர்க்கார் பதியிலிருந்து, 17 கி.மீ. தொலைவுக்கு கொடிமர மூங்கிலை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். வரும் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாசாணியம்மன் கோயில் ராஜகோபுரம் முன் சிறப்பு பூஜையுடன் மூங்கிலில் அம்மனின் சிம்ம வாகனக் கொடி கட்டப்பட்டு, கொடியேற்ற விழா நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE