பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
வாழ்க்கைப் பயணமும் சரி... தேடுதலுக்கான பயணமும் சரி... மிகப்பெரிய சுவாரஸ்யங்களும் ஆச்சரியங்களும் கொண்டவையாகவே இருக்கின்றன. இதுதான் முடிவு என்று நாம் சொல்லும் போது, அங்கே ஒரு ஆரம்பத்தை வைத்திருப்பான் இறைவன். இதுதான் ஆரம்பம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அதை ஆரம்பத்திலேயே முடித்து வைத்து விடுவான் கடவுள்! இதுதான் ஆச்சரியம்... இவைதான் சுவாரஸ்யம்!
உலகாயத வாழ்வில், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கே இவ்வளவு சுவாரஸ்யங்கள் இருக்கின்றன எனில், மகான்களின் தேடல் குறித்துச் சொல்ல வேண்டுமா என்ன?
அவர்களின் தேடல்களின் போதும் தேடிப் பயணப்படுகிற போதும் கிடைக்கிற அனைத்தும் மிகப்பெரிய அற்புதங்கள் நிறைந்தவை. மகான்களின் வாழ்வு என்பது கிட்டத்தட்ட அற்புதங்களால் நிரப்பட்டதாகவே அமைந்திருக்கின்றன. ஏனெனில், கடவுளுக்கும் அவர்களுக்குமான தொடர்பும் உறவுமே அற்புதமானதுதான், இல்லையா?
சாதுக்கள் என்று ஞானிகளையும் மகான்களையும் சொல்கிறோம். ‘எப்போதும் கடவுளின் நினைவிலேயே திளைப்பவர், இருப்பவர்’ என்று அர்த்தம். அதாவது சாதுக்கள் என்றால், கடவுள் நினைப்புடனே சதாசர்வகாலமும் இருப்பவர்!
அப்படியான சாது ஒருவர்... மகான் ஒருவர்... 1884ம் வருடம் அவதரித்தார். இந்த உலகை உயிர்ப்பிப்பதற்காகவும் உன்னதங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் கடவுளால் அடையாளம் காணப்பட்ட மகான்களில் இவரும் ஒருவர்.
சதாசர்வ காலமும் ஸ்ரீராமபிரானையே நினைத்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீஅனுமன். ராமபக்தன் என்கிற அடைமொழியைக் கொண்ட அனுமனின் பராக்கிரமும் பக்தியும் சொல்லிச் சிலிர்க்கக் கூடியவை. இவரின் அவதார நன்னாளை, அனுமன் ஜயந்தி என்று கொண்டாடுகிறோம். பூஜிக்கிறோம். வழிபடுகிறோம். இந்த நாளில், அனுமனைத் துதித்தும் அனுமன் சாலீசா பாடியும் சுந்தரகாண்டம் படித்தும் ராமபக்தியிலும் அனுமனை வணங்குவதிலுமாக அருள் பெறுகிறோம்.
அபபடியொரு அனுமன் ஜயந்தி நட்சத்திர நன்னாளில், 1884ம் வருடம் அவதரித்தார் அந்த சுவாமிகள். அது கடவுளின் தேசம் என்று போற்றப்படும் கேரளத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமம். அதேசமயம் காவிரி உற்பத்தியாகிற கர்நாடக மாநிலத்தின் பக்கமாகவும் இருக்கிற , அதாவது கேரள - கர்நாடக எல்லைப் பகுதியையொட்டி அமைந்திருக்கிற ஊர் அது.
அப்பா பாலகிருஷ்ண ராவும் அம்மா லலிதா பாயும் சீராட்டி வளர்த்தார்கள். குழந்தையாக தவழ்ந்து, நின்று, நடக்கத் தொடங்கி, பேச ஆரம்பித்த போது அந்தக் குழந்தையின் முகத்தில் அப்படியொரு ஒளி படர்ந்து பரவியிருந்தது. எப்போதும் துறுதுறுவென ஓடியாடித் திரிந்த சிறுவனை, எல்லோருக்கும் பிடித்திருந்தது.
ஆனால், படிப்பு வரவே இல்லை. புத்தகமும் எழுத்துகளும் கண்களைக் கூசின. சொற்கள் அனைத்தும் கசந்தன. படிப்பில் மந்தம் என்றே எல்லோராலும் சொல்லப்பட்டான் அந்தச் சிறுவன். படிப்பு வேம்புதான். ஆனாலும் கேட்பவை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிற புத்தி இருந்தது. எதையும் ஒரு முறை சொன்னால் போதும்... அப்படியே மூளையில், மனதில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் கண்டு எல்லோருமே பிரமித்தார்கள்.
கணக்குப் பாடம் கஷ்டமாக இருந்தது. மற்ற பாடங்களிலும் மனம் ஒட்டவில்லை. ஆனால், ஆங்கிலம் ஏனோ தித்தித்தது. ஆங்கிலத்தின் சொல்லாடல்களும் அதன் இலக்கணங்களும் சிறுவனை ரொம்பவே வசீகரித்தன. ஆங்கில மொழியால் ஈர்க்கப்பட்டான். அதில் தேர்ச்சி பெற்றவன் எனும் பெயரெடுத்திருந்தான்.
இறை வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த குடும்பம் அவர்களுடையது. ஆகவே எப்போதும் ஏதேனும் பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். நல்லநாள் பெரியநாள் என்று சின்னச்சின்னதான விஷயங்கள் கூட, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்தப் பூஜையை ஸ்பஷ்டமாகச் செய்வதில் அலாதி ஆனந்தம், அவனுடைய குடும்பத்தாருக்கு!
அந்தச் சிறுவன், பக்தி சூழ வளர்ந்தான். இறை நினைப்பிலேயும் கடவுள் தொடர்பான சிந்தனைகளிலேயேயும் வளர்ந்தான். அவன் இளைஞனாக, பொலிவான தேஜஸூடன் வலம் வந்த போது, அவனுடைய 22வது வயதில், திருமணம் நடத்திவைக்கப்பட்டது. ருக்மாபாயை (ருக்மிணி பாய் என்றும் சொல்வார்கள்) மணம் புரிந்து கொண்டார் அவர்!
பிறகு, அவருடைய 29வது வயதில் மகள் பிறந்தாள். ரமாபாய் என்று பெயரிட்டார்கள். ஒருபக்கம் இறை பக்தி, இன்னொரு பக்கம் இல்லறம் என்று வாழ்க்கை ஓடியது. ஆனால் இறைபக்தியே ஓங்கியிருந்தது. எந்நேரமும் கடவுளைப் பேசுவதும் கடவுளைப் பாடுவதும் அந்தப் பாடல்களின் அர்த்தங்களிலும் மூழ்கிக் கிடந்தார் அவர். நடுவே, அமைதிக்குச் சம்பந்தமே இல்லாத வியாபாரம் வேறு, இவரை ரொம்பவே நெருக்கியடித்தது.
இந்தத் தருணங்களில், இன்னும் கடவுளை நெருங்க முயற்சிகள் மேற்கொண்டபடியே இருந்தார். அப்படியான இறை நினைப்பே, அவருக்கு அமைதியையும் உள்ளே இன்னுமான தெளிவையும் கொடுத்தது. மீதமுள்ள நேரங்களில், குழந்தையுடன் பொழுதைக் கழித்தார். கடவுளும் குழந்தையும் ஒன்றென உணர்ந்திருந்தார்.
வியாபாரம், குடும்பம், இறைத் தேடல் என மூன்று வகையான பாதையிலும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டே இருந்தார். இது ஒருகட்டத்தில் உள்ளே சோர்வைக் கொடுத்தது. இப்போது எது நம் இலக்கு. காசு சம்பாதிப்பதா. மனைவி குழந்தையுடன் குதூகலமாக இருப்பதா. அல்லது உள்ளே அமைதியுடன் அமைதி தேடி ஆண்டவனைத் தேடி பயணிப்பதா. தீர்மானிக்க முடியவில்லை அவரால்!
அவர், அதைத் தீர்மானிக்க முடியாது. ஏனெனில், கடவுள் ஓர் தீர்மானம் போட்டு, அதை நடத்திக் கொண்டே இருக்கிறார். அப்படியொரு காலகட்டம் வரும்போதெல்லாம், தனக்கானவரைத் தேர்வு செய்து கொள்கிறார் இறைவன்.
அப்படி கடவுளால் சாதுவாகவும் குருவாகவும் மகானாகவும் அடையாளம் கண்டுணரப்பட்டார் அவர். அப்போது வரை, அவரால் அதை உணரமுடியவில்லை. தவித்தார். மருகினார். சிலசமயம் துவண்டார். ஏதோவொன்று கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தார். எதுவுமற்ற நிலையாக இருக்கிறதே என்று இன்னும் மூழ்கினார்.
இந்த சமயத்தில்தான்... அவருடைய தந்தையார் அவரை அழைத்தார். மகனின் நிலையை, அவரின் குழப்பத்தை உணர்ந்தவராக, அருகில் அமரவைத்துக் கொண்டார். ‘எதையும் போட்டு குழப்பிக்காதே. பகவானைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அவனோட திருநாமத்தை, சொல்லிக்கிட்டே இரு. உனக்குள்ளே ஒரு தெளிவு கிடைக்கும். உனக்கான விடியல் நிச்சயம் பிறக்கும்’ என்று சொன்னார்.
அதுமட்டுமா?
அப்போது மகனுக்கு இந்த உபதேசத்தையும் வழங்கி அருளினார். தந்தையாகவும் இருந்து குருவாகவும் இருந்து அவர் வழங்கிய உபதேசம், மிக மிக எளிமையானது.
அந்த மந்திரம் போலானச் சொற்கள்...
‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்’
அதன் பிறகு, இதையே மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தார். ஒரு ஜபம் போல் சொல்லிக் கொண்டே இருந்தார். இதன் பிறகுதான்... அந்த ஊரில், அப்படியொரு மகான் வாழ்கிறார் என்பதே பலருக்குத் தெரிந்தது.
அவர்... பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.
ராம்சுரத் குன்வர்... பகவான் யோகி ராம்சுரத்குமாராக, உன்னத மகானாக அவதாரம் எடுத்தது, சுவாமி பப்பா ராம்தாஸைத் தரிசித்த பிறகுதான்..!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
-ராம்ராம் ஜெய்ராம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago