ஆல்கொண்டமால் கோயிலில் தமிழர் திருநாள் விழா: கால்நடைகள் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் தமிழர் திருநாள் விழா நேற்று உற்சாகமாக தொடங்கியது.

உடுமலை அடுத்த சோமவாரப்பட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை திரு நாளை முன்னிட்டு, தமிழர் திருநாள் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று ( ஜன.16 ) தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்புப் பூஜை, மாலை உழவர் தின சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயிலின் முன்பகுதியில் உள்ள கன்றுடன் கூடிய பசு சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான விவசாயிகள், தங்கள் கால்நடைகளுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது கறந்த பாலில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, அதனை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். நேர்த்திக் கடனாக பக்தர்கள்ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை உபயமாக அளித்தனர். இந்து சமய அற நிலையத்துறை சார்பில் பெறப்படும் உபய கால்நடைகளை பாதுகாக்க பிரத்யேகமான கூடாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் திருநாள் விழாவை முன்னிட்டு, கூடுதல் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனத்துடன் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் இருந்தனர். உடுமலையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆல்கொண்டமால் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE