திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து திருநாளின் முதல்நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலாக விளங்கும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், வைணவ திவ்யதேசத் தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமையுடனும் திகழ்கிறது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிப்.1-ம் தேதி தொடங்கியது. பிப்.5-ம் தேதி வரை பகல்பத்து நடைபெற்றது. இந்த நாட்களில் தாயார் மூலஸ்தானத்தில் திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்பட்டன.

தொடர்ந்து ராப்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்கள், ஆச்சார்யர் மரியாதையாகி திருவாய்மொழி மண்டபத்தை தாயார் அடைந்தார்.

அங்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம், அமுது செய்தல், திருப்பாவாடை கோஷ்டி,தீர்த்தக் கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேர்ந்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தாயாரை தரிசித்தனர்.

பிப்.11-ம் தேதி விழா நிறைவு: இதேபோல, நாளை வரை தாயார் புறப்பாடாகி, சொர்க்கவாசல் வழியாக திருவாய்மொழி மண்டபத்தை சென்றடைவார். வரும் 11-ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையிலான கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர். இத்தலத்தில் மட்டுமே தாயார் சொர்க்கவாசலைக் கடக்கும் நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE