‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

By ஜி.காந்தி ராஜா

கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான்.

கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் காலை 9 மணி. ஆபத்பாந்தவனுக்கு, அனாதை ரட்சகனுக்கு, மதகஜ வாகனனுக்கு அன்பொழுக, நடந்தது பக்தி பிரவாகமான பஜனை.

கரிவலம்தோடு பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் கிடையாது. சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த இடத்தில் யாரும் இரவில் தங்க மாட்டார்களாம். ஆற்றோரம் என்பதால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகளுடன் ஏனைய மற்ற வன விலங்குகளான புலி, சிறுத்தை, காட்டெருமை போன்றவைகளும் தண்ணீருக்காக தாராளமாக சஞ்சாரம் செய்யக்கூடிய அடர்வனம். அப்படியாகப்பட்ட இந்த இடத்தில் பகல் நேரத்தில் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமாக பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் சூரியன் பொழுது சாய்வதற்குள் விரைவாக நடந்து கரிவலம்தோடைக் கடந்து கரி மலை உச்சியினை அடைந்துவிடுவார்கள்.

அதற்கு இடைப்பட்ட நேரத்தில் மதிய பொழுதுகளில் கரிவலம்தோடுவில் சற்று இளைப்பாறி, பயமுறுத்தும் கரிமலை ஏற்றத்துக்கு தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். அவ்வளவுதான் கரிவலம்தோடுக்கும் பக்தர்களுக்குமான அதீத தொடர்பு.

அப்பேர்பட்ட அந்த கரிவலந்தோடு வனம் தான், பெய்த மழைக்கு மலையிலிருந்து இரவில் கீழிறங்கிய யானைகளிடம் இருந்து எங்களை காத்து கை தாங்கியிருந்து.

கரிவலம்தோடு இன்று காலமாற்றத்தினால் ஓரளவு மாறியிருக்கிறது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், காடு எப்போதும் காடுதான். இந்த சீஷன் நேரங்களில் மட்டும் கரிவலந்தோட்டின் ஆற்றின் கரைகளில் ஏராளமான விரிகள் விரிந்திருக்கின்றன. களைத்து வரும் பக்தர்கள் விரியில் விரித்துக் கிடக்கும் பாய்களில் அமர்ந்தோ அல்லது பிளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்தோ சூடாக பருகி, சாப்பிட கேரள கட்டாஞ் சாயா, வெங்காய வடையுடன் கிடைக்கிறது. பசிக்கும் வயிற்றிற்கு காலையில் கிழங்குடன் பூரியும், மதியத்தில் அரிசிக் கஞ்சியுடன் ஊறுகாயும் கிடைக்கிறது.

அந்தவகையில், 2020-ம் ஆண்டு யாத்திரையும் மறக்க முடியாதது. எங்கள் குழுவில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ல் மாலையிட்டு டிசம்பர் 15-ல் சபரிமலை யாத்திரை கிளம்பி விடுவோம். ஆனால் அந்த வருடம் மட்டும் நவம்பர் 15 மாலையிட்டு ஜனவரி 1-ம் தேதிக்கு மேல் மலைக்கு செல்கிறோம். பயணம் கிட்டத்தட்ட 9 நாட்கள் கொண்டதாக இருக்கிறது. எப்போதும் போல் எரிமேலி அன்றிரவு தங்கி, மறுநாள் காளைகட்டி வழியாக நடந்து குழிமாவில் தங்குவதாக திட்டம்.

2-ம் தேதி குழிமாவை அடைந்ததுமே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விரிக்கு ( விரி - தங்குமிடம் ) செல்வதற்கு முன்பான நான்கு முக்கு சந்திப்பில் பெரும் திரளாக பக்தர்கள் கூட்டமும், மக்கள் கூட்டமும் ஏதோ விபரீதத்தை உணர்த்தியது.

விசாரிக்கையில், முக்குழி வன பாதையில் குட்டியுடன் தாய் யானை ஒன்று நின்றுகொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டியிருக்கிறது. மலையாள விரிக்காரர்களும் யானையை விரட்ட பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். ஆனாலும், யானை அந்த இடத்தை விட்டு கிளம்புவதாக இல்லை. அதனால், முக்குழி வழியாக வனத்திற்குள் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நிறைய பேரை திருப்பி அனுப்பி கொண்டிருந்தார்கள்.

சரி. நமது பயணம் நாளைதான் என்பதால் அதற்குள் யானை இடம் மாறி சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் விரியில் தங்கிவிட்டோம்.

மறுநாள் காலை. எல்லோரும் ஸ்ரீபாயில் வைக்கப்பட்டிருந்த இருமுடியை சுற்றி வந்து ஆயத்தமாகி, சூடமேற்றி ஆரத்தியில் வனதேவதைகளை வேண்டிய, ஒவ்வொரு ஐயப்பமார்களையும், குரு ஐயப்பன், பெயர் சொல்லி அழைக்க ஓடி நமஸ்கரித்து தலையில் இருமுடி தாங்கினோம். இருமுடி தாங்கியவர்கள் வரிசையாக நிற்க கடைசியாக குருநாதன் இருமுடி தாங்கி, ஆயுத்தமானதை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில், சுவாமியே சரணம் ஐயப்பா எனும் கோஷமிட்ட நடந்த பொழுதினில், தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று, விரியின் மேலிருந்த தகர செட்டின்மேல் பெரும் சத்தத்துடன் விழுந்து தரையில் உருண்டோடியது. தேங்காய் உணர்த்தியது உத்தரவா? எச்சரிக்கையா? வழியில் தெரிந்து விடும்.

ஐயப்பமார்கள் ஒருத்தரை ஒருத்தர் பிரியாது ஓருவர்பின் ஒருவராக வழியை விட்டுவிலகாது ஒட்டியே சவட்டுங்கள் என்று குரு வைத்தியநாத ஐயப்பன் கட்டளையிட, சரண கோஷம் வானை பிளந்தது. ஆயத்தமானது பயணம்.

எல்லைக் காவல் தெய்வத்திற்கு விடலையிட இரண்டு தேங்காய்களை கையில் ஏந்தி, அழுதா நதி பாலத்தைக் கடக்கிறேன். முதல் வருடம் அழகாக தெரிந்த அழுதா நதி இந்த வருடம் ஏனோ ஆர்ப்பரித்து கொண்டிருந்தது.

டோலிகள் அளவுக்கு, ‘சுமடுகள்’ எனும் ‘சுமை தூக்கிகள்’ பற்றி அதிகம் வெளியே தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியான சுமடுகள் பற்றி நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும். டோலிகள் போலவே இந்த ‘சுமடுகள்’ இந்தப் பகுதிகளில் அதிகம் நிரம்பி வசிக்கிறார்கள். இவர்களுக்கான தொழிலே கரிமலை முழுவதும் ஆங்காங்கே விரிகள் போட்டிருப்பவர்களுக்காக பொருட்களைச் சுமந்து கொண்டுபோய் கொடுப்பது தான்.

இந்த இடத்தில் ‘சுமந்து’ என்கிற வார்த்தைக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுத்து மனதில் வரித்துக்கொண்டால்தான் அவர்கள் சுமக்கும் பாரத்தின் அழுத்தத்தை கொஞ்சுண்டாவது என்னால் உணர முடியும் என்று நினைக்கிறேன்.

சாதாரணமாக நடந்தே செல்ல முடியாத இந்த மலைப்பாதையில், கேஸ் சிலிண்டர்கள் மற்றும் 80 முதல் 100 கிலோ வரையிலான பொருட்களினை தலைமேல் தூக்கிக்கொண்டு இந்த கரிமலை ஏற்றத்தினையும் இறக்கத்தினையும் கடக்கிறார்கள். முடிந்தவரை ஒரு நாளைக்கு இரண்டு முறையாக கரிமலை வழியாக பம்பை வரையோ இல்லை அதிலிருந்து சன்னிதானம் வரையோ சுமந்துசெல்லும் பொருட்களை கொண்டு சேர்த்தும், அங்கிருக்கும் பொருட்களை திரும்ப சுமந்து கொண்டும் வருகிறார்கள்.

அப்படியான ‘சுமடு’கள் இரண்டு பேர் எங்களுடன் எல்லா வருடமும் அழுதா பகுதியில் இருந்து பயணிப்பார்கள். அப்படி எப்போதும் பயணிக்கும் ஒருவர் குமார். அவருக்கு துணையாக அவரது மாமா கிருஷ்ணன். இருவரும் எங்களோடு இணைந்து அன்றும் பயணித்தார்கள். இந்த இரண்டு ‘சுமடு’ ஐயப்பன்களும் அழுதா மலையிலிருக்கும் சென்னப்புழாவு கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். ஏறக்குறைய முழு மலையாளத்தார்களின் தோற்றத்துடன் இருக்கிறார் குமார். நீண்ட நெடிய கால்களுடன் சுமை தூக்கும் உடலென சொல்லிவிடும் அளவில் நீள முகத்துடன் அச்சில் வார்த்து இறுக்கி நெடுநெடுவென வளர்ந்திருக்கிறார். கேரள கைலி கட்டியிருக்கிறார். உடனிருக்கும் அவரது மாமா இவருக்கு நேரெதிர். சற்றே கருத்த உருவத்துடன் பெருத்த தொப்பையும், திருகிய மீசையுமாக இருப்பவருக்கு அச்சு அசல் தமிழக முகம்.

இவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்பம் என பிறகுதான் தெரிந்தது. தமிழகத்தின் எல்லைப்பகுதி என்பதால் தமிழகமும் கேரளாவும் இவர்களுக்கு ஒன்றுதான். குமார் ஐயப்பனின் தாத்தா தலைமுறையில் இடம் பெயர்ந்தவர்கள் அங்கேயே வாழ்வாதாரத்திற்கு ஒரு தொழிலைத் தேடி வாழ்க்கையை தக்கவைத்து கொண்டிருக்கிறார்கள். வார்த்தைகளில் மலையாளமும் தமிழும் கலந்து நெடியடிக்கிறது.

குழிமாவு விரிக்கு நாங்கள் வந்தடைந்ததும் எங்களுடன் வந்து சேர்ந்து விடுவார்கள். அதன்பிறகு அழுதாவில் இருந்து கிளம்பும்போது குழுவின் சமையல் பாத்திரங்கள் மற்றும் ஏனைய ஐயப்பமார்களின் சுமைகளையும் இரண்டு பெரிய சாக்குகளில் வைத்து கோணி ஊசியால் தைத்து கட்டி சுமந்தபடி உடன் வருவார்கள்.

சுமடுகள் இரண்டு பேரும் ஆளுக்கொன்றான சுமைகளுடன் நடந்து கொண்டிருந்தவர்கள் எங்களை வேகமாக கடந்திருந்தார்கள். பின்சென்ற நாங்கள், ஒரு நெட்டுக்குத்து ஏற்றத்தில் சுமைகளை இறக்கிவைத்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் அவர்களை முந்தி நடந்தோம்.

யானையின் சேட்டையால் எச்சரிக்கை செய்ய முக்குழி கோவிலில் ஏராளமான போலீசார். ஜாக்கிரதையாக செல்லும்படி பக்தர்களிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.

கரிவலம்தோட்டை நோக்கி பயணம் தொடர்ந்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் எங்களுக்குள் முன்னால் குழுவாய் ஒன்று சேர்ந்து சென்ற சில ஆந்திர ஐயப்பமார்கள் தெலுங்கில் வழிநடை சரணங்களை கோஷித்தவாறு சென்று கொண்டிருக்கிறார்கள்.

வேகமாக நடந்தபடி யானை குட்டியுடன் நின்ற பகுதியை நெருங்கி விட்டோம். யானை கண்ணில் தென்படவில்லை. பாதையில் எல்லாம் சாணங்கள் கிடக்கிறது. யானை இங்குதான் இருக்கிறது. ஆனால் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேகமாக நடந்து சமதளத்தில் இறங்கிவிட்டோம். அழகான சிற்றோடை குறுக்கிடும் பகுதி. இந்தபகுதியில் யானை வந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். நாலாபுறமும் அடர்வனமும் திறந்தவெளியுமாக இருக்கிறது அந்த இடம். சிறு எச்சரிக்கையுடனான வேகமான நடையில், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நல்லபடியாக கரிவலம்தோடை அடைந்துவிட்டோம்.

நாங்கள் வந்திருந்த சில மணி நேரங்களில் சுமடு கிருஷ்ணனும் விரிக்கு வந்துவிட்டார். மாலை நெருங்கி கொண்டிருக்க, இன்னும் குமார் வரவில்லை.

இருட்ட தொடங்கியிருந்த நேரத்தில் குமார், ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். சுமைகள் ஏதுமில்லை. அவரின் நடையிலேயே பதற்றம் தெரிந்தது.

வந்தவர் நேராக குரு வைத்தியநாத ஐயப்பனிடம் சென்று ஏதோ விவரிக்க, எங்களுக்கு சூழல் புரிய ஆரம்பித்திருந்தது. குமார் பேச பேச எல்லோருக்கும் திகில் கூடிப் போயிருந்தது.

நாங்கள் முந்திச்சென்ற நேரத்தில் சுமைகளுடன் மலையேறிக் கொண்டிருந்திருக்கிறார்கள் சுமடுகள். இரண்டு பேரும் கத்திக் கூப்பிட்டால் கேட்குமளவுக்கான தொலைவிலேயே ஒருவருக்கொருவர் முன்னும் பின்னுமாக நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். கிருஷ்ணனை முன்செல்ல விட்டுவிட்டு, பின்னால் வந்த குமாரை மட்டும் இடையில் மறித்து நின்றிருக்கிறது அந்த யானை. கூடவே குட்டி.

கரிவலம்தோடுவுக்கு 1 கிலோ மீட்டர் முன்னதாக செங்குத்து உச்சி சரிவு மலைப்பாதையில் மூட்டைகளையெல்லாம் போட்டுவிட்டு, தப்பித்தால் போதுமென தலை தெறிக்க, வந்த பாதையிலேயே திரும்பி ஓடி போய் தப்பித்திருக்கிறார் குமார் .

அங்கு நடப்பது எதுவும் அறியாது கடந்து வந்து சேர்ந்திருக்கிறார் கிருஷ்ணன். ‘2015 யாத்திரையில் யானை இறங்கிடுச்சு...’ என்று கத்தியவர் இந்த கிருஷ்ணன் தான். இவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால், ஓரளவு வன விலங்குகளின் சமிஞ்சையை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள். மாலை கருக்கலின் இருள் அப்பியிய ஒற்றையடிப் பாதையில் எதிரே வழி மறித்து நிற்கும் ஒரு காட்டு யானையை எதிர்கொண்டால் எப்படியிருக்கும் நம் மனநிலை?!

தப்பித்தோம் பிழைத்தோம் என ஒரு வழியாக விரி வந்தடைந்த குமாரை, குரு வைத்தியநாதன் ஐயப்பன் ஆசுவாசப்படுத்தினார்.

மேலும் இதுகுறித்து குமார் ஐயப்பனிடம் கேட்டபோது, உடல் அப்படி நடுங்கிக் கொண்டிருந்தது. வார்த்தைகளில் பதற்றம் தனியவே இல்லை. வாய் உளறுகிறது. இவ்வளவுக்கும் இவர்கள் இந்த மலங்காட்டிற்குள் எந்நேரமும் சாதாரணமாக சென்று வந்து புழங்கியவர்கள். இவர்களுக்கு யானைகள் ஒன்றும் புதிதல்ல.

பதற்றத்திலேயே பேச்சைத் தொடர்கிறார்... ‘சாமி... நல்ல கருக்கல் வந்துட்டு... அதுக்குள்ள இந்த இடத்தைக் கடந்திடலாம்னு தான் அந்த நெட்டுகுத்துல ஏறி வளைவுல திரும்பி பார்க்கேன். எதித்தாப்புல யானை நிக்கிது. எனக்கும் யானைக்குமான இடைவெளி 25 அடிதான். இத்தனை நெருக்கத்துல ஒரு நாளும் நான் காட்டு யானையைப் பார்த்ததில்ல. பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த காடுதான்னாலும்... ‘ஒரு நிமிஷ நேரம் ஒன்னும் எனக்கு ஓடல...

இந்தப் பாதையில நான் எத்தனையோ முறை ஏறி எறங்கியிருக்கேன். நல்லா தெரிந்த அந்த பாதையில முழுசா கரும்பாறையால அடைச்சு வழியை மறைச்சா எப்படி இருக்கும் அப்படி இருந்தது. இது எப்படி?’ன்னு தோணுதோ அறிய, எதித்தாப்புல நிக்கிறது யானைன்னு மண்டயால சிந்திக்க முடில. பிரமையில நிக்கேன். என்னை நோக்கி நிக்கிற அந்த உருவம் சாதாரணமானதல்ல. கரி வனத்துக்குள்ளேயே உருண்டு புரண்டு சேறோட சகதியைத் தாங்கி நிக்கிற பெரிய யானைன்னு உணர்ந்து கன நிமிஷத்துல சுதாரிக்கேன். ஆனாலும், உடம்பும், காலும் செயலிழந்து நிக்குது...

‘ஓட எத்தனிக்கேன் முடியல...’, ‘கத்த நினைச்சு வாயோடு நாக்கு இழுத்துக்கிட்ட அந்த நேரத்துல, என்னையறியாமல் ஒரு சுயாதீனம் வந்து... கையெடுத்து கும்பிட்டு, ஐயப்பான்னு கத்தினேன் பாருங்க...

நான் கத்துன நொடில அதுவும் ஒரு பிளிறு பிளிறுச்சு பாருங்க. என்ன செய்யணும்னு தெரியாமல நின்னுட்டு இருந்த நான், தலையில இருந்த சுமடையெல்லாம் பள்ளத்தில போட்டுட்டு இறக்கத்துல இறங்கி ஓடியாந்துட்டேன்.

கொஞ்சம் தொலைவால வந்ததுக்கு அப்புறம்தான் லேசா தைரியம் புடிச்சு, ஒரு மரத்துல ஏறியாந்து பார்க்கேன். சாவகாசமாக அந்த யானை தன் குட்டியுடன் பள்ளத்தில் இறங்கி கொண்டிருந்துச்சு. அது இறங்கி போனதை உறுதி பண்ணிட்டு, அதுக்கு நன்றியும் சொல்லிட்டு மறுபடியும் அதே வழியாக இங்கபாத்து ஓடியே ஓடியாந்துருக்கேன். எல்லாம் கனவு மாறி இருக்குன்னவர் மேற்கொண்டு பேசாது அமைதியாகி விட்டார்.

இப்படியாக அன்றைய பொழுதின் இரவு கரிவலம்தோட்டில் கழிந்தது.

கரிவலம்தோடு ஆற்றின் கரையோர விரி

எங்களின் பொருட்களையெல்லாம் மறுநாள் அதிகாலையே சென்று பள்ளத்தில் இருந்து எடுத்து எங்களிடம் கொண்டு வந்த சந்தோஷத்தில், காலையில் என்னிடம் மறுபடியும் இதுகுறித்து பேசினார் குமார்.

‘விரி கட்டுவதற்காக மூங்கில் மரங்களை வெட்டியெடுக்க இதைவிட, இன்னும் ஆழமான உச்சி வனங்களுக்கெல்லாம் போய் கிடையாக கிடந்திருக்கிறோம். அங்கேயும் யானைகள் வரும். ஆனா, முன்னேமே அவற்றின் நடமாட்டத்தை அறிஞ்சிருவோம். அதனால பதுங்கியோ இல்லை மரங்களின் உச்சிகளில் ஏறியோ சமாளிச்சிருவோம். அதிலும் ஒருமுறை, நிச்சயம் விரட்டப்படுவோம் என்று உள்ளுணர்வினால் எல்லோரும் உணர்ந்து ஒருவரையொருவர் சுதாரித்து எச்சரிக்கை செய்து ஓட யத்தினித்து காத்திருக்கோம்.

வந்துகொண்டிருந்த யானை கூட்டத்துக்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகம். இருந்தபோதிலும்கூட கூட்டத்துல உள்ள ஒரு யானை மட்டும், எங்களையெல்லாம் விடாம கொஞ்சதூரம் விரட்டிருச்சு. முதல்லயே சுதாரித்து எதிர்பார்த்து இருந்ததால தப்பிச்சிட்டோம். அன்னிக்குகூட நான் இந்தளவு பயந்ததில்ல. சுதாரித்திருந்ததால் பயமற்று போயிருக்கலாம்னு நினைக்கேன். ஆனா, என் வயசுல இவ்வளவு பக்கத்தில் ஒரு காட்டு யானையை பார்த்தது இதுதான் முதல்முறை. அதன் மூர்க்கமும் மூச்சும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துட்டேன்’ என்றவரை 2 நாள் வரை நடுக்கத்தில் வைத்துவிட்டுருந்தது குட்டியுடன் அலைந்த கருத்த யானை.

கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை சபரிமலை காவல்காரன் கருப்பனின் சாந்நித்யம் நிறைந்திருக்கிறது. வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது.

இதோ... கரிவலம்தோடு கடந்து கரிமலை ஏறத் தொடங்கி விட்டோம்.

‘மரங்களற்ற வானாந்தர பகுதியில் மட்டுமாவது நான் நானாக நடந்து கொள்கிறேனே’ என்று கேட்டு கொண்டிருப்பான் போலும்... சூரியன். சுள்ளென்ற வெயில் உச்சி பிடறியை சுட்டது.

தங்கியிருந்த கூடாரத்தின் எதிரில், மூங்கில் களிகள் மட்டுமே உடலாய்... பதாகை போர்த்தாது உருவாகிக் கொண்டிருந்த கொட்டகையில், கொடி கட்டுவதில் கொடி கட்டிய சங்கர் ஐயப்பன் உபயத்தில் உலர்ந்து கொண்டிருந்தன நாங்கள் ஆற்றில் குளித்து துவைத்துப் போட்டிருந்த காவி வேஷ்டி, துண்டுகள்.

பகவதி, கானக தேவி, காவல் வன காளி, உஜ்ஜையினி என சிறப்பே உருவான கரிமலை வன பத்திரகாளி, ‘கார்த்திகாயினி’ அம்பாளுக்கு, சீராய் தயாரித்த நைவேத்தியம், அன்னதானத்துடன் குரு பாதம் வணங்கி, இருமுடி தாங்கி, குலதெய்வம் காண பாய்ந்த ஐயப்பமார்களை அழகாக உள்ளிழுத்துக் கொண்டது கரிமலை.

கரிமலை இன்னும் ஏராளமான அதிசயங்களை உள்ள ஓளித்து வைத்திருக்கிறது.

அடுத்து கரிமலை கார்த்திகாயினி தேவி?

- ஜி.காந்தி ராஜா | தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

| காட்டு வழிப் பயணம் தொடரும் |

முந்தைய அத்தியாயம்: யானைகள் இறங்கிய கரிமலை மழை இரவு! - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 2

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்