பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்
திருவண்ணாமலை எந்த அளவுக்குப் பிராபல்யம் கொண்டதோ, அந்த அளவுக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் எல்லோருக்கும் தெரிந்த மகானானார். விசிறி சாமியார் என்று எல்லோரும் அழைத்தார்கள். புகழ்ந்தார்கள். போற்றினார்கள். வணங்கினார்கள். கொண்டாடினார்கள். எங்கிருந்தெல்லாமோ தரிசனம் தேடி நாடினார்கள். தரிசித்து நெகிழ்ந்தார்கள். நெக்குருகிப் போனார்கள்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா
என்று திருநாமம் சொல்லி கோஷமிட்டார்கள். பாடிப் பரவசமானார்கள்.
காஞ்சியைப் பற்றிச் சொல்லும்போதே காமாட்சி அம்பாளையும் காஞ்சி மகானையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். காஞ்சி மகா பெரியவா குறித்துச் சொல்லும்போது, தெய்வத்தின் குரலையும் மகா பெரியவாளின் அருளுரைகளும் நினைவுக்கு வரும். மகாபெரியவாளின் கருத்துகளை, அருளுரைகளை நினைக்கும் போது, அவற்றையெல்லாம் மிக அற்புதமாக, மனதில் பதியும் வண்ணம், ஜீவனுடன் எழுதிய ரா.கணபதி அண்ணாவை நினைத்தே ஆகவேண்டும். அவரை வாழ்த்தியே தீர வேண்டும்.
அவர் பெயர் ரா.கணபதி. எல்லோரும் கணபதி அண்ணா என்று அன்புடன் அழைப்பார்கள். மகா பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான ரா.கணபதி அண்ணா, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அன்புக்கும் வசமானார்.
‘யாரவர் ரா.கணபதி. அவரை அழைத்து வாருங்களேன். பாக்கணும்’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமாரே கேட்டுக் கொள்ள... அதன்படியே அழைத்து வரப்பட்டார் கணபதி அண்ணா.
இதனிடையே, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து ரா.கணபதி அண்ணா எழுதியதையும் சேர்த்துப் பார்ப்போம்.
'தமக்கு மதிப்பெண்ணே கொடுத்துக் கொள்ளாமல், அவர் பூஜ்யமாக நின்ற அந்த எளிமையிலே என் பெருமதிப்புக்கு உரிய பூஜ்யரானார். நாம ஜப யோக ஸித்தியை விட, அவரின் இந்த விநய யோக ஸித்தி என் நெஞ்சைத் தொட்டதில், அதுவரை ‘யோகியா’ராக இருந்தவர், ‘யோகிராஜ’ராக ஏற்றம் கொண்டார்’’ என்கிறார் ரா.கணபதி அண்ணா.
’’அவரது பணிவு எனக்கும் அவரிடம் பணிவு ஏற்படுத்தலாயிற்று. அது வளர வளர பணிவு மூர்த்தமான பெரியவாளிடம் இருந்து அவர் பிரித்துச் செல்ல முடியாதவர் என்ற உணர்ச்சி தோன்றலாயிற்று. அதையொட்டி, ‘என் ரக்ஷிப்புக்கென்றே ஏற்பட்டவர்கள்’ என்று முன்பு குறிப்பிட்டேனே. அவர்களில் இவரும் ஒருவர் என்ற கருத்து குருத்து விடலாயிற்று. குருத்தில் இருந்து பாளை வெடித்து, பூவும் காயும் தோன்ற ஸ்தூல தரிசனம், அவசியமில்லைதான் எனினும் பெரும்பாலும் அது நிகழவே செய்கிறது. அதற்கேற்ப, 1995 நவம்பரில் இருந்து அவரது ஆஸ்ரமம் என்னை இழுக்கத் தொடங்கியது’’ என்று சிலிர்த்தபடி சொல்கிறார் கணபதி அண்ணா.
அதையடுத்து ‘யோகி ராஜர்’, என்னுள்ளே ‘யோகி பகவான்’ ஆக உயர்ந்தார். பெரியவா சொன்னது, அதைவிட அதிகமாக சொல்லாமற் சொன்னது யாவும் நூற்றுக்கு நூறு சத்தியமென கண்டேன். அன்றைக்கு நிச்சயப்படாத ஆழ்ந்த ஊகங்களாகவே நின்றவை, இன்றைக்கு நிலைத்த உண்மைகளாக உறுதிப்பட்டன.
அன்று அடியாரம்பத்தில் பெரியவாள், அபிநயித்துக் காட்டினாரே, கணநாதன் கன்னத்து மதநீர் மீது செவிகளால் இரட்டை விசிறி வீசிக்கொண்டு ஜிலீர் அனுபவித்ததை!’ என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் கணபதி அண்ணா.
ரா.கணபதி அண்ணாவின் பாக்கியம், ஒருபக்கம் காஞ்சி மகானுடன் நெருங்கிய தொடர்பு. இன்னொரு பக்கம் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அன்புக்குப் பாத்திரமானது! இந்த இரண்டும் கிடைத்த கணபதி அண்ணா, வாசகர்களான நமக்கெல்லாம் பாக்கியம்; பேரானந்த எழுத்துகளால் நம்மையெல்லாம் கட்டிப்போடுகிற வித்தகர் அவர்!
’’அந்த ஜிலீரை இவர் எத்தனை சத்தியமாக அடியாருக்கு ஊட்டுகிறார் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். ஸூரதர் என்றால் சாந்த சுபாவி, ‘ஜென்டில்’ என்று பெரியவாள் சொன்னதை பிரத்தியக்ஷமாக மெய்ப்பித்துக் காட்டுகிறார். மெய் காதல் பித்து பிடித்த ஸுரதரும் தான் இவர். தந்தையிடம் மெய்க்காதல் கொண்டு அவனுக்கு என்றும் குழந்தையாய் இருக்கிறார். பெரியவாள் அபிநயித்த கண நாதனாகிய அந்த தெய்வக் குழந்தையாக ‘குமார்-ங்கறதுக்கு ஏத்தாப்பல கொழந்தையாக’ இருக்கிறார். அன்று பெரியவாள் அக்னி, சூரிய, சந்திரர்களை சொன்னதையும், சத்தியமாக்கி காட்டுபவர் இவர்’’ என்று காஞ்சி மகா பெரியவா, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்துச் சொல்லி அருளியதையும் அதை நேரே கண்டு விகசித்து நின்றதையும் விவரிக்கிறார் கணபதி அண்ணா.
’’ராமநாம ஜபத்தில் மூண்ட யோகாக்னி, ராமனையே அனைத்து மடங்கும் ஏகமாகக் காணும் ஞான சூரிய பிரகாசமாகி, பின்னர் அந்த ஏகத்தையே அனைவரிடமும் கண்டு, அன்பமுது (மதநீர் என்று இதைத்தான் சொன்னேன்) பேருக்கும் சந்திரனாகவே ‘குளு...ந்து’ நிறைந்திருக்கிறது. சூரிய குல திலகனும் ராமச்சந்திரன் தானே! யாகாக்னியில் அவன் பாயச ரூபத்தில் உதித்தான் என்றால், அப்பாயசம் ப்ரேமாம்ருதம்தானே!
யோகி ராஜர் சூரிய குல சேகரர். சந்திர சேகர பெரியவாளுடனே இணைந்துவிட்டவராகத்தான் என் நெஞ்சில் இடம் கொண்டார்.
அதுமட்டுமா? இரண்டு மகான்களுக்குமான ஒற்றுமையைக் கண்டு மலைத்துதான் போனேன்’’ - கணபதி அண்ணா வியந்து சொல்லியிருக்கிறார்.
ரா.கணபதி அண்ணாவின் அனுபவங்கள், சிலிர்க்க வைப்பவை. அப்படியான சிலிர்க்கும் அனுபவங்களை அவர் எழுத நாம் படிப்பது இன்னும் பரவசத் தேன்கள்!
மகான்கள், பக்தி, ஆன்மிகம், எழுத்து, இறை நினைப்பு என்று வாழ்ந்த ரா.கணபதி இப்படியொரு மகா சிவராத்திரி நன்னாளில்தான் ஸித்தியடைந்தார்.
கணபதி அண்ணாவின் ஆத்மா நம்மைப் போன்ற பக்தர்களின் எண்ணங்களை நெறிப்படுத்தும். வலுப்படுத்தும். நேராக்கும். சீராக்கும்!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
_ ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago