வடபழனி முருகன் கோயிலுக்குள் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் உங்கள் குரல் வாயிலாக வடபழனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொலைபேசி மூலம் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: கோயில்களில் பிரார்த்தனைகளுக்காக தீபம் ஏற்றுவது இந்துக்களின் வேண்டுதல் மற்றும் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

அந்த வகையில், வடபழனி முருகன் கோயிலில் அருணகிரிநாதர் சந்நிதிக்கு அருகில் பக்தர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தனர். ஆனால், தற்போது, அங்கு தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

எதற்காக, உள்ளே தீபம் ஏற்றக் கூடாது என கோயில் அலுவலர்களிடம் கேட்டதற்கு, ‘இங்கு தீபம் ஏற்றுவதால் அதிகளவில் எண்ணெய்படிகிறது,’ என்று காரணம் கூறுகிறார்கள். இந்த தடையால், தற்போது பக்தர்கள், கொடிகம்பம் எதிரில் சாலையில் நின்று தீபம் ஏற்றுகிறார்கள். இதனால், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், சாலையில் நின்று கொண்டு தீபம் ஏற்றும் பக்தர்களின் கால்களில் வாகனத்தை ஏற்றிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால், பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் இடவசதி இருந்தும், பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்து கொடுக்க மறுக்கிறார்கள்.

அதேபோல், சிறப்பு கட்டணம் என கூறி ரூ.50 வாங்குகிறார்கள். பக்தர்கள் சிறப்பு கட்டணடிக்கெட் பெற்று கொண்டு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கிறார்கள். ஆனால், கோயிலில் பணிபுரியும் பணியாளர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை சிறப்பு கட்டணமின்றி உள்ளே சுவாமி அருகில் வரை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள். பக்தர்களுக்கு ஒரு நியாயம், கோயில் ஊழியர்களின் வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நியாயமா?

அதேபோல், காலையில் நடைபெறும் பள்ளியறை பூஜைக்கும்கூட ரூ.50 கட்டணம் வசூல் செய்கின்றனர். வேறு எந்த கோயில்களிலும் பள்ளியறை பூஜைக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. இங்கு அதிகாலையில், பள்ளியறை பூஜைக்கு வரும் பக்தர்களிடம் ரூ.50 பணம் மட்டும் வசூலித்துவிட்டு, அதற்கான ரசீது கொடுக்கமறுக்கிறார்கள். அதேபோல்,ரூ.50-க்கு பதிலாக ரூ.100 கொடுத்தால், மீதி பணத்தையும் திருப்பி கொடுப்பதில்லை.

எனவே, வடபழனி முருகன் கோயிலில் முன்புபோல, கோயிலுக்குள்ளேயே தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், தரிசனத்தின்போது அனைவரிடமும் ஒரே மாதிரியான நடைமுறையை கடைப்பிடிக்க கோயில் பணியாளர்ளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வடபழனி கோயில் செயல் அலுவலர் ஹரிஹரனிடம் கேட்டபோது, ‘தற்போது பக்தர்கள் கோயிலுக்குள்ளேதான் தீபம்ஏற்றுகிறார்கள்.

யாருக்கும் நாங்கள் தீபம் ஏற்ற தடை விதிக்கவில்லை. சிலர் சாலையில் நின்று தீபம் ஏற்றுகின்றனர். அவர்களையும் நாங்கள் தடுப்பதில்லை’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE