சுவாமி சரணம்! - 39: வம்புலி வாகனன்!

By வி. ராம்ஜி

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!

மகிஷி எனும் அரக்கிக்குள் அன்பே உருவெனக் கொண்ட பெண் இருந்தாள். மணிகண்டன் மகிஷியைச் சம்ஹரித்த வேளையில், அந்தப் பெண் வெளியே வந்தாள். அவள் பெயர் லீலாவதி. அவளே மஞ்சள்மாதா. மாளிகைபுரத்து மஞ்சள்மாதா.

சரி... மணிகண்டன் மகிஷியை வதம் செய்யும் தருணம் வந்தது. அப்போது அவர் வனத்துக்கு வந்தார். அந்த வனத்துக்கு ஏன் வந்தார். புலியின் பாலை எடுத்துச் செல்வதற்காக வனத்துக்கு வந்தார்.

புலியின் பால் எதற்கு? பட்டமகிஷிக்கு தீராத தலைவலி. அப்படியொரு நாடகம். இந்த நாடகத்தின் மூலகர்த்தா முதலமைச்சர். நாடகத்துக்குத் துணை போனது யார். அரச மருத்துவன். அதாவது முதலமைச்சரும் மகாராணியும் சேர்ந்து திட்டமிட, மணிகண்டனைக் காட்டுக்குள் அனுப்பிச் சாகடிக்க முடிவு செய்தனர். அதற்கு அரச வைத்தியனைப் பொய் சொல்லச் சொன்னார்கள். ‘மகாராணியின் தலைவலி தீரவேண்டுமெனில், புலியின் பால் வேண்டும். அந்தப் பாலில் மூலிகை மருந்து கலக்கி, நெற்றியில் பற்றுப் போடவேண்டும்’ என்று மருத்துவன் பொய் சொல்ல... புலியைப் பிடித்து பால் கொண்டுவரப் புறப்பட்டான் மணிகண்டன்!

அப்போது தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்ததும் மகிஷிக்குத் தகவல் தெரிந்ததும் இரண்டு தரப்புக்கும் யுத்தம் நிகழ்ந்ததும் அதில் மகிஷியைக் கொன்றுபோட்டான் மணிகண்டன் என்பதும் பார்த்தோம்.

அப்போது வெளிப்பட்டு, இன்றைக்கும் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் சுபகாரியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாளிகைபுர அன்னையின் மகிமையைக் கண்டோம்.

மணிகண்டனைப் பார்ப்போம்.

மணிகண்ட சுவாமியின் அவதார நோக்கமே மகிஷி வதம் தான்! அவளையும் வேரோடு சாய்த்தாகி விட்டது. அழித்துவிட்டான் மணிகண்டன். பிறகென்ன...

புலிப்பால் எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றாக வேண்டுமே! காட்டுக்கு வந்த காரியமே அதுதானே!

அப்போது, இந்திரன் புஷ்டியான பெண்புலியாகத் தோற்றத்துக்கு மாறினான். அவனைத் தொடர்ந்து தேவர்பெருமக்களும் புலிகளாக மாறினார்கள். மணிகண்டன், புலியின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தப் புலி, ஆஹா... பாக்கியம் பாக்கியம் என்று உள்ளே சொல்லிக் கொண்டது. பெருமிதப்பட்டது. மணிகண்டன் இந்திரப்புலியில் அமர்ந்தபடி முன்னே செல்ல, மற்ற புலிகள் மணிகண்டனைத் தொடர்ந்து சென்றன.

முன்னதாக அங்கே இன்னொரு காரியமும் நிகழ்த்தினான் மணிகண்டன். மகிஷியின் பூத உடல் அங்கே கிடந்தது. அந்த உடலைக் கற்களைக் கொண்டு மூடுவது எனத் தீர்மானித்தான். இறந்துபோன மகிஷியின் உடல்... ஆனாலும் அரக்ககுணம் கொண்டவள் அல்லவா. ஒருவேளை உயிர்பெற்று வந்தாலும் வருவாள் அல்லவா. மலை போல் வளருமே உடல் என நினைத்தார். அவ்வளவு உக்கிரக்காரியாக அல்லவா இருந்தாள். எனவே கற்களைக் கொண்டு மூடினார் மணிகண்டன். அதற்கு அத்தனை பேரும் உதவி செய்தார்கள். ஆளாளுக்கு கற்களைப் போட்டார்கள். அவளின் உடல் மீது மிகப்பெரிய கல்மலையே உருவாகி இருந்தது.

மகிஷியின் உடலை, மணிகண்ட சுவாமி கற்களைக் கொண்டு மூடிய இடம் இன்றைக்கும் இருக்கிறது. அந்த இடத்திற்கு கல்லிடும் குன்று என்று பெயர். ஐயப்ப பக்தர்கள், அந்த இடத்துக்கு வந்து, கல் வீசிவிட்டு ஐயனைத் தரிசிக்கச் செல்வார்கள் எனும் சம்பிரதாயமும் அதையொட்டியே வந்ததாகச் சொல்கிறது சபரிமலை ஸ்தல புராணம்.

மகிஷியை கல்மலை கொண்டு மூடிவிட்டு, அங்கிருந்து புலிகளுடன் புறப்பட்டார் மணிகண்டன். அவ்வளவுதான்... பார்த்ததும் பந்தள தேசமே கிடுகிடுத்தது. வெலவெலத்துப் போனது.

மக்கள் அனைவரும் புலிக் கூட்டம் கண்டு பயந்தார்கள். பதறினார்கள். பதைபதைத்துப் போனார்கள். பதுங்கிக் கொண்டார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு மணிகண்டனின் வீரத்தைக் கண்டு பெருமிதம் கொண்டார்கள்.

குட்டிப்போட்ட பூனை போல், எல்லாப் புலிகளும் மணிகண்டனுக்குக் கட்டுப்பட்டபடி, சாதுவான பிராணியாக, அப்பாவி விலங்குகள் போல் பவ்யமாக வந்தன.

அரண்மனையிலும் இதே கதைதான். பயத்தைக் கடந்து, பதற்றங்களைத் தாண்டி, மிருகங்களால் அடிபட்டுச் சாவான் என்று நினைத்தால், இப்படி புலிக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு, புலியின் மேலேயே அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி வருகிறானே... என்று முதலமைச்சர் ஆடித்தான் போனார்.

அந்த அரண்மனைக்குள், நடுப்பகுதியில் ஆயிரக்கணக்கான புலிகள் நிரம்பியிருக்க... புலியின் மீது அமர்ந்தபடி அங்கே காட்சி கொடுத்தது சாஸ்தா என்பதும் ஐயப்ப சுவாமி என்பதும் அவதாரம் என்பதும் மன்னன் உட்பட எவருக்கும் தெரியவில்லை!

அரண்மனை முழுக்க, புலியின் உறுமல் சத்தம் கேட்டு எதிரொலித்தது.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்