சுவாமி சரணம்! 49: காவல் தெய்வங்கள்!

By வி. ராம்ஜி

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!

எத்தனையெத்தனை அதிசயங்களைக் கொண்டிருக்கிறது சபரிமலை. அதனால்தான் அந்த அதிசயங்களும் அங்கே தரிசித்துக் கிடைப்பதால் நடக்கிற அற்புதங்களும் நம்மை நெகிழ வைக்கின்றன. மகிழச் செய்கின்றன. அங்குசத்துக்குக் கட்டுப்பட்ட யானை போல், நாம் ஐயன் ஐயப்ப சுவாமியின் திருமுகத்தைக் கண்டு, கட்டுண்டுபோகிறோம். அப்படிக் கட்டுண்டு கிடக்கிற சுகானுபவத்துக்காகவே, வருடாவருடம் வருகிறோம்.

ஸ்ரீராமபிரான். திருமாலின் அவதாரங்களிலேயே வித்தியாசமான அவதாரம். மனிதராகப் பிறந்து, மனிதராகவே வாழ்ந்த அற்புதமான அவதாரம். தந்தை சொல் தட்டாத பிள்ளையாய், உடன் பிறந்தவனை அரவணைத்து, மனைவியை காபந்து செய்து, குருவுக்கு மரியாதை செய்து, உறவுகளுக்கு மதிப்பு அளித்து என ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமோ... அப்படி வாழ்ந்த ஒப்பற்ற அவதாரம்... ராமாவதாரம்!

அயோத்தியின் ராமபிரானுக்கு, அவர் சாப்பிடுவதற்கு கனிகள் கொடுப்பதற்கு முன்னதாக அவற்றை ருசி பார்த்து, நன்றாக இருப்பதாக அறிந்து உணர்ந்ததும் அந்தக் கனிகளை மட்டுமே ராமருக்குத் தருபவளைத் தெரியும்தானே. அப்பேர்ப்பட்ட புண்ணியங்களைச் செய்தவளை எப்படி மறக்க முடியும்? அவள்... சபரி!

சபரிமலையைச் சொல்லும்போது, இந்த சபரியை ஏன் சொல்லவேண்டும்?

ஆமாம். சபரி எனும் அந்த புண்ணிய மகராசி, தவம் செய்ய அமர்ந்த இடம் தான் பின்னாளில் சபரிபீடம் என்று போற்றப்படத் தொடங்கியது. அவள் தவமிருந்த மலைதான், சபரிமலை என்று கொண்டாடத் தொடங்கினோம்.

உண்மையான பக்தியாலும் ஆழ்ந்த பேரன்பாலும் வாழ்ந்த உன்னத மனுஷி சபரியின் மனதைப் புரிந்து கொண்டுதான், அவளின் கடும் தவத்தை கெளரவிக்கும் வகையில், பின்னாளில் ஐயன் ஐயப்ப சுவாமியின் திரு அவதாரம் அங்கே நிகழ்ந்தது என்கிறார்கள் ஐயப்பனின் அடியவர்கள்.

’’சபரிமலை என்பது எல்லாக் கோயில்களையும் போலான கோயில் மட்டுமே அல்ல. முழுக்க முழுக்க, புராணச் சம்பவங்கள் தொடர்பு கொண்ட சாந்நித்தியமான மலை. இங்கே உள்ள ஒவ்வொரு இடமும் ஐயப்ப சுவாமியின் அவதாரத்தையொட்டிய இடங்களாகத்தான் இருக்கின்றன. அதாவது ஐயப்ப சுவாமியின் அவதாரம் நிகழ்ந்ததற்குத் தொடர்பு கொண்ட இடங்கள் என்று இங்கு ஒரு இடத்தையோ இரண்டு மூன்று இடங்களையோ மட்டும் சொல்லிவிட முடியாது. சபரிமலையும் அதைச் சுற்றியுள்ள மலைகளும் பாதைகளும் நதிகளும் இடங்களும் மணிகண்ட சுவாமியின் திரு அவதாரங்களுக்குத் தொடர்பான இடங்கள். அந்த மகாசக்தி நிறைந்திருக்கும் தலம் என்பதால்தான், எத்தனை முறை சபரிமலைக்கு வந்தாலும் ஐயப்ப சுவாமி, சிலிர்க்க வைக்கிறார் நம்மை!’’ என்று நெகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ.

இதையடுத்து... சின்னச் சின்ன இடங்களைக் கடந்த பிறகு, அடுத்து நாம் தரிசிக்கும் இடம்... பதினெட்டுப் படி! சொல்லும் போதே சில்லிட வைக்கிறது. அந்தப் பதினெட்டுப் படியைக் கடப்பதற்குத்தான் இத்தனை விரதங்களும் அனுஷ்டானங்களும்! இந்தப் பதினெட்டு படிகளை அடைவதற்குத்தான், இவ்வளவு வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும்!

தூரத்தில் பதினெட்டுப் படியைப் பார்க்கும் போதே, பக்தர்களிடம் இருந்து வருகிற சரண கோஷம் மனதை சிலிர்க்கவைக்கும். விண்ணதிரும் கோஷங்கள், மனதையே கிடுகிடுக்க வைக்கும். அமைதியாக, வாய் திறக்காமல் வருகிற குணம் கொண்டவர்கள் கூட, அந்த சரணகோஷங்களைக் கேட்கக் கேட்க, கொஞ்சம் கொஞ்சமாக சரணகோஷத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். அவர்களும் கோஷத்தையொட்டிய சரணகோஷ முழக்கத்துக்குள் தங்களை ஒப்படைத்துவிடுவார்கள். கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிப் பிரவாகிக்க, மனம் முழுவதும் நிறைவு குடியிருக்க, உதட்டில் இருந்து வரும் ஐயப்ப கோஷங்கள்... நமக்குள் ஒரு உந்து சக்தியாகவும் கிரியா ஊக்கியாகவும் திகழ்கிறது என்பது சத்தியம்!

‘’பதினெட்டுப் படியை, ஆற அமர கடந்து போக முடியாது.விறுவிறுவென ஓடத்தான் வேண்டும். ஓடியபடி படிகள் ஏறத்தான் வேண்டும். நாம் விறுவிறுவென ஏறாவிட்டாலும்... நம்முடன் ஏறுகிற ஐயப்ப சாமிகள் முன்னே செல்ல, நமக்குப் பின்னே கோஷங்கள் இட்டபடி முன்னேறிக் கொண்டிருக்க, அப்படியே நம்மை மேலேற்றி விடுவார்கள். முதல் படியில் கால் வைத்ததும் தெரியாது. பதினெட்டாம் படியில் நிற்பதும் தெரியாது’’ என்கிறார் பாடகர் வீரமணி ராஜூ.

பதினெட்டுப் படிகள் ஏறுவதற்கு முன்னதாக, அருகில் உள்ள கொச்சுக்கடுத்த சுவாமியையும் கருப்பசாமியையும் அவசியம் தரிசியுங்கள். சபரிமலையின் காவல் தெய்வங்கள். ஐயப்பனின் காவல் தெய்வங்கள். அவ்வளவு ஏன்... ஐயப்ப சுவாமியின் பக்தர்களாகிய நமக்கும் காவல் தெய்வங்கள்! அவர்களை மனதார வணங்கி வழிபடுங்கள்.

அங்கே... வலது பக்கச் சுவரில் படார் படார் என அடித்துக் கொண்டிருப்பார்கள் தேங்காயைக் கொண்டு! பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த தேங்காயை, சிதறுகாய் போல், சுவரில் அடித்து வேண்டிக் கொள்வார்கள்.

மிக முக்கியமான இடங்களில், இதுவும் ஒன்று. மிக முக்கியமான சடங்குகளில் இந்தப் பிரார்த்தனையும் உண்டு.

‘அப்பா ஐயப்பா. உன் சந்நிதிக்கு வந்துட்டோம். என்னையும் என் குடும்பத்தையும் நீதாம்பா காப்பாத்தணும். இதோ... பதினெட்டுப் படியேறி, உன்னோட அற்புதமான திருக்கோலத்தைத் தரிசனம் பண்ணப் போறோம். எங்களையும் எங்க வம்சத்தையும் காப்பாத்துப்பா ஐயப்பா’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வம்சத்தையே தழைக்கச் செய்யத்தான், உங்களுக்கு அருள்வதற்காகத்தான் சபரி பீடத்தில் உங்களுக்காகக் காத்திருக்கிறான் ஐயன் ஐயப்ப சுவாமி!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்