ஆண்டாள் திருப்பாவை 22 | கண்ணன் அருளால் எல்லாம் சுகமே..!

By கே.சுந்தரராமன்

அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிப்பார் போல வந்து தலைப்பெய்தோம்;
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

பக்தர்களைக் காக்க காத்துக் கொண்டிருக்கும் கண்ணனுடைய திருவடிகளும், கண்களும் இப்பாசுரத்தில் வர்ணிக்கப்படுகின்றன. ‘கருமை நிறக் கண்ணா! உனது வீரத்தைப் பார்த்து அஞ்சி நடுங்கிய பகைவர்கள், உனக்கு அடிபணிவது வழக்கம். அதுபோல பாவை நோன்புப் பெண்களான நாங்கள் உனக்கு அடி பணிகிறோம். பல நாடுகளுக்கு அரசர்களாகத் திகழ்பவர்கள், உன்னிடம் தங்கள் நாடுகளை இழந்து, தங்கள் அகந்தை அழியப் பெறுகின்றனர். அவர்கள், நீ பள்ளி கொண்டிருக்கும் இடத்தில் கூடி நிற்பதைப் போன்று, நாங்கள் உன்னைத் தேடி வந்து உன்னிடம் சரணடைந்து நிற்கிறோம்.

தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனே! அத்தகைய கண்களில் ஒன்று சூரியனாகவும், மற்றொன்று சந்திரனாகவும் விளங்க, எங்களது பாவச் சுமை விலக, உனது விழிகளால் எங்களைக் காண மாட்டாயா? கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர மாட்டாயா? நாங்கள் உன்னை பரந்தாமா, பத்மநாபா, தாமோதரா, கேசவா, நாராயணா, மாதவா என்று அழைப்பது உன் காதில் விழவில்லையா?’ என்று தங்கள் மனம் கவர் கண்ணன் அருள்வேண்டி ஆண்டாளின் தோழிகள் பாடுகின்றனர்.

கிங்கிணி என்பதற்கு கொலுசு, சலங்கை, தண்டை ஆகிய பொருள்கள் உண்டு. கிங்கிணியில் தாமரை வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. அகந்தையை அழித்து கண்ணன் திருவடிகளில் சரண் புகுந்தால் வாழ்வு ஒளி பெறும். இனி எல்லாம் சுகமே! என்ற கருத்து இப்பாசுரம் மூலம் அறியப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE