ராமேசுவரத்துக்கு சைக்கிளில் வந்த வட மாநில பக்தர்கள்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக வடமாநில பக்தர்கள் 3 பேர் நேற்று சைக்கிளில் ராமேசுவரம் வந்தனர். நாட்டில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும், தெற்கே ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோயிலும் அமைந்துள்ளன.

ராமநாத சுவாமி கோயில் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. பிஹார் மாநிலம், பங்கா பகுதியைச் சேர்ந்த ராஜாராம் பாண்டே ( 30 ), குஜராத்தைச் சேர்ந்த விஜய் சேவாக் ( 35 ), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் முகேஷ் குமார் ( 32 ) ஆகிய 3 பக்தர்கள் நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க முடிவு செய்து பிஹார் மாநிலம் பங்கா பகுதியில் இருந்து கடந்த செப்.9-ம் தேதி சைக்கிளில் தங்கள் பயணத்தைத் தொடங்கி, நேற்று ராமேசுவரம் வந்தடைந்தனர்.

இது குறித்து விஜய் சேவாக் கூறியதாவது: நாங்கள் 3 பேரும் நண்பர்கள். ஒன்றாக ஜோதிர்லிங்க தரிசனம் செய்யத் திட்டமிட்டோம். பெரும்பாலும் பகலில் பயணம் செய்வோம். வழியில் உள்ள கோயில்களில் இரவு தங்கி விட்டு மறுநாள் காலை பயணத்தைத் தொடர்வோம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஆந்திர மாநிலங்கள் வழியாக ராமேசுவரம் வந்துள்ளோம்.

இது வரையிலும் 9 ஜோதிர்லிங்க தலங்களைத் தரிசித்து விட்டோம். வியாழக் கிழமை காலை ( இன்று ) ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி விட்டு ராம நாத சுவாமியை தரிசிக்க உள்ளோம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE