ஆண்டாள் திருப்பாவை 19 | இறைவனின் நல்வாக்கைக் கேட்போம்..!

By கே.சுந்தரராமன்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வெட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!

கோதை நாச்சியாரின் தோழிகள், அனைவரையும் எழுப்பி, மார்கழி நீராட அழைத்துச் செல்கின்றனர். நந்தகோபன் மாளிகைக்கு வந்து நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்ப முயல்கின்றனர். மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்ததால், தோழியரின் கோபம் நப்பின்னையின் மீது பாய்கிறது.

யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில், மென்மையான துயிலணையின் மேல் தலையில் நறுமண மலர்களை அணிந்து உறங்கிக் கொண்டிருக்கும் நப்பின்னையே! கண்ணன் எப்போதும் உன்னருகில் இருப்பதால் சிறிதளவு கவலையும் இன்றி இருக்கிறாய். நாங்கள் அனைவரும் அவனது புகழ்பாடி அவன் அருள் பெற வேண்டி நிற்கிறோம். 'கவலைப் படாதே' என்று கண்ணன் எங்களைப் பார்த்து ஒரு வார்த்தை கூறலாமே! உடனே நீ எழுந்து, கண்ணனையும் எழுப்பி எங்களுக்கு அருள்புரிய வைக்க வேண்டும்.

கண்ணனின் நல்ல வார்த்தைகளைக் கேட்க நான் காத்திருக்கிறோம். நாங்கள் வந்த பிறகும் நீயும் எழாமல், கண்ணனையும் எழ விடாமல் செய்வது அழகல்ல. நீயே எங்கள் மீது இரக்கம் கொள்ளாவிட்டால், வேறு யார் எங்கள் மீது கருணை காட்டுவார்கள் என்று நப்பின்னை பிராட்டியைப் பார்த்து ஆண்டாளின் தோழிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாயார் தலை அசைத்தால், பெருமாள் நல்ல வார்த்தைகளைக் கூறி அருள்பாலிப்பார். அதனால் தாயே உனது கருணையால் அவன் அருள் பெறுவோம் என்று தோழிகள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE