குருவே... யோகி ராமா..! 4: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

By வி. ராம்ஜி

உலகில் உள்ள எல்லா பெற்றோரும் ஒரேயொரு விஷயத்தில் மட்டும், ஒரேவிதமான கருத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் ஆசைகள் பல இருந்தாலும் அந்தவொரு ஆசை மட்டும் எல்லோருக்குமே இருக்கும். எத்தனை விதமான, விதம்விதமான விருப்பங்கள் இருந்தாலும், எல்லாப் பெற்றோருக்கும் இந்தவொரு விருப்பம் நிச்சயம் இருந்தே தீரும். அது... 'எம்புள்ள நல்லவன்னு பேரு எடுக்கணும்!' என்பதுதான்!

'நல்ல புள்ளையைத்தான் பெத்திருக்கேப்பா' என்று பையனைப் பார்த்துவிட்டு, பையனின் செயல்களைப் பார்த்துவிட்டு யாரேனும் சொல்வதில் அப்படியொரு ஆனந்தம் அவர்களுக்கு. 'உம் பையன் படிப்புல கெட்டியா இருக்கானே. எந்நேரமும் படிப்பு படிப்புன்னு இல்லாம, விளையாட்டுலயும் சுட்டியா, படிப்புலயும் கெட்டியா இருக்காம்பா. பசங்கன்னா துறுதுறுன்னு இருக்கணும். படிப்புலயும் பளீர்னு இருக்கணும். நல்ல புத்தி இருந்தாத்தான் அப்படி இருக்கமுடியும். பரவாயில்லப்பா உம் புள்ள. நல்லவிதமாத்தான் வளர்த்திருக்கே' என்று உறவுக்காரர்களோ அக்கம்பக்கத்தாரோ சொல்லும்போது, பெற்ற வயிறு குளிர்ந்துபோய்விடும்.

என் அம்மா கூட அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்... 'நல்லவன்னு பேரெடுக்க நாழியாகும்டா. கெட்டவன்னு சட்டுன்னு பேரு வந்துரும். நல்லவன்னு பேரெடுத்துக் குடு. அதுபோதும் எனக்கு' என்று மிக கனமானதொரு விஷயத்தை விளையாட்டுப் போக்கில், சொன்ன அம்மாவை எப்போதும் நினைத்துப் பார்ப்பது உண்டு. அதன்படி, அம்மா சொல்படி, அம்மாவின் விருப்பப்படி, ஆசைப்பட்டபடி நடக்கிறோமா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது உண்டு.

'எது நல்லது, எது கெட்டதுன்னு இந்தச் சின்ன வயசுல தெரியாதுப்பா' என்று எவரேனும் நமக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவார்கள். 'எல்லாம் போகப் போகப் புரிஞ்சுக்குவாங்க பசங்க' என்று சமாதானம் சொல்வார்கள்.

எல்லோரின் பால்யமும் இப்படித்தான். புரிந்தும் புரியாமலுமாக குழப்பங்களும் தெளிவுமாக நம்மை அந்தப் பருவத்தில் இருந்து தடக்கென்று கடத்திக் கொண்டுப் போய் விட்டுவிடும். எதையும் யோசிக்கமாட்டோம். அவ்வளவு சுலபமானதொரு விஷயத்தை புரிந்து கொள்ளாமலும் தேவையற்ற விஷயம் குறித்து ஏன் எதற்கு என்பதாகவும் யோசித்து அடிக்கடி சிக்கிக் கொள்வோம். சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வோம்.

ராம்சுரத் குன்வர் எனும் சிறுவன் அப்படியெல்லாம் வளரவில்லை. சக வயது நண்பர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டான். அப்பாவிடமும் அம்மாவிடமும் புராணக்கதைகளைக் கேட்டபடியே வளர்ந்தான். அப்பாவுடன் கங்கை நீரில் விளையாடிக் குளித்தான். அங்கே அடிக்கடி வந்து கூடுகிற, கூடிச் சத்சங்கம் செய்கிற சாதுக்களுக்கு அருகில் சென்று அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தான். பள்ளியிலும் கவனமாகவும் ஆர்வத்துடனும் படித்தான். அதாவது, எந்தவொரு செயலிலும் முழு ஈடுபாட்டுடனும் இறங்கினான். எந்தவொரு காரியத்தையும் ஆத்மார்த்தமாகச் செய்தான்.

சொல்லப் போனால், அந்தந்த தருணங்களை அந்தந்தத் தருணங்களாகவே எடுத்துக்கொண்டு, அதில் லயிப்பது என்பது ரொம்பவே முக்கியம். இன்னும் சொல்லவேண்டுமென்றால்... அதுதான் சரியான வாழ்க்கை. அப்படி ஆகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வதே... வாழ்தலின் அடிப்படை. ஆனால் அப்படி வாழ்வதும் எளிது. வாழ்பவர்களும் குறைவு.

ராம்சுரத்குன்வர் விளையாட்டில் ஆர்வம் காட்டினான். படிப்பில் கவனம் செலுத்தினான். அப்பாவிடன் கதை கேட்பதில் லயித்தான். கங்கையில் நீந்துவதில் அலாதிப் பிரியம் கொண்டிருந்தான். ஆனால் எல்லாவற்றையும் விட, சாதுக்களைச் சந்திப்பதிலும் சாதுக்கள் பேசுவதைக் கேட்பதிலும் சாதுக்களிடம் இருப்பதிலும் அப்படியொரு ஆனந்தம், அவன் முகம் முழுக்கப் பரவியிருந்தது.

பத்துப்பனிரெண்டு வயதுச் சிறுவனுக்கு இவையெல்லாம் நிகழுமா என்ன. ஆனால் நிகழ்ந்தது. சாதுக்கள் பசியாற வேண்டுமே என அந்தச் சிறுவனை நினைக்க வைத்தது. குடுகுடுவென சாதுக்களை வீட்டுக்கே அழைத்துக் கொண்டு, சாதம் போடுங்க இவருக்கு என்று கேட்க வைத்தது. தன் வீட்டில் இல்லாது போனால் என்ன... அடுத்த வீட்டில் கேட்போம், பக்கத்து வீட்டில் சாப்பாடு வாங்குவோம் என சாதுக்களுக்காக யாசகம் கேட்க வைத்தது.

எல்லோரைப் போலவும் வளர்ந்தான் சிறுவன் ராம்சுரத்குன்வர். ஆனால் எல்லோரைப் போலவும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பையனின் நடவடிக்கைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள் அம்மா. அந்த வீட்டுப் பையனையும் இந்தத் தெருப் பசங்களையும் உடனே நினைத்துக் கொண்டு, தன் பையனுடன் வைத்து ஒப்பிடவில்லை. அந்தப் பையன்களை ஒரு தட்டிலும் தன் மகனை அடுத்த தட்டிலும் வைத்துக் கொண்டு, தராசு தூக்கிப் பார்க்கிற செயலைச் செய்யவே இல்லை.

அதேசமயம், தன் மகன் பின்னாளில் மிகப் பெரிய யோகியாவான், ஞானியாவான், மகான் என்று ஊரே கொண்டாடும், உலகமே நமஸ்கரிக்கும் என்றும் அந்த அம்மா நினைக்கவில்லை. அப்படியெல்லாம் எதுவும் அம்மாவுக்குத் தெரியவும் வாய்ப்பில்லை.

அவ்வளவு ஏன்... பின்னாளில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகருவோம் என்றோ, அங்கே திருவண்ணாமலையில் மையம் கொள்வோம் என்றோ, தென்றெலன தன் கையில் இருக்கிற விசிறியில் இருந்து கொதித்துப் போன பல மனங்களுக்கு இளைப்பாறுதல் தருவோம் என்றோ, அந்த மனங்களை செம்மைப்படுத்தி, நல்வழிக்குக் கொண்டு வருவோம் என்றோ... ராம்சுரத்குன்வர் எனும் 12 வயதுச் சிறுவன், அறிந்திருக்கவில்லை.

ஆனால்... பையனின் செயல்கள் அனைத்துமே அம்மாவைக் நெகிழச் செய்தன. அவள் தாங்கிப் பெற்ற வயிறு, குழைந்து, குளிர்ந்து போயிற்று. வார்த்தைக்கு வார்த்தை, 'சாத்வீ பேட்டா' என்றே செல்லம் கொஞ்சினாள். சீராட்டினாள். அப்படிச் சொல்வதிலும் சொல்லும் விதமாக மகன் நடந்துகொள்வதிலும் பூரித்துப் போனாள். புளகாங்கிதம் அடைந்தாள்.

'எங்கேம்மா உன் சாத்வீ பேட்டாவைக் காணோம்' என்று அம்மாவைப் பார்த்து, எல்லோருமே சொல்ல ஆரம்பித்தார்கள். இன்னும் உற்சாகமானாள் அவனுடைய அம்மா.

அப்படியொரு ஆனந்தம்தான்... எல்லா அம்மாக்களின் ஆசையும். 'நல்லபையன்னு பேரெடுத்தா அதுவே போதும்' என்று ஆசைப்படும் அம்மாக்களுக்கு அதைத்தவிர வேறு எதையும் பொருட்படுத்துவதில்லை. பொருளூம் பொன்னுமாகக் கொட்டிக் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பதே இல்லை.

அப்படியிருக்க... 'சாத்வீ பேட்டா' என்று மகனை தாம் அழைப்பதும் தன்னைப் போலவே அக்கம்பக்கத்தாரும் கூப்பிடுவதும்தானே நிம்மதி; நிறைவு; பேரானந்தம்.

சாத்வீ பேட்டாவாக வளர்ந்த சிறுவன் ராம்சுரத்குன்வர், அதைக் கேட்டு உள்ளே எதுவும் ஏற்றிக்கொள்ளவே இல்லை. அவன் நிறைகுடம்; தளும்பாமலே இருந்தான். சாத்வீ பேட்டா... அப்படித்தான் இருப்பான்; இருந்தான்.

'சாத்வீ பேட்டா' என்றால்... அமைதியான பையன் என்று அர்த்தம். புனிதமான மகன் என்று அர்த்தம்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா!

-ராம் ராம் ஜெய்ராம்

வி.ராம்ஜி, தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்