கொடைரோடு அருகே குன்றின் மேல் ராவணனுக்கு சிறப்பு வேள்வி பூஜை - சிவனடியார்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நிலக்கோட்டை: கொடைரோடு அருகே இலங் கேஸ்வரன் என்ற ராவணனுக்கு தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜையை சிவனடியார்கள் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் ஓம் திருமேனி சங்கம ஆசிரமம் உள்ளது. இங்குள்ள தமிழ் ஆலயத்தில் ராமர் மற்றும் சீதாதேவிக்கு தமிழில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, நேற்று காலை குடவாசல் சுவாமிகள் தலைமையில், தமிழ் ஆலயம் அமைந்துள்ள குன்று பகுதியில் தமிழ் மன்னர்களில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்று அழைக் கப்பட்ட ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தினர்.

ராவணன் உருவப் படத்துக்கு முன்பு புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டும், தமிழகத்தில் விளைவிக்கப்படும் கனிகள் படைக்கப்பட்டும், தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. ராமாயண இதிகாசத்தில் தீவிர சிவ பக்தராக அடையாளப் படுத்தப்பட்ட ராவணனின் சிவ பக்தியை போற்றும் விதமாக, பதினோராவது சித்தர் கருவூரார் சுவாமிகளின் குரு வழிபாட்டு சீடர்களான சிவநெறிச் செல்வர்கள் தமிழில் வேத மந்திரங்களை முழங்கினர்.

தொடர்ந்து, சித்த ராமாயணம், ராவண காதை, மண்டோதரி வாக்கு, ராவணன் நீதி, சீதை நீதி என பெயரிடப்பட்ட 60 நூல்கள் குறித்து விளக்கச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. ராவண யாக வேள்வி பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவபக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE