கோலாகலமாகத் தொடங்கிவிட்டது கார்த்திகை மாதம். ஒரு மாதத்தின் பிறப்பை, இப்படிக் கொண்டாட்டமாக, குதூகலமாக, பக்திசிரத்தையாக, மணம் கமழச் செய்த பெருமை, ஐயப்ப சுவாமிக்கும் ஐயப்ப பக்தர்களுக்குமே ஆன ஒன்று!
கார்த்திகை மாதம் துவங்கிவிட்டாலே, வண்ண வேட்டிகளை அணிந்து, கழுத்தில் துளசி மாலை அணிந்து, நெற்றியில் மணக்க மணக்க சந்தனத்தை இட்டுக் கொண்டு, ‘சுவாமி சரணம்’ எனும் வார்த்தையை, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு, பாட்டு, பஜனை, பூஜை என ஊரையே மகிழச் செய்துவிடுவார்கள் ஐயப்ப பக்தர்கள். நம்மை அந்த பக்திக்கூட்டத்துக்குள் கைப்பிடித்து இழுத்துக் கொண்டுவிடுவார்கள்.
வருடந்தோறும் தவறாமல் செல்லும் பக்தர்கள், தவறாமல் கடைப்பிடிக்கும் விரதமுறைகள் பலருக்கும் தெரிந்ததுதான். என்றாலும் கன்னிசாமிகளாக, முதல்முறை மாலையணிந்து விரதம் மேற்கொள்பவர்களுக்காக, ஐயப்ப மலைக்கு மாலையணியும் பக்தர்களின் விரத முறைகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போமா?
என் நண்பர் அடிக்கடி சொல்வார்... ‘‘எந்தவொரு விஷயத்தையும் 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கச் சொல்கிறது விஞ்ஞானம். அதாவது ஒருவர், காலையில் 5 மணிக்கு எழுந்திருந்ததே இல்லை. ஆனால் இனி எழவேண்டும் என திட்டமிடுகிறார். ஆனால், ஒருநாள் இரண்டு நாள் ஆர்வத்துடன் எழுந்திருப்பார். மூன்றாவது நாளோ நான்காவது நாளோ, அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்ததலோ அல்லது தாமதமாகத் தூங்கியிருந்ததாலோ அல்லது காலையில் மழை பெய்து கொண்டிருந்தாலோ என இவற்றையெல்லாம் காரணமாக நினைத்துக் கொண்டு, எழுந்திருக்கமாட்டார்.
ஆனால் இவற்றையெல்லாம் ஒரு தடையாகக் கருதாமல், மன உறுதியுடன் ஒருவர் 21 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டால், பிறகு ஒரு அலாரம் அவர் மூளைக்குள் செயல்படத் தொடங்கிவிடும். உடலானது பழக்கமாகிவிடும். பிறகு அவரே நினைத்தாலும் ஐந்து மணிக்கு எழுந்திருப்பதைத் தடுக்கமுடியாது’’ என்பார்.
ஒருவகையில் இந்த விஞ்ஞானக் கணக்கு, நேரடிக் கொள்முதல் அல்ல. மெய்ஞானத்தில் இருந்து கடன் வாங்கிக் கணக்கு வகைதான். ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் கூட, ‘‘இந்த மருந்தை, தொடர்ந்து 48 நாட்கள் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் நோயானது குணமாகிவிடும்’’ என்று சொல்கிறது. ஐயப்ப சுவாமிக்கு நாம் இருக்கிற 48 நாள் எனப்படும் விரதம், ஒரு மண்டலமாகச் சொல்லப்படுகிறது. இந்த மண்டல காலத்தில் எவரொருவர் கர்மசிரத்தையுடன் விரதம் மேற்கொள்கிறார்களோ... அவர்களின் உடலும் மனமும் புத்தியும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதாகி விடுகின்றன என்பதே சத்தியம். அப்படியான கட்டுக்கோப்பும் எல்லாச் செயல்களுக்குமான அஸ்திவாரமும்தான் இந்த ஐயப்ப விரத முறைகள்!
சரி.. விரத முறைகளைப் பார்ப்போம்.
* கார்த்திகை மாதப் பிறப்பில் விரதம் இருக்கத் துவங்கினால், நாள் பார்க்கத் தேவையில்லை. அடுத்தடுத்த நாளில் விரதத்தைத் துவங்குவோர், நிச்சயமாக நாள் பார்த்து விரதம் மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள் சிலர். நாளும்கோளும் நமக்குத்தான். ஐயப்ப சுவாமியை மனதில் இருத்திக் கொண்டு, விரதம் துவங்குவதற்கு நாளும் தேவையில்லை; நட்சத்திரமும் பார்க்க வேண்டாம் என்கிறார்கள் இன்னும் சிலர். இவற்றையெல்லாம் விட, உங்களை மலைக்கு அழைத்துச் செல்லும் குருசாமி என்ன சொல்கிறாரோ, அதன்படி கேட்டு, விரதத்தைத் தொடங்குங்கள்.
* சுமார் 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த 41 நாள் விரதம், உங்கள் உடலையே புத்துணர்ச்சியாக்கி விடும். மனதை மலர்ச்சிப்படுத்திவிடும்.
48 நாள் விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பல குருசாமிகள் சொல்கிறார்கள். அதற்கு ஓர் காரணமும் சொல்லப்படுகிறது. ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள். மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதேபோல் 12 ராசிகள் அமைந்து உள்ளன. ஒன்பது கிரகங்கள், அதாவது நவக்கிரகங்கள் இருப்பதையும் அறிவோம். இவற்றையெல்லாம் கூட்டினால் வருவது 48. எவரொருவர் 48 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்களோ, ஐயப்ப சுவாமியை இந்த நாட்களில் மெய்யுருக நினைத்து, பக்தி செலுத்துகிறார்களோ அவர்களுக்கு நட்சத்திரத்தாலும், ராசியாலும், கிரகங்களாலும் எந்த தோஷங்களும் நெருங்காது. அவர்களை பகவான் பார்த்துக் கொள்கிறான் என்கிறார்கள் குருசாமி மார்கள்.
* துளசிமாலை 108 மணிகள் கொண்டதாக அணியவேண்டும். அதேபோல், ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டால், அதில் 54 ருத்திராட்சமணிகள் கொண்டதாக அணிந்துகொள்ளவேண்டும். அதில், ஐயப்பனின் திருவுருவம் பொறித்த டாலரை இணைத்து அணிந்து கொள்கிறார்கள். துளசி என்பது பெருமாளுக்கு உரியது. ருத்திராட்சம் என்பது சிவனாருக்கு உரியது. ஐயப்ப ஸ்வாமி, சிவனாரும் விஷ்ணுவும் இணைந்த அம்சம்!
* காலையும் மாலையும் குளிக்கவேண்டும். அப்படிக் குளிப்பதால், உடலானது குளிர்ச்சி அடைகிறது. வெம்மை குணம் கொண்ட துளசிமாலை, உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
* பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்களின் ஆசியுடன், குருநாதரின் உதவியுடன் மாலையணிந்து விரதம் துவங்குவது உத்தமம். துவக்கத்தின் போது, குருசாமி யார் என முடிவு செய்யாத பட்சத்தில், கோயிலுக்குச் சென்று, ஸ்வாமியின் திருப்பாதத்தில் மாலையை வைத்து, ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையணியலாம். விரதம் துவங்கலாம்!
* கோபத்தைக் குறைப்பது உத்தமம். எல்லோரிடமும் அன்பாகப் பேசவும் பழகவும் செய்யுங்கள். கோபக்காரன் என்று பெயரெடுத்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களே நம்மிடம் நெருங்கமாட்டார்கள். அப்படியென்றால், கடவுள் எப்படி நம்மருகே வருவார்... யோசியுங்கள்.
* தினமும் காலையும் மாலையும் வீட்டில், பூஜையறையில் சரண கோஷங்களைச் சொல்லி ஐயப்பனை வணங்கவேண்டும்.
* விரத நாட்களில், முடி வெட்டவோ, தாடி மழிக்கவோ கூடாது. நகம் வெட்டுவதையும் தவிர்க்கவேண்டும்.
* வழக்கமாக படுக்கை, மெத்தை, கட்டில் ஆகியவற்றில் தூங்குபவர்கள், விரத காலத்தில் இவற்றில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். துண்டு அல்லது போர்வையை விரித்து, மணைப்பலகையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
* மரணம் முதலான துக்க காரியங்களில், ஐயப்ப மாலை அணிந்தவர்கள் மட்டுமின்றி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட கலந்துகொள்ளக் கூடாது. மிக முக்கியமான உறவுக்காரர்கள், நண்பர்கள் இறந்துவிட்டால், ஐயப்ப மாலையை கழற்றி, ஸ்வாமி படத்தில் மாட்டிவிட்டு, துக்க காரியத்துக்குச் செல்லவேண்டும். பிறகு ஒரு வருடத் தீட்டு முடிந்த பிறகே, அடுத்த வருடம்தான் மாலையணிந்து செல்லவேண்டும். அதேபோல், பெண்ணின் சடங்கு, குழந்தை பிறந்து பெயர்சூட்டுதல் முதலான விழாக்களையும் தவிர்க்கவேண்டும்.
* மது, அசைவம், புகைப்பிடித்தல் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே சொன்னது போல், ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும்போது, இவற்றைத் தவிர்த்துவிட்டால், பிறகு மதுவில் இருந்தும் புலாலில் இருந்தும் புகைப்பதில் இருந்தும் மொத்தமாகவே விடுபட்டுவிடலாம்.
* வீட்டில் பெண்கள் மாதவிலக்காகி ஏழு நாட்கள் கழித்தே அவர்கள் சமைத்த உணவைச் சாப்பிடவேண்டும். நிறையபேர், இந்தக் காலகட்டத்தில், ரொம்பவே டென்ஷனாகிவிடுகிறார்கள். மனைவியை மகளை, ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் வேறு எங்கேனும் தங்குகிறார்கள். இந்த நாட்களில், கடுகடுப்பாகவும் சிடுசிடுப்புடனும் இருப்பார்கள். இவையேதும் தேவையே இல்லை என்கிறார்கள், முப்பது வருடங்களுக்கும் மேலாக மலைக்குச் சென்று கொண்டிருக்கும் குருசாமிகள்.
* குருநாதரின் துணையுடன் இருமுடி கட்டிக் கொள்வதும் அவருடனே சபரி யாத்திரைக்குச் செல்வதும் நல்லது.
* முன்னதாக, நம்மால் முடிந்த அளவுக்கு ஐயப்ப பூஜை நடத்தி, அன்னதானம் வழங்குவது சிறப்பு.
* பம்பா நதியில் நீராடும் போது, இறந்து போன முன்னோர்களுக்கு அங்கே ஈமக்காரியங்கள் செய்யலாம். அவர்களின் ஆசி அப்போது பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்! அதேசமயம், பம்பை எனும் புண்ணிய நதியை, மாசு படுத்திவிடாதீர்கள். ஐயப்ப சுவாமி நீராடிய நதி. அதில் தண்ணீரெடுத்து கொப்புளிப்பதோ, நம் ஆடைகளை அதில் விட்டுவிட்டால், தோஷங்களும் பாபங்களும் விலகிவிடும் என்று அதில் துணிகளை விடுவதோ தவறு. தவிர, நதிகளை அசுத்தப்படுத்துவது மகா பாபம்.
* குருநாதரையும் மற்ற சாமிமார்களையும் நமஸ்கரிக்கவேண்டும். பார்க்கும் போது, சுவாமி சரணம் என்று சொல்லி வணக்கம் செலுத்த வேண்டும்.
* ஐயப்ப மலையில், பதினெட்டுப் படிகளேறி ஐயப்ப ஸ்வாமியைத் தரிசிப்பதே சிறப்பு. வாழ்வின், பதினெட்டுத் தத்துவங்களை உள்ளடக்கிய அந்தப் படிகளைக் கடந்து ஸ்வாமி தரிசனம் செய்வதே உத்தமம்!
* தரிசனம் முடிந்து வீடு திரும்பியதும், அந்தப் பிரசாதத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, நடக்க இயலாதவர்கள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோருக்கு வழங்கவேண்டும் என்பது ஐதீகம்!
‘அவ்வளவுதான். கார்த்திகை பிறந்தாச்சு. விரதம் இருந்தாச்சு. ஐயப்பனையும் பார்த்தாச்சு’ என்று விரதம் பூர்த்தியாகலாம். ஆனால் நாம் எப்போதும் ஐயப்ப பக்தர்தானே!
எனவே, கூடுமானவரை விரத காலத்தில் அனுஷ்டித்த, கடைப்பிடித்த நல்ல விஷயங்களைத் தொடர்வதே உண்மையான பக்தருக்கு அழகு! எனவே ஒழுக்கத்தை மீறாமல், பெரியவர்களை வணங்கி, கோபதாபங்களைத் தவிர்த்து, நல்ல வார்த்தைகளைப் பேசி, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள ஐயப்ப ஸ்வாமி ஆலயத்துக்குச் சென்று, வழிபடுங்கள். இன்னும் வளமுடன் வாழ்வீர்கள்.
இன்னொரு விஷயம்... ஐயப்பனுக்கு விரதம் இருக்கிறேன், ஐயப்பனுக்கு விரதம் இருக்கிறேன் என்று சொல்கிறோம். உண்மையில்... நமக்காகத்தான் இந்த விரதம். நம்மை செம்மைப்படுத்துவதற்கும், மலர்ச்சியாக்குவதற்கும்தான் இந்த விரத அனுஷ்டானங்கள், சடங்கு சாங்கியங்கள்!
இதுவரை எப்படியோ... இந்த முறை... முழுக்கட்டுப்பாட்டுடன் உறுதியுடன் கர்மசிரத்தையுடன் விரதங்களை அனுஷ்டியுங்கள். கடைபிடியுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படும் நல்ல நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். ஐயனின் அருளையும் பெறுவீர்கள்.
சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
முதல் பாகம்: ‘சுவாமி சரணம்..!’ 1 - ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
41 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago