தேனி மாவட்டத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது.

பெரியகுளம் அருகே எண்டபுளி ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயிலில், அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் சிறப்புகள், ராமர் அவதாரம் குறித்த சொற்பொழிவு நடந்தது. பின்பு ஸ்ரீராமரின் திருஉருவப் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு வழிபட்டனர்.

எண்டபுளி ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயிலில் நடந்த வழிபாட்டில் திரளாக கலந்து கொண்ட கிராமமக்கள்.

அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாஜக தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பி.இராஜபாண்டியன் செய்திருந்தார். கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் கோயிலில் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து ராமபிரான் பாடல்களை பாடி ஆராதனை செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டன.

அயோத்தியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

தேனி அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டுக்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பிரசாத் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், பாஜக வர்த்தகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீராமருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கூட்டு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தேனி நகரின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ராமரின் திருவுருவப்படத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்து அமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE