நாளை தை அமாவாசை தினம்: ஸ்ரீவைகுண்டம் படித்துறையில் சகதி, குப்பைகள் அகற்றப்படுமா?

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி படித்துறைகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சகதியும், குப்பைகளும் தேங்கியுள்ளன. நாளை ( பிப்.9 ) தை அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தும் வகையில் இந்த படித்துறைகளில் உள்ள சகதி மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரப் பகுதிகள் அனைத்தும் கடும் பாதிப்புகளை சந்தித் தன. வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளின் வடுக்கள் தாமிரபரணி கரையில் இன்னும் மறையவில்லை. தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகளும், செடி, கொடிகளும் குவிந்து கிடக்கின்றன.

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள திருமஞ்சன படித்துறை மற்றும் முருகன் கோயில் படித்துறை ஆகிய இரண்டு படித்துறைகளிலும் சகதியும், குப்பைகளும் பெருமளவில் குவிந்துள்ளன. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் இந்த பகுதியில் புனித நீராடி வழிபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை ( பிப்.9 ) தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் இந்த படித்துறைகளில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். எனவே, இந்த படித்துறைகளில் காணப்படும் சகதி மற்றும் குப்பைகளை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இது தொடர்பாக, பாஜக ஒன்றிய தலைவர் கே.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்டத் தலைவர் சித்திரை வேல் கூறியதாவது: நாளை ( 9-ம் தேதி ) தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியில் ஏராளமானோர் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்வார்கள். படித்துறைகளில் பெருமளவில் சேர்ந்துள்ள சகதி மற்றும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி சுத்தம் செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE