திருவையாறில் இன்று தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா தொடக்கம்: ஜன.30-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா இன்று (ஜன.26) மாலை தொடங்குகிறது.

இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைக்கிறார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இரவு 7 மணிக்கு காயத்ரி வெங்கட்ராமன் பாட்டு, 7.20 மணிக்கு கணேஷ், குமரேஷ் வயலின், 8 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணை, 8.20 மணிக்கு குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாட்டு, 8.40 மணிக்கு ஷோபனா விக்னேஷ் பாட்டு, 10 மணிக்கு திருமானூர் கணேசன், கருணாநிதி குழுவினரின் நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, வரும் 30-ம் தேதி வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30 -ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்னாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு, பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசைஅஞ்சலி செலுத்த உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE