பித்தன் துணை...பித்தன் துணை...பித்தன் துணை!’ தங்கக்கை’ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தித் திருநாள்!

By வி. ராம்ஜி

காஞ்சி மகாபெரியவா, அவர் அருளியபடியும் ஆலோசனையின்படியும் வந்த அந்தப் பெரிய படத்தைப் பார்த்தார். படத்துக்கு அருகே சென்றார். அந்தப் படத்தில் இருப்பது போலவே, அருகில் அமர்ந்துகொண்டார். படத்தில் இருப்பவர் கன்னத்தில் வைத்திருப்பது போலவே, தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டார். படத்தில் இருப்பது மாதிரியே மகாபெரியவா அச்சு அசலாக இருக்க... அங்கே இருந்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். அப்போது காஞ்சி மகான் அங்கே இருந்தவர்களிடம்... ‘இவரைப் போல நான் ஆகமுடியுமோ’ என்று கேட்டார். நடமாடும் தெய்வம் என்று போற்றிக் கொண்டாடப்படும் காஞ்சி மகானே, ‘இவரைப் போல ஆகமுடியுமோ’ என்று மிகப்பெரிய பீடத்தில் வைத்துக் கேட்டார் அல்லவா... அவர் மகான். அவர் பெயர்... சேஷாத்ரி சுவாமிகள்!

நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படுகிறது காஞ்சியம்பதி. அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று சொல்கிறது புராணம். இந்தக் காஞ்சியில், காமாட்சி அன்னையை பூஜிக்கவும் ஆராதிக்கவும் வேத சாஸ்திரங்கள் அறிந்த வல்லுநர்களை உருவாக்கினார் ஆதிசங்கரர். அவர்களுக்கு காமகோடி குடும்பம் என்றே பெயர் அமைந்தது. அத்தனை பெருமைமிகுந்த காமகோடி குடும்பத்தார், காமாட்சி அம்மனை ஆராதிப்பதிலும் பூஜிப்பதிலும் ஸாக்த வழிபாடுகள் செய்வதிலும் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்கள். அந்த காமகோடி குடும்பத்தில் இருந்த அந்தத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

ஒருநாள்... கருணையே மிகுந்த காமாட்சி அன்ன, ‘நவநீதம் கொடு... ஞானக்கலை உதிக்கும்’ என அசரீரியாக வந்து சொன்னாள். அதன்படி, அந்தப் பெண்மணிக்கு பூஜிக்கப்பட்ட வெண்ணெய் கொடுக்கப்பட்டது. அடுத்த பத்தாவது மாதத்தில், தை மாத அஸ்த நட்சத்திரத்தில், சூரியப் பிரகாசத்துடன் ஆண் குழந்தை ஜனித்தது. நவநீதப் பிரசாதம் வழங்கியதால் பிறந்த குழந்தைக்கு சேஷாத்ரி என்று பெயரிட்டனர். பின்னாளில் எல்லோரும் சேஷாத்ரி சுவாமிகள் என்று போற்றப்பட்ட ஞானக்குழந்தை அது!

குழந்தை வளர்ந்து ஓடியாடி வேலைசெய்யும் தருணத்தில், காஞ்சி வரதர் கோயிலில் விழா. அம்மாவுடன் கோயிலுக்குச் சென்ற சிறுவன் சேஷாத்ரி, விற்பனைக்கு வைத்திருந்த பொம்மைகளைப் பார்த்து நின்றான். ‘எனக்கு அந்த பொம்மை வேண்டும்’ என்றான். அது... கிருஷ்ணர் பொம்மை. நவநீதக் கிருஷ்ணர் பொம்மை. நவநீதப் பிரசாதத்தால் பிறந்த சேஷாத்ரி, நவநீதர் பொம்மையைக் கேட்டதிலென்ன ஆச்சரியம். அந்தக் கடைக்காரருக்கு முதல்போணி... அன்றைய முதல் வாடிக்கையாளர் சேஷாத்ரிதான்.

மறுநாள்... அந்த பொம்மைக்கடை பக்கம் போகும்போது, ஓடிவந்து குழந்தையை அணைத்துக் கொண்டார் வியாபாரி. ‘வரதருக்கு நடக்கற விழால, மொத்தமா ஆயிரம் பொம்மை விக்கும். ஆனா நேத்திக்கு ஒரே நாள்ல, ஆயிரம் பொம்மை வித்துருச்சு. எல்லாம் இந்தக் குழந்தையோட ராசி. தங்கக்கை இவனுக்கு’ என்று சிலிர்த்தபடி சொன்னார். பின்னாளில்... சேஷாத்ரி சுவாமிகளை எல்லோரும் தங்கக்கை சேஷாத்ரி சுவாமிகள் என்று சொன்னார்கள்.

சேஷாத்ரிக்கு 17 வயது ஆன நிலையில், திருமணத்துக்காக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோஸியரிடம் போனார்கள். ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘இது சந்நியாஸ ஜாதகம். யோக ஜாதகம். யோகி ஜாதகம். பெரிய மகானா வரப்போறார்’ என்றார் ஜோதிடர்.

அதையடுத்து, சேஷாத்ரி எனும் இளைஞன், கொஞ்சம்கொஞ்சமாக சந்நியாச நிலைக்குச் சென்றார். அம்மா, அவரை அழைத்து, ‘அருணாசலம் அருணாசலம் அருணாசலம்’ என்று சொல்ல, காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சென்றார். அந்த அருணைநகரம் முழுவதும் ஓடினார். ஆடினார். திடீரென்று கடை வாசலில் நின்றார். அந்தக் கடையில் வைத்திருந்த உணவுப் பொருட்களில் இரண்டை எடுத்து, வீசினார். அங்கே அன்றைக்கு வியாபாரம் அமோகமாயிற்று.

வேறொரு கடைக்குச் சென்று எச்சில் துப்புவார். அரைமணி நேரத்தில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. நல்ல குணம் கொண்டோர் வந்தால், வாழ்த்துவார். துர்குணங்கள் கொண்டவர்கள் வந்தால், கல் வீசி விரட்டுவார். யாரையேனும் அழைத்து பளாரென கன்னத்தில் அறைந்தாலோ, முதுக்கில் சுள்ளென்று அடித்தாலோ, நெஞ்சில் தடக்கென்று குத்தினலோ... அவர்கள் ஏதோவொரு வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இனி அந்த வியாதியில் இருந்து அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்று பொருள்!

திருவண்ணாமலை கோயிலில், பாதாள லிங்க சந்நிதிக்குள் நெடுநாட்களாக அமர்ந்து தியானம் செய்வதவரின் உடம்பில் பூச்சிகள் கடித்து புண்ணாகிவிட்டிருந்தன. ஆனால் தவத்தில் இருந்து மீளவே இல்லை அவர். ‘நான் அம்பாள் அம்சம். காமாட்சி தான் நான். உண்ணாமுலையே நான். பராசக்தி நானே. அதோ.. என் மகன் கந்தன் உள்ளே இருக்கிறான்’ என்று சேஷாத்ரி சுவாமிகள், உள்ளே தவமிருந்தவரை பூச்சிகள் கடித்த நிலையில் இருந்தவரை, வெளியே தூக்கி வந்தார். அவர்தான்... பகவான் ரமண மகரிஷி.

காமகோடி குடும்பத்தில் இருந்து வந்த சேஷாத்ரி சுவாமிகள், தானே ஓர் காமாட்சி அன்னையின் வடிவம் என்று பக்தர்களுக்கு உணர்த்தினார். ’என்னை எல்லோரும் சின்ன சேஷாத்ரி என்று அழைத்தார்கள்’ என்று சேஷாத்ரி சுவாமிகளின் சரிதத்தை புத்தகமாக எழுதிய போது, அதன் முன்னுரையில் பகவான் ரமணர் குறிப்பிட்டிருந்தார்.

பகவான் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தடியிலேயே அமர்ந்திருப்பவர். இங்கே சேஷாத்ரி சுவாமிகள், தட்சிணாமூர்த்தியின் அம்சம். குருவானவர். ஆனால் எல்லா இடங்களுக்கும் சஞ்சாரம் செய்வதால், இவர் சஞ்சார தட்சிணாமூர்த்தி என்று புகழ்ந்து வணங்கினார்கள்.

சேஷாத்ரி சுவாமிகள், காமாட்சி அம்சம். சேஷாத்ரி சுவாமிகள் தட்சிணாமூர்த்தியின் வடிவம். சேஷாத்ரி சுவாமிகள், மகா யோகி. சேஷாத்ரி சுவாமிகள், தங்கக்கை கொண்டவர். கைதூக்கி சொன்னதெல்லாம் நடந்தது. தொட்டதெல்லாம் துலங்கியது. பட்டதெல்லாம் நோய் நீங்கப் பெற்றார்கள் பக்தர்கள்.

அவரின் பக்தர்கள், பிள்ளையார் சுழி போல், சிவமயம் என்று எழுதுவது போல், ‘பித்தன் துணை’ என்றுதான் இன்றைக்கும் எழுதிவிட்டு, மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்கக்கை சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தித் திருநாள் இன்று. ‘பித்தன் துணை’ என்று மனதுக்குள் சொல்லி, அந்த தங்கக்கை சேஷாத்ரி சுவாமிகளை வணங்கி, குருவருளைப் பெறுவோம்!

பித்தன் துணை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்