ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி கோயில்களில் காணொலி மூலம் ஒளிபரப்ப முடிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணகாணொலியில் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக புதுவை இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன், புதுவை, காரைக்காலில் உள்ள அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 22-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, புதுவையில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஜன. 14-ம் தேதி முதல் உரிய முறையில் உழவாரப்பணி செய்ய வேண்டும்.

கோயில் உட்புறம், பிரகாரம், சுற்றுப்புறங்கள், சுவர்கள், தூண்கள், சிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். இதன் போட்டோக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும்.ஜன.22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோயில்களில் அன்று மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.

உச்சிகால பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE