திருவையாறு என்றதும் சட்டென்று ஐயாறப்பர் ஆலயமும் அசோகா அல்வாவும் நினைவுக்கு வரும். அந்த இறைவனுக்கு இசையால் இனிக்க இனிக்க பாடல்கள் பாடி மகிழ்வித்தவரின் அதிஷ்டானமும் நினைவுக்கு வந்தே தீரும். அவர்... தியாகய்யர். நாளைய தினம்... 6ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா!
தியாகப்பிரம்மம் என்றும் தியாகய்யர், தியாகராஜ சுவாமிகள் என்றும் கொண்டாடப்படும் இசை மகான் என்று போற்றுகிறார்கள் இசைக்கலைஞர்கள். வருடந்தோறும் மார்கழியில் நடைபெறும் இவருக்கான ஆராதனைப் பெருவிழாவில், ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் வந்திருந்து, தங்களின் இசையால், இந்த இசைமகானை ஆராதித்து, வணங்கி மகிழ்கிறார்கள்.
கடந்த நான்கு நாட்களாகத் தொடங்கி நடைபெற்று வரும் தியாகராஜர் ஆராதனைப் பெருவிழா, நாளை முக்கிய நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி வணங்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவும் கேட்கவும் சிலிர்த்துப் போவோம்!
1767ம் வருடம் திருவாரூரில் பிறந்தவர் தியாகபிரம்மம். ஆரூரில் பிறக்க முக்தி என்பார்கள். அந்த ஆரூரில் பிறந்ததால்தான் அங்கே உள்ள சிவனாரின் திருநாமத்தையே குழந்தைக்குச் சூட்டினார்கள். ராமபிரம்மம் சீதம்மா தம்பதி, சீரும் சிறப்புமாக வளர்த்தார்கள் குழந்தையை! தியாகராஜரின் தாத்தா, வீணா காளஹஸ்தி ஐயர், தஞ்சாவூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய வித்வான்.
அம்மா மிக அழகாகப் பாடுவார். தாத்தா வித்வான். அப்பாவோ கல்விமான். ஆக, கலையும் கல்வியும் பாடலும் இசையுமாகவே கிடைத்து இசைபட வாழ்ந்தார் தியாகப்பிரம்மம். இவரின் தந்தையார், ராமநவமி உத்ஸவ காலங்களில் தஞ்சை அரண்மனையில் உபந்யாசம் செய்வார். அதைக் கேட்பவர்கள் கரகரவென அழுதே விடுவார்கள். அத்தனை உணர்ச்சிமயமாகச் சொல்வாராம்!
ஒருகட்டத்தில், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர்ப் பக்கமே வரச்சொல்லிவிட்டார் சமஸ்தான மகாராஜா. மனைவி குழந்தைகளுடன் திருவையாறில் குடியேறினார். அங்கே அவர்களுக்கு வீடும் பசுபதி கோவில் பக்கத்தில் நிலமும் எழுதித் தந்தார் மன்னர்.
சிறுவன் தியாகராஜன், சொண்டி வீணா வெங்கட்ரமணா என்பவரிடம் இசை பயின்றான். தன் குரலால், குழைவால், தாம் சொல்லித் தரும் பாடலை, தியாகராஜன் பாடும் விதம் கண்டு மலைத்துப் போனார். பிறப்பிலேயே ஞானம் இருந்தாலொழிய, இத்தனை வசீகரமும் பாவனையும் குரலில் இருக்காது என உணர்ந்து பிரமித்தார்.
சிவா, விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் போல், முப்பெருந்தேவியர் போல், இசையில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இசை மேதைகள், இசை மகான்கள், மும்மூர்த்திகள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறார்கள். முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் இந்த மூவரும் இசையுலகின் கடவுளர்களாகவே இன்றைக்கும் வணங்கப்படுகிறார்கள்.
அப்போது, தியாகய்யருக்கு உஞ்சவிருத்தி செய்துதான் பசியாற வேண்டும். அப்படி உஞ்சவிருத்தி செய்துதான் தன் குடும்பத்தாரையும் தன்னிடம் பயின்ற சீடர்களையும் அரவணைத்து, வழிநடத்தி வந்தார்.
ஹரிதாஸ் எனும் அன்பர். காஞ்சிபுரத்துக்காரர். இவர் ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்படி சொன்னார். அதுவும் எப்படி? ராமநாமத்தை 96 கோடி முறை சொல்லச் சொன்னார். இவரும் சொன்னார். கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கிட்டத்தட்ட 21 வருடங்கள் விடாமல் சொல்லி வந்தார். தொடர்ந்து, ராமநாமத்தையே உச்சரித்து வந்த தியாகராஜருக்கு அந்த ராமபிரானின் பரிபூரண அருள் கிடைத்ததாகவும் அதனால்தான் இசையில் மிகப்பெரிய மகானாக, புதுப்புது இசையை அவர் வெளிப்படுத்தினார் என்றும் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்களும் இசைக்கலைஞர்களும்!
இசையில் புதுப்புது சங்கதிகளை உருவாக்கியவர் தியாகப்பிரம்மம். அதுவரை இசையையும் தாளத்தையும் ராகத்தையும் மாற்றி, புதிய புதிய உத்திகளில் மடை திறந்த வெள்ளமென அவர் பாடிப் பிரவாகிப்பதை அந்த ராமபிரானே வந்து கேட்டுச் செல்வார் என்கிறது தியாகய்யரின் சரிதம்!
தியாகப் பிரம்மம் என்றால் பஞ்சரத்ன கீர்த்தனை பிரசித்தம். நாளை 6.1.18 சனிக்கிழமை அன்று தியாகப்பிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனைப் பெருவிழா. தினமும் காலையும் மாலையும் அவரின் அதிஷ்டானத்தில் பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று க் கொண்டிருக்கின்றன. நாளைய தினம்... ஏராளமான இசைக்கலைஞர்கள், இசைப் பிரபலங்கள் திருவையாறில் சங்கமிக்கிறார்கள். அவரின் பாடல்களைப் பாடி, குறிப்பாக அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, குருமகானுக்கு ஆராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவையாறில்... காவிரிக் கரையில்... அதிஷ்டானத்தில்... இசைச் சங்கமம். முடிந்தால் உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லுங்கள். அவர்கள், அந்த குரு மகானின் அருளால், இசையில், கலையில் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி!
குரு மகானின், இசை மகானின்... தியாகப் பிரம்மத்தின் அருளைப் பெறுவோம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago