ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!
‘எவ்வளவோ வரன் பாத்துட்டோம். ஆனா ஒண்ணுமே தகையலீங்க’ என்று வருந்துவோர் பலர் உண்டு.
‘பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சிட்டோம்னா, எங்களோட கடமை முடிஞ்சுது. இன்னும் அதுக்கொரு நாளு கிழமை வரலியே...’ என்று புலம்புகிற பெற்றோரின் ஆகப்பெரிய ஏக்கம் மகள் அல்லது மகனின் திருமணமாகத்தான் இருக்கும்.
நீங்கள் சபரிமலைக்குச் செல்பவரா. இந்த வருடம் மாலை போட்டுக்கொண்டிருக்கிறீர்களா. உங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எவரேனும் சபரிமலைக்கு இனிமேல்தான் போகிறார்களா. அவர்களிடம் உங்கள் மகளுக்காகவோ, தெரிந்தவர்களுக்காகவோ மஞ்சள்மாதாவிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்ளச் சொல்லுங்கள்.
அவளின் சந்நிதியில், மனமார வேண்டிக் கொண்டால் போதும். விரைவில் திருமணம் நடந்தேறும். நல்ல வரன் வீடு தேடி வரும் என்பது உறுதி!
சபரிமலை ஐயப்ப சுவாமியின் திருச்சந்நிதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது மஞ்சள்மாதா கோயில். மகிஷி எனும் அரக்கிக்குள் அவளின் உடலுக்குள் அன்பே உருவெனக் கொண்டு திகழ்ந்த லீலாவதியே, மஞ்சள்மாதா எனும் திருநாமத்துடன் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த மணிகண்ட சுவாமியை மணம் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்ட மஞ்சள்மாதா, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் திருமண பாக்கியத்தைத் தந்தருள்கிறாள். இவளின் சந்நிதியில், எவரொருவர் வேண்டுமானாலும் எவருக்காக வேண்டுமானாலும் கல்யாண வரம் கேட்டு அவளிடம் கோரிக்கை வைக்கலாம். அதனை சிரமேற்கொண்டு உடனே நடத்திக் கொடுத்து, மாங்கல்ய பாக்கியத்தைத் தந்தருள்கிறாள் மஞ்சள் மாதா!
அவளின் சந்நிதி மட்டுமின்றி, அந்தக் கோயில் வளாகமே மஞ்சள் நிறத்தில் மங்களகரமாகக் காட்சி அளிக்கிறது. திருமணச் சிந்தனையில் இருப்பவள் என்பதால், திருமணத்துக்கு முக்கியமான மங்கலப் பொருள் மஞ்சள் என்பதால், மஞ்சளே பிரதான வழிபாட்டுப் பொருளாகவும் மஞ்சளானது அவள் தருகிற பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
நம்மூரில் போல், கேரளம், ஆந்திரம், கர்நாடகக் கோயில்கள் போல் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் மாதாவை வழிபடுவது என்று நாளெல்லாம் குறிக்கவில்லை. எந்தநாளில் வேண்டுமானாலும் மஞ்சள்மாதாவை வழிபடலாம் என்பது சபரிமலை சந்நிதியின் சிறப்பு. மஞ்சள் மாதாவின் மகிமை!
ஆகவே, எந்த நாளில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவளை வழிபடுங்கள். யாருக்குத் திருமணம் நடக்கவேண்டுமோ அவர்களுக்காக சந்நிதிக்கு முன்னே நின்று கொண்டு, கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளுங்கள். கல்யாணக் கவலைகளைப் போக்கி அருள்வாள் மஞ்சள்மாதா என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!
சபரிமலைக்குச் செல்லும் போது, மஞ்சள்மாதாவுக்கு ஜாக்கெட் பிட்டும் எடுத்துச் செல்லுங்கள். அங்கே அவளின் சந்நிதியில் ஜாக்கெட் துணியை வைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். யாருக்காக வேண்டிக் கொண்டீர்களோ... அவர்களுக்கு கல்யாண மாலை தோள் சேரும் என்று இதுவரை பிரார்த்தனை செய்து, அதனால் கல்யாணப் பலன் கிடைக்கப்பெற்ற ஏராளமான பெண்கள், மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் சொல்கிறார்கள்.
இங்கே... இன்னொரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. மஞ்சள் மாதா கோயிலுக்கு வரும் பக்தர்கள், மஞ்சள் தூள் பாக்கெட்டுகளை வாங்கி, கோயிலில் தென்படும் இடங்களில் எல்லாம், தூவுகிறார்கள். அப்படித் தூவுகிற பிரார்த்தனை சபரிமலையில், மஞ்சள் மாதா கோயிலில் இல்லை என்பதை எவருமே அறிவதே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், மஞ்சள் மாதா கோயிலுக்கென்று தனியே மேல்சாந்தி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கூட, இதுகுறித்து ரொம்பவே வருத்தப்பட்ட மேல்சாந்தி, மஞ்சளை இதுபோல் தூவுவது, சுபகாரியம் அல்ல. தயவுசெய்து இதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள் என்று வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மாளிகைபுரத்து அம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பகவதி சேவை எனும் அர்ச்சனை இங்கே பிரசித்தம். இந்த அர்ச்சனையைச் செய்து வேண்டிக் கொண்டாலும் பெண்களுக்கு நல்ல கணவன் அமையப் பெறுவார்கள் என்பது உறுதி.
அதேபோல், சுயம்வரப் புஞ்பாஞ்சலி என்கிற பூஜையும் வலிமையானது. வளம் தரக்கூடியது. நலமும் பலமும் தந்து, சகல செளபாக்கியங்களுடன் இனிதே வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
மற்றபடி, மஞ்சள் தூளை... கோயில் முழுக்கத் தூவுவது கூடாது. கோயிலின் பல இடங்களிலும் துணியைப் போடுகிறார்கள் ஏராளமானோர். அப்படியொரு சடங்கு சாங்கியம் எதுவுமில்லை. இதனால் ஆலயத்தின் தூய்மை பாதிக்கப்படுவதாக சபரிமலை தேவஸம்போர்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்கிறார்கள் ஐயப்ப குருசாமி மார்கள்.
கொச்சுக்கடுத்தன் எனும் பகவானின் பரிவார மூர்த்தியும் மஞ்சள் மாதா சந்நிதிக்கு அருகில் கோயில்கொண்டிருக்கிறார். இவரை வணங்கினால், பில்லி முதலான ஏவல் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. அதேபோல், மஞ்சள் மாதா கோயில் வளாகத்தில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியில் நவக்கிரகங்களை வேண்டிக் கொள்ளுங்கள். சகல கிரக தோஷங்களும் விலகிவிடும் என்பது உறுதி. மேலும் களத்திர ஸ்தானம் வலுவாகும். கல்யாண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
மஞ்சள் மாதா எனும் மகத்தான சக்தி கொண்ட தேவதையை, சக்தியை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். உங்கள் இல்லத்துப் பெண்களையும் உறவுக்காரப் பெண்களையும் அக்கம்பக்கத்துப் பெண்களையும் உங்களின் தோழிகளையும் காத்தருள்வாள் மாளிகைபுரத்து மஞ்சள்மாதா!
சபரிமலை எனும் அந்த மகா உன்னதமான மலை... இதுபோன்ற பல சக்திகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. முறைப்படி, உரிய வகையில் அந்தந்த இடங்களில் அந்தந்த வழிபாடுகளை சரிவரச் செய்து, ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தால், அதற்கான வலிமையை, அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை சீக்கிரமே உணருவீர்கள்!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago