காஞ்சிபுரம்: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் ஜன. 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் பக்தர்கள் ‘ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்’ என்ற ராம மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜைன்), துவாரகா என்று பாரத தேசத்தில் கூறப்பட்டுள்ள மோட்சபுரிகளில் முதலாவதான அயோத்திக்கும் தெற்கே உள்ள ஒரே மோட்சபுரியான காஞ்சிக்கும் பன்னெடுங்காலமாக பல யுகங்களாக சரித்திரத் தொடர்பு இருந்து வருகிறது.
ரகுவம்ச சக்ரவர்த்தியான தசரத மகாராஜாவுக்கு சந்தான பிராப்தம் ஏற்பட பிரார்த்தனை செய்து வர, அவரது கனவில் குலதெய்வமான அயோத்தி ஸ்ரீ தேவ்காளி அம்பாள் தோன்றி, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் சென்று அம்பாளை தரிசித்து புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படி கூறி நிச்சயம் சந்தான பிராப்தி ஏற்படும் என்று ஆசிர்வதித்தார். அவ்வாறே காஞ்சியில் தசரத மன்னர் பிரார்த்தித்து, யாகத்தை செய்ததால், காமாட்சி அம்பாள் மகிழ்ந்து அசரீரி வாக்காக 4 மகன்கள் பிறப்பார்கள் என்று அருளினார். அவ்வாறே கோசலை, கைகேயி, சுமித்திரைக்கு ராமபிரான், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் பிறந்தனர்.
மேலும் பஞ்ச பூதங்களின் தொடர்பாக சைவ சமயத்தில் காஞ்சிபுரம் பிருத்வி தலமாகக் கருதப்படுவதைப் போல், சாக்த சமயத்தில் (தேவி உபாசனை) அயோத்தி பிருத்வி தலமாகக் கருதப்படுகிறது. ராமச்சந்திர மூர்த்தி தர்மத்தின் ஸ்வரூபமாகத் திகழ்பவர் என்று கூறப்படுகிறது. அவருடைய அவதாரத் தலமாகிய அயோத்தியில் ஒரு கோயில் அமைய பல ஆண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காஞ்சி ஆச்சார்யர்கள் மூவரின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
3 ஆச்சார்யர்களின் பங்களிப்பு: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி சமரசமாகத் தீர்வு கண்டு, ஸ்ரீ ராமபிரானுக்கு கோயில் எழுப்புவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அவற்றின் ஓர் அங்கமாக 1986-ம் ஆண்டு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரயாக்ராஜில் முகாமிட்டிருந்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோயில் நடை திறக்கப்படுவதை அறிந்து அங்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.
அதேசமயம், மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் காஞ்சியில் இருந்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வெண்குடையும், இரண்டு சாமரமும் ஸ்ரீமடம் நிர்வாகிகள் இருவர் மூலமாக விமானத்தில் அனுப்பி வைத்தார். அவற்றை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு 1989-ம் ஆண்டு, ஸ்ரீமடத்தில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கற்களை ஸ்ரீ காஞ்சி ஆச்சார்யர்கள் ஆசீர்வதித்து, விஷ்வ ஹிந்து பரிஷத்தினரிடம் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக அசோக் சிங்கால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அனைவரும் ஒன்று கூடி பேசினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்பதில் ஆச்சார்யர் உறுதியுடன் இருந்தார். இருதரப்பினருக்கும் இடையே சமரசமாகப் பேசி பல விஷயங்களை உறுதியாகவும், இதமாகவும் எடுத்துரைத்தார்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்இதைத் தொடர்ந்து, அனைத்தும் ஒப்புக் கொள்ளப்பட்டு, 2020-ம் ஆண்டு ஆக. 5-ம் தேதி, அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி தினமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் கோயில் அமைய அவர் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதலாம்.
அதே சமயம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூமி பூஜைக்கு முக்கியமானதான சங்குஸ்தாபனம் செய்வதற்கு கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்கையும் (அடிப்பாகம் சதுரமாகவும், மத்தியில் அறுகோணமாகவும், மேலே தாமரை மொட்டு போல கூர்மையாக முடிவது போல் செய்து), காஞ்சியில் இருந்து 2 செங்கற்கள், 5 தங்கக் காசுகள் (ஜயா, பத்ரா, நந்தா, ரிக்தா, பூர்ணா), பூமி பூஜை மற்றும் அனைவருக்கும் நன்மை கோரும் விபரங்கள் அடங்கிய தாமரைப் பட்டயம் உள்ளிட்டவற்றை சேகரித்திருந்தார். அவற்றை சண்டி யாகத்தில் வைத்து பூஜித்தார். அந்த சங்கை காஞ்சியில் உள்ள ஸ்ரீ சங்குபாணி விநாயகர் கோயிலில் வைத்து பூஜித்த பிறகு மகாஸ்வாமி, ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரின் பிருந்தாவனத்தில் வைத்து பிறகு, அவை அனைத்தையும் அயோத்தி அனுப்பி வைத்தார். ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் அவற்றைப் பெற்றுக் கொண்டு, சுவாமிகளின் அனுக்கிரஹத்தை நினைத்து பெருமிதப்பட்டனர்.
2023-ம் ஆண்டு காசியில் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அயோத்தியில் சாரதா நவராத்திரியை கடைபிடித்தார். விஜயதசமிக்கு மறுதினம் ஏகாதசி தினத்தில் ஸ்ரீராம் லல்லா சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு அங்கு நடந்து கொண்டிருக்கும் கோயில் நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிட்டார். சரயு நதியில் சங்கல்ப ஸ்நானம் அளித்து, மாலை தீபோத்ஸவம் நடத்தினார்.
அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகளை வழங்கியுள்ள ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிராண பிரதிஷ்டைக்கு நாள் குறித்தார். அவரது ஆலோசனையின் பேரில், யாகசாலை போன்ற வைதீக காரியங்களுக்கு காசியைச் சேர்ந்த கணேஷ்வர சாஸ்திரி திராவிட் என்பவர் நியமிக்கப்பட்டார். காசி லட்சுமிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். இவ்வாறு மூன்று ஆச்சார்யர்களும் ஸ்ரீராமபிரானுக்கு கோயில் அமைப்பதையும், தற்போது அமைந்துள்ள கோயிலுக்கு சாஸ்திரரீதியாக அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பதையும் தங்கள் சேவையாக செய்தனர்.
சப்த மோட்சபுரியில் ஒன்றான அயோத்தியில் அவதரித்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு ஜன. 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்த வேளையில், ‘ஸ்ரீராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்’ என்ற ராம மந்திரத்தை பாராயணம் செய்ய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சேது ராமச்சந்திரன்
(கட்டுரையாளர்: இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஓய்வு), காஞ்சி சங்கர மடத்தின் டிரஸ்டி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago