வெற்றிவேல் முருகனுக்கு... 6: அறுபது தேவதைகள்... அறுபது படிகள்

By வி. ராம்ஜி

அறுபது மாதங்களே, அறுபது படிகளாக அமைந்திருக்கும் சுவாமிமலையில், இந்த அறுபது படிகளையும் ஏறி, சுவாமிநாத சுவாமியைத் தரிசித்துவிட்டாலே, நம் வாழ்வு மொத்தத்தையும் வளமாக்கித் தருவார் வடிவேலன் என்கிறார்கள் பக்தர்கள்.

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமியின் கோயில், நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை அதாவது செயற்கைக் குன்று என்பது குறிப்பிடத் தக்கது!

சுவாமிநாத சுவாமியின் சந்நிதியை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைந்திருக்கிறார்கள் என்கிறது திருக்குடந்தை புராணம். இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட்டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இந்தக் கோபுரம்!

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது என்கிறது ஸ்தல வரலாறு.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள சுவாமிநாத சுவாமியின் கோயிலை, மேலக் கோயில் என்கிறார்கள். ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர் இருக்கும் ஆலயத்தை கீழக் கோயில் என்கிறார்கள். சுவாமிநாத சுவாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் என்பதால், இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். அதாவது தந்தை கீழே குடியிருக்கிறார். மைந்தன் மேலே இருந்து அருளாட்சி செலுத்துகிறார்.

இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்ததாகச் சொல்கிறது தலபுராணம். சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

சிற்ப வல்லுநர்களைத் தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு, சுவாமிமலைகள் முழுவதும் ஏராளமான சிற்பக் கூடங்கள் இருக்கின்றன. இங்கே வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் அதாவது பஞ்சலோக விக்கிரகங்கள் உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன.

செயற்கை மலை ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் கொடுமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறிய முடிகிறது.

சுவாமிமலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர், 'திருஏரக நவரத்தின மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார். 'ஒரு தரம் சரவணபவா...' எனத் துவங்கும் நவரத்தின மாலையின் 3-வது பாடல் பிரபலமானது.

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டீஸ்வரர் திருத்தலம்), சீர்காழி (சட்டநாதர் திருத்தலம்), சிதம்பரம் (நட ராஜர் திருத்தலம்), திருவாவடுதுறை (நந்திதேவர் தலம்), சூரியனார்கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.

சுவாமிநாத சுவாமியைப் போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்திரம் மிக மிக மகிமை வாய்ந்தது எனப் போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதை இயற்றியவர் ராமகிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச்சந்திரன் என்பவர்! இவர் மிகச் சிறந்த முருக பக்தர். இதைப் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்பது உறுதி!

இன்னொரு சிறப்பும் சுவாமிமலைக்கு உண்டு.

அதாவது அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிமலைக்காகவே, சுவாமிநாத சுவாமிக்காகவே பாடியுள்ளார். அவரால், 'திருவேரகம்' என்றும், 'சுவாமிமலை' என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பட்டிருக்கின்றன என்றாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உள்ளன.

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள், 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று சுவாமிநாத ஸ்வாமியைப் போற்றியுள்ளார்.

நக்கீரரின் 'திருமுருகாற்றுப் படை'யில் 177 முதல் 190-வரையுள்ள பாடல் வரிகள் சுவாமிமலையைக் குறிக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தை மாதம் வந்துவிட்டாலே, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தினமும் முருகப்பெருமானைத் தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

தவிர, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஆடுதுறை, பட்டுகோட்டை, ஒரத்தநாடு, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் என நிறைய ஊர்களைச் சேர்ந்த பலருக்கும், சுவாமிமலை சுவாமிநாத சுவாமியே குலதெய்வமாகப் போற்றப்படுகிறார்.

அவ்வளவு ஏன்... நாமெல்லாம் நடமாடும் தெய்வம் என்றும் காஞ்சி மகான் என்றும் மகா பெரியவா என்றும் போற்றப்படும் காஞ்சி மகானின் பூரவாஸ்ரமத் திருநாமம் சுவாமிநாதன். அவரின் பூர்வாஸ்ரமக் குடும்பத்திற்கு, சுவாமிமலை முருகன் தான், குலதெய்வம்!

முருகப்பெருமானின் தலங்களை இன்னும் இன்னும் பார்ப்போம்!

- வேல் வேல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

23 mins ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்