யானைகள் இறங்கிய கரிமலை மழை இரவு! - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 2

By ஜி.காந்தி ராஜா

தொடர்நடையில், இரண்டு மணி நேரத்தில் முக்குழி பகவதி தேவி கோயில் வந்திருந்தது. சுவாமி தரிசனத்துக்குப் பின் சிறு இளைப்பாறுதல். அழுதா மலை மீது ஏறி வந்தவர்கள் எல்லாம் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள படிக்கட்டுகளின் வழியாக இறங்கித்தான் அடுத்ததாக கரிவிலந்தோடு தாவளத்தைச் சென்று அடைகிறார்கள்.

அழுதா மலை ஏறுவது என்பது மிக மிகக் கடினம். அந்த மலையேறி படிக்கட்டுகள் வழியாக இறங்கி வந்துகொண்டிருந்த ஐயப்பமார்களின் பேச்சு சன்னமாக காதில் விழுகிறது. என்ன உசரம்... பாதையா இது. இன்னும் கரிமலை எப்படியிருக்குமோ என்றவரின் பேச்சை வைத்து அவர் முதல்முறை மாலை போட்டவர் கன்னி ஐயப்பன் என்பதை புரிந்துகொண்டேன். நடக்க முடியாமல் இறங்கிக் கொண்டிருந்தவர்கள் இருமுடியை இறக்கி வணங்கி வைத்துவிட்டு அப்பாடாவென தரையில் அமர்ந்து கொண்டார்கள். வந்தமர்ந்த குழுவில் இருந்த ஐயப்பன் ஒருவர் களைத்திருந்த மற்ற ஐய்யப்பமார்களுக்கெல்லாம் அருகிலிருந்த கடையில் தண்ணீர் வாங்கி வந்து, கேட்டு கேட்டுத் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார்.

பொதுவாக அழுதாவில் இருந்து முக்குழி தாவளம் வரையிலான வனப்பகுதி முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய தனித்தனி வீடுகளாக இருக்கின்றன. அதுவும் செங்குத்து உயரத்திலிருக்கும் சாலையில் இருந்து வீடுகளுக்கான பாதை கீழ் நோக்கியிறங்குகிறது. அவை சரியான பாதைகளாக இல்லை. இரண்டு கை விரிக்கும் அகலத்தில் 200 மீட்டர் ஆழத்தில் கீழிறங்கி வீட்டின் முன் நிற்கிறது. வீட்டுக்கு கீழும் மலைச்சரிவுகள் நீண்டுகொண்டிருக்கிறது. தூரத்தினில் இருந்து பார்த்தால் சரிவினில் வளர்ந்திருக்கும் மரங்களின் உச்சிக்கிளைகள் வீட்டின் முற்றங்களைத் தாங்குவது போன்றிருக்கிறது. அதற்கும் கீழ் 500 அடி ஆழ பள்ளத்தில் அழுதா ஆறு நீண்டு நெளிந்து வளைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது.

கரடுமுரடானதாகவும் உருளையுமான கற்களுடன் காட்சியளிக்கும் அந்த பாதையில் வீட்டிலிருந்து சாலைக்கு ஏறி வருவதற்கே அங்கு வசிக்கும் மக்களுக்கு தனி உடல் பலம் வேண்டும். பெரும்பாலும் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு எத்தனை முறை ஏறி இறங்குவார்கள் என்பது என் கணக்கில் இல்லை. தனித்தனியாக ஒன்றிரண்டுமாக சிலர் அந்த ஆளில்லா சரளைக் கற்கள் சாலைகளில் நடந்து செல்கிறார்கள். முக்குழி தாவளம் வரை இதே நிலைதான்.

முக்குழி பகவதி தேவி கோவில்

முக்குழி தாவளத்தில் கோயிலைச் சுற்றிலும் நிறைய கடைகள். அவை சீஷனுக்காக ஆரம்பித்திருப்பவை. மேலும், பக்தர்கள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்வதற்காக சில விரிகள் மற்றும் பக்தர்களின் உதவிகளுக்கான முதலுதவி மருத்துவ முகாம்களும் இருக்கின்றன. கோயிலை அடையும் 100 மீட்டருக்கு முன்பாக ஒரு பெண் காவலர் தனது தொலைபேசிக்கு டவர் கிடைக்காமல் மேடு ஒன்றினில் ஏறி நின்றபடி சிக்னலுக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.

அடர்ந்த வனம் என்பதனை கிட்டத்தட்ட எருமேலியில் இருந்தே சொல்லலாம். ஆனால், முக்குழி தாவளத்திலிருந்து இன்னும் அடர்ந்த வனம் தொடங்குகிறது.

ஒற்றையடிப் பாதை. ஆண்டின் பிற்பகுதியில் ஐயப்பன் சீஷன் அற்ற நேரங்களில் ஜன நடமாட்டம் என்பதே முற்றிலும் அற்ற பகுதி. இங்கு வன விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக வன காவலர்கள்கூட தேவை என்றால் மட்டுமே இந்தப் பாதையை பயன்படுத்தி பம்பை வரை ஏறி இறங்கிச் சென்று வருவார்கள். அவ்வளவுதான்.

முக்குழி தாவளத்தில் ஆரம்பித்து கரிவிலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என நீண்டு பூங்காவனம், பம்பா வரை தொடர்ந்து முடியும் இந்த பாதை அத்தனை சத்தியமான பாதை.

மனிதர்களின் பொய், புரளி, ஏமாற்று, சூது, வாது, வன்மம், வஞ்சம், கள்ளம் உள்ள மனிதர்களின் அன்றாட நடமாட்டம் இல்லாமல், விலங்குகள் மட்டுமே வசித்து இயற்கையெனும் வனதேவதைகளின் பாதுகாப்பில் இருக்கும் இந்த பாதைகள் நிச்சயம் சத்தியத்துடன் தான் இருக்கும் என்று நினைத்தபடி நடையில் வேகம் கூட்டியிருந்தேன்.

இதோ ஐயப்பனின் எல்லை ஆரம்பம்.

இருபுறமும் குபீரென்று வளர்ந்திருக்கும் கொடிபோன்று பின்னி பிணைந்திருந்த குறுஞ்செடிகளுடன் புதர்கள் மண்டி கிடக்கும் இந்த வழித்தடத்தில் நடப்பது என்பது அத்தனை சாதாரணமானதல்ல.

சுள்ளென்று சுட்டெரித்து கொண்டிருந்த சூரியன் வனத்திற்குள் நுழைந்ததும் தான் தாமதம். சரி... பிறகு சந்திக்கலாம் என முற்றிலும் ஒதுங்கிக் கொண்டான். அந்த உச்சி மத்தியான வேளையில் பாதையினை இருள் கவ்வியிருந்தது. பெயர் தெரியாத பறவைகளின் கீச் கீச் ஒலிளும், வண்டுகளின் ரீங்காரங்களும் மனதிற்குள் ஓருவித பரவசத்தைப் புகுத்தி கொண்டிருந்தது.

குரு வைத்திய நாத ஐயப்பன் கூறியவைகள் எல்லாம் பாதையில் நடக்க நடக்க என் சிந்தனைகளையும் எண்ணங்களையும் எங்கெங்கோ நீட்டித்துச் செல்கிறது.

நாம் யாரைக் காண்பதற்காக இந்தப்பாதையின் வழியாக பயணிக்கிறோமோ அதே தெய்வம் சாட்சாத் ஸ்ரீ ஐயப்பன் தன் பாதங்களை பதித்து நடந்து சென்ற வனமல்லவா இது. அதுவும் சின்னஞ்சிறு வயது பாலகனாக அவர் எப்படி இந்த கடும் வனத்தை கடந்திருப்பார்? அவர் மனதில் என்னவெல்லாம் அந்த நேரத்தில் தோன்றியிருக்கும்?

தன்னை தாங்கி பாதுகாத்து நின்றிருக்க வேண்டிய உறவுகளெல்லாம் சுற்றி நின்று தனக்கு எதிராக செய்யும் சதி இது என்று நன்றாக தெரிந்தே இந்த வழியை ஏற்று கடந்திருப்பாரல்லவா? சதியாளர்களின் எண்ணங்கள் ஈடேறி அவர்களை மகிழ செய்ய வைப்பதற்காகத்தான் கடும் வன விலங்குகள் உள்ள இந்த கானகத்திற்குள் நுழைந்து புலியை கொண்டு வரத் துணிந்தாரோ?

அப்படியானால், அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழியாகத்தானே நடந்து சென்றிருப்பார்? அன்றும் இதேபோல் வளர்ந்து நின்றிருக்கும் இத்தகைய மரங்களை பார்த்தபடிதானே நடந்து கடந்திருப்பார்? இதோ பெரும் மலைப்பாம்புகளோ என தோன்றும் அளவுக்குப் பின்னிபிணைந்திருந்த இந்த மரக் கொடிகளையெல்லாம் விலக்கியபடித்தானே நடந்திருப்பார்?

கடவுள் அவதாரமாயினும் நடக்கும் நிகழ்வில் அவர் சின்னஞ்சிறு பாலகனான மனிதக் குழந்தையல்லவா? பாதங்களை அழுத்தி நெறிக்கும் இந்தப் பாதைகளை எப்படி தன் பிஞ்சுப் பாதங்களால் கடந்திருப்பார்? அப்படி தன் பாதங்களை அழுத்தி அழுத்தி நடந்த இந்த மகத்துவமிக்க பாதையில்தான் இன்று நானும் நடந்து செல்கின்றேனா? அந்த பந்தள இளவரசன் மணிகண்டன் பாதம் பதித்த மண்ணில் என் பாதங்களும் படுகிறதா? இது நான் பெற்ற புண்ணியமல்லவா! என்று எத்தனையோ அலையலையான கேள்விகள் என்னை சுற்றி சுழன்றடித்து கொண்டிருந்தன.

முழுவதுமாக மூழ்கிய ஆழ்மன சிந்தனைகளில் லயித்தபடி இருமுடியைச் சுமந்துகொண்டு அந்த ஒற்றையபடிப் பாதையில் இருபுறமும் வானளாவிய வளர்ந்திருந்த வலிய நெடும் மரங்களை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டே உள்வாங்கி நிதானமாக நடந்து கொண்டிருக்கிறேன்.

கடக்கும் மரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பேர் ஒன்றாக கை கோர்த்து இரு கைகளாலும் இணைந்து கட்டிப்பிடித்தால் மட்டுமே மரத்தின் அடிப்பகுதியை கட்டியணைக்க முடியும். அந்த அளவு ஒவ்வொரு மரங்களும் அகலத்தில் திடகாத்திரமாக இருக்கின்றன. மேலிருந்து கீழாக தொங்கிக்கொண்டிருந்த விழுதுகளும், வேர்களும் என் ராஜ்யத்திற்குள் நீ புகுந்திருக்கிறாய் மறவாதே... இங்கு நான்தான் எனும் தன் இருப்பை இயற்கை வலுவாக ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது.



ஆயிரம் மனிதர்கள் ஆயுதங்களுடன் இருந்தாலும் இந்தப் பாதையில் மிரண்டு வரும் யானையையும், புலிகளின் உறுமலையும், காட்டெருமைகளின் மூர்க்கங்களையும் கண்டுவிட்டால் சிதறி ஓடிவிடத்தான் செய்வார்கள். இங்கு யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது. அவரவர்களின் விரதங்களும் மெய்யான பக்தியுமே நடந்து கடக்கும் ஐயப்ப பக்தர்களைக் காத்து நிற்கும் அற்புத சக்தி.

வன்புலி வாகனன் ஐயப்பன், கானக வாசன் அந்த கரிமலை காந்தன் நம்முடன் இருக்கிறார் என்பதை இந்தப் பகுதியில் நடக்கும்போது அத்தனைத் தீர்க்கமாக உணர முடியும்.

தலையில் இருமுடியினை ஒரு கரம் தாங்கி அணைத்துப்பிடித்திருக்க, மறுகரம் வீசியபடி முன் செல்லும் ஐயப்பமார்களின் வழிநடைச் சரணங்கள் என் நடையை சற்று வேகப்படுத்தியிருந்தது.

தங்களைச் சீண்டாத வரை யாருக்குமே எந்த கெடுதலும் நினைக்காத நல்ல மிருகங்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இங்கு வனதேவதைகளும், இயற்கையும் சாட்சாத் நிறைந்திருப்பதை பாதையில் பார்க்க முடிகிறது.

வழியெங்கும் சாணங்கள். ஈரம் குறையவில்லை. அப்பொழுதான் கடந்திருக்கிறது யானை கூட்டங்கள் போலும்... கண்ணுக்கு எட்டியவரை ஒன்றும் புலப்படவில்லை.

இதே அழுதா வழியாகத்தான் முக்குழி வந்து சுவாமி ஐயப்பன் கால்நடையாக இதே பாதையில் தான் நடந்திருக்கிறார் என்பதால் இந்த சத்திய பாதையின் மூலம் சொன்னதைக் கேட்கும்... கேட்டதை கொடுக்கும் கற்பகவிருட்சம் இந்த வனம்.

பாதையில் எந்த அளவுக்கு ஏற்றம் இருக்குமோ அதே அளவு இறக்குமும் இருக்கிறது. மழை என்பதால் பாதையெங்கும் நடந்து நடந்து கெட்டித்துப்போய் களிமண்ணாக மாறி, ஈரப்பசையுடனான வழுக்களுடன் சிறு சிறு குறுமண்ணும் சேர்ந்து பாதங்களை உராய்ந்து சிராய்து புண்ணாக்கி விடுகிறது.

ஆனாலும், இடையிடையே குறுக்கிடும் நிறைய சிற்றாறுகள், ஓடைகள் நம் கால்களை குளிர்வித்து கொண்டிருந்தது.

பாதையின் கடினத்தை கடக்க அந்த நேரத்தில் கூறப்படும் வழிநடைச் சரணங்கள் பக்தர்களைச் சோர்வின்றி அழகாக கைதூக்கி விட்டுக்கொண்டிருந்தது.

வழிநடை சரணங்கள் என்பது ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மலையேறும்போது பாடும் பாசுரங்களின் தொகுப்பாகும். முதலில் செல்லும் ஐயப்பன் முதல் வசனம் (உதாரணம்: சுவாமியே) என்கிறார். அவரின் பின் செல்லும் மற்ற அனைத்து ஐயப்பன்களும் (ஐய்யப்போ) என்று கூறிக்கொண்டே செல்லச் செல்ல அமைதியான அந்த கானகம் எதிரொலித்து அதிர்ந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு ஏற்றத்திலும், இறக்கத்திலும் ஏற்றியும் தூக்கியும் விட ஐயப்பனைத் துணைக்கழைத்து மலையேறி நடந்த பொழுதில் அனைவரும் மாலை 4 மணிக்கு கரிமலை அடிவாரம் கரிவிலந்தோடு வந்தடைந்தோம். பெரிதாக கூட்டம் இல்லை.

தெளிந்த நீரோடையாக கரிமலை ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல மழை பெய்திருந்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்துக் கூடிக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் இன்னும் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கலாம்.

ஏராளமான விரிகள் உருவாகிக் கொண்டிருந்தன. அதில் தயாராகியிருந்த ஆற்றின் கரையோரத்து விரியில் தங்கிவிட்டோம். நடந்த களைப்பு தீர ஆற்றில் ஒரு குளியல் குளிக்க உடலெல்லாம் உற்சாகத்தில் பறந்தது. எப்போதும்போல அன்றைய பஜனைக்கு தயாராகிவிட்டோம்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஐயப்பனாம் தேவாதி தேவனை வேண்டி, அவனுக்குகந்த இனிய பஜனை நடந்துகொண்டிருந்தது. விரியில் தங்கியிருந்த மற்ற ஐயப்பமார்களும் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்ததில், அந்த கரிவிலந்தோடே சரணம் ஐயப்பா! கோஷத்தில் முங்கி திளைத்திருந்தது.

பஜனை முடிந்து அங்கு தயாராகி கொண்டிருந்த வெண் பொங்கலுடன், சிதம்பரம் ஸ்பெஷல் கத்திரிக்காய் கொத்சுவும் வைத்து ஒரு அற்புதமான இரவு உணவை அந்த வனாந்திர கானகத்தில் சிறப்பித்திருந்தார் ‘மாமா ஐயப்பன்’ என்று நாங்கள் எல்லோரும் அன்போடு அழைக்கும் சேதுராமன் ஐயப்பன்.

‘மாமா ஐயப்பன்’ என்று நாங்கள் எல்லோரும் அன்போடு அழைக்கும் சேதுராமன் ஐயப்பன். குழிமாவில் நடக்கும் சமையலில்... உதவியாக சங்கர் ஐயப்பன், சுந்தர வடிவேல் ஐயப்பன்.

அவர் வயதிற்கெல்லாம் இந்த கரிமலை ஏறி இறங்கி சென்று ஐயப்பனைத் தரிசிக்கும் பெருவழிப்பாதையை மற்றவர்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது சந்தேகம்தான். மனம் சம்மதித்தாலும் உடல் ஏற்றுக்கொள்ளாது. இளவயதினரின் கால் மூட்டுகளையே தனித்தனியாக கழட்டி நம் கையில் தந்து விடும். அப்படியான வழித்தடத்தில் இன்றும் மனோதிடத்தில் உயர்ந்து பயணித்து எங்களை வழி நடத்தும் குரு வைத்தியநாத ஐயப்பனுக்கு வயது 75 ஆகிறது. அதேபோல மாமா சேதுராமன் ஐயப்பனுக்கும் அதே வயதுதான். அத்தகைய அவர் அந்த வழியில் பயணிப்பது மட்டுமல்லாமல், எங்கள் எல்லோருக்கும் சேவையாக சமையல் செய்து உணவு படைக்கும் ஆத்ம உணர்வு கொண்டவர். அந்த ஆத்ம உணர்வு எங்கிருந்து வந்தது? இந்தப் பக்குவம் எங்கிருந்து வந்தது? இந்த ஐயப்ப மாலைபோட்ட விரதம் கொடுத்தது.

உடன் பயணிக்கும் ஐயப்பமார்களெல்லாம் வயதில் சிறியவர்கள் என்பதால் நான்கு கால் பாய்ச்சல் என்பார்களே அதேபோல பாய்ந்து கொண்டிருப்பவர்களே சில இடங்களில் சோர்ந்து உட்கார்ந்து விடுவார்கள்.

அப்படியான இந்த செங்குத்து ஒழுங்கற்ற மலைத்தடத்தில் வயோகத்தை விரட்டி இளைஞர்களாக நடக்கும் அந்த ஐயப்பன்களுக்கும் துணை நின்று தான் எட்டிப்போடும் நடையை மெதுவாக்கி அவர்களின் பாதங்களுக்கு தங்களின் பாதங்களைக் கொடுத்து உடன் அனுசரணையாக தாங்கி தடுத்து நின்று வளைந்து நெளிந்து உடன் கைப்பற்றி கூட்டிச் செல்லும் கரிசனத்தை, அந்த பக்குவ நிதானத்தை, பொறுமையை யார் கொடுத்தது? இந்த ஐயப்ப மாலை கொடுத்தது.

ஐயப்ப மாலை அணிந்ததுமுதல் தான் பார்க்கும் ஒவ்வொரு மனிதரையும், கோபம், வஞ்சம் அற்று சாதி, மத, இனம் கடந்து தான் விரதமிருந்து தரிசிக்க நினைக்கும் ஐயப்பனாக பாவிக்கும் எண்ணத்தை அந்தப் பக்குவத்தை யார் சொல்லிக் கொடுத்தது? அந்த ஐயப்ப மாலை கொடுத்தது.

அத்தகைய ஐயப்ப மாலைதான்... இந்த மாமா ஐயப்பன் எனும் இளைஞரின் உற்சாகத்திற்கும், 20க்கும் மேற்பட்ட எங்களின் ஐயப்ப பக்தர்கள் அடங்கிய குழுவுக்கும் காலை மாலை என சலிக்காது அன்னம் ஊட்டும் ‘அன்னதாதா’வாக ஆக்கியிருக்கிறது. அவரின் இந்த சேவை ஒரு வருடம் இரு வருடம் அல்ல அது 30 வருடத்திற்கும் மேற்பட்டதாக இருக்கிறது என்பதுதான் பிரமிப்பு.

சரி...

இவரை நினைத்து பிரமிப்பதா? இல்லை இந்த நட்ட நடுக்காட்டில் மலையில், மழையடிக்க, குளிரக்குளிர குளித்து பகவான் ஐயப்பனுக்கு பஜனை முடித்து, வலிய நடையில் பசித்த வயிற்றுக்கு அப்படியொரு சுவையில் கிடைத்திருந்த உணவை நினைத்து பிரமிப்பதா?

அத்தனை சுவையாக எந்த அறுசுவை உயர்தர உணவகத்திலும் கிடைக்காததாக இருந்தது. ஆவி பறக்க பறக்க இலையினில் வாங்கி அனைவரும் உணவருந்தி முடித்தோம். ஆட்கொல்லும் பசி இருந்தாலும் நாங்கள் எல்லாரும் உணவருந்தி முடித்தபின்னர் தான் எங்கள் குரு வைத்தியநாதன் ஐயப்பன் எப்போதுமே உணவு உண்ணுவார். தான் முன்னாடி உணவருந்தி கடைசியாக வரும் யாதொரு ஐயப்பனும் உணவில்லாது இருந்துவிட்டால் என்னவாகும் எனும் நல் எண்ணத்தினாலேயே தனது பசியை இன்று வரை கடைசியாக ஆற்றுபவர். தாயாக தந்தையாக நல்ல குரு அமைவதும் எல்லாம் வல்ல அந்த அன்னதான பிரபு சபரிநாதனின் அருட்செயல் தான்.

‘சீக்கிரம் முடிங்க சாமி... லைட் ஆப் பண்ணப்போறோம்’ என்ற விரிகாரரின் குரலுக்கு சற்று செவி சாய்த்தோம்.

அந்த கரிவனத்து விரியில் ஜெனரெட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஓரிரு டியூப் லைட்டுகளும் இரவு 9 மணிக்கு ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டு அனைக்கப்பட்டுவிட்டன.

மலையெங்கும் கும்மிருள் நிலவியது. மழை முழுவதுமாக கரிமலையை நனைத்திருக்கும் என்று நினைக்கிறேன். மழை விடாமல் பெய்துக் கொண்டிருந்தது. அதனுடன் குளிரும் சரிசமமாக போட்டியிட்டிருந்தது.

விரியின் வெளிப்புற ஓரத்தில் ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதனை சிகப்பு பிளாஸ்டிக் வாளியால் மூடி வைத்துவிட்டார்கள். இரவில் தனியாக ஒளிர்ந்துக் கொண்டிருந்த அந்த சிகப்பு வெளிச்சம் ஏதோ ஒன்றை உணர்த்தியது.

நாங்கள் படுத்திருந்த விரியானது கரிமலை ஆற்றின் போக்கில் கரிமலை ஏற்றத்திற்கான பாதையையொட்டி கடைசி விரியாக சமதளத்தில் விரிந்திருந்தது. விரியில் அடுத்தடுத்ததாக ஐயப்பமார்கள் அனைவரும் தனித்தனி பாய் விரித்து படுத்திருந்தோம். விரியின் மேல் பகுதி முழுவதும் மூங்கில் கம்புகளால் வேய்ந்து பாலீதின் சீட் விரித்து நார்க்கயிற்றினால் கட்டியிருக்கிறார்கள். திறந்த பகுதியுடன் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த காடு.

வனப்பகுதியில் அமைந்திருக்கும் விரி

நான் படுத்திருந்தவாறு வெளியில் பார்வையை வீசினேன். மின்னிய மின்னலில் மழையில் நனைந்துக் கொண்டிருந்த மரங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று கண்களுக்குப் புலப்பட்டன. எவ்வளவு நேரம் அந்த இருளையும் மின்னல் மின்னும்போதெல்லாம் தெரிந்த நனைந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. நடந்த களைப்பும் குளித்த குளியலும் தெய்வீக சிந்தனையும் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

நள்ளிரவு.

திடீரென கடுகடுத்த இடி, இடித்து பெய்துகொண்டிருந்த மழை கடும் மழையானது. மலை சூழ்ந்த அந்த கரிய கரிமலை அடிவார ராத்திரி காரிருளுக்குள் முழுவதுமாக அகப்பட்டிருந்தது. ஏராளமான பெயர் தெரியாத பூச்சிகளின் ரீங்காரங்களும், தவளைகளின் சத்தங்களும், மழை சத்தமும் இரவுக்கே உரிய பயமுறுத்தலுடன் வெளியே தெரிந்த இரண்டு பனை மர உயரத்திலான பருத்த காட்டு மரங்களைப் பூதாகரமாககாட்டி அச்சமூட்டிக் கொண்டிருந்தன. மாலையில் அழகாக தாலாட்டிய அந்த ஆறு நள்ளிரவு என்பதாலும், விடாது கொட்டும் மழையாலும் கொஞ்சம் இரைச்சலுடன் நம்மைப் பயமுறுத்திப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட அது நடு சாமம் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். எங்களோடு வந்திருந்த ‘சுமைதூக்கி’ கிருஷ்ணன் ‘ஓய்.........’ என பெருத்த குரலெடுத்து கத்தி, அலறிய அந்த அலறலை அவர் நிப்பாட்டவே இல்லை. இவரின் அலறலால் அந்த மலையாளத்து விரிக்காரர்களும் சுதாரித்துக் கொண்டு இருட்டில் ஹோ... ஹோவென வினோத சமிக்ஞைகளுடன் சத்தமெழுப்பி விரட்டிக்கொண்டிருந்தார்கள். (சுமைதூக்கி, சுமடு; பொருட்களை தூக்கி கொண்டு வருபவர்கள்)

அவர்களெல்லாம் ‘யானை இறங்கிடுச்சு... யானை இறங்கிடுச்சு என எச்சரிக்கை ஒலியெழுப்பி எச்சரித்து பயந்து அலறியபோது...

ஐயப்ப பக்தர்களின் காவலனாம் மாடனையும், கருப்பனையும் கண நிமிஷத்தில் கண் இமைக்குள் நிறுத்தி, சிவகணங்களை அருகாமையில் தரிசித்த ஏகோபித்த சிவகோத்திர பரவச பேருணர்வை தந்துவிட்டது அந்த சாமம்.

உறங்கி கொண்டிருந்த ஐயப்பமார்கள் எல்லோரும் விழித்தெழுந்தவர்கள், இருட்டில் செய்வதறியாது, அந்த கரிமலைவாசனை இதய கமலத்தில் உணர்ந்து, எப்போதுமே உன்னைச் சரணடைந்தேன்... காத்து ரட்ஷிக்க வேண்டும் ஐயப்பா என்று சரணடைந்த அந்த பொழுதுகளில் பாதை மாற்றி சென்றுவிட்டன இறங்கிய யானைகள். சரணகோஷத்தில் அதிர்ந்தது வேழங்கள் இறங்காத அந்த கரிய காரிரவு நிசி.

ஒருவேளை அந்த யானைகள் இறங்கியிருந்தால் அவை முதலில் நாங்கள் தங்கியிருந்த விரியினைத் தாண்டித்தான் கடந்து செல்ல வேண்டி வரும். அப்படியான இடத்தில்தான் அந்த விரி அமைந்திருந்தது.

இப்பொழுது நினைத்தாலும் இந்த கரிமலை கரிவிலந்தோடு அடிவாரத்தில் தங்கிய அந்த இரவு தந்திருந்த ஓரு வித தெய்வீக அனுபவம் எப்போதும் மறக்க முடியாததாக இருக்கிறது.

பொழுது விடிந்து கொண்டிருக்க, விடியலை உணராத அளவு பனிமூட்டம் மறைத்துக்கொண்டிருந்தது.

அதிகாலை கரிவிலந்தோடு ஆற்றில் மீண்டும் ஏகாந்த குளியல்.

கடும் வனத்தில் வனப்புமாறா வன்புலி வாகனன் என் ஐயப்பனுக்கு உற்சாக காலை பஜனை முடித்து இப்போது, கரிமலை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம்.

அடுத்து யாரும் அறியாத கரிமலையின் இன்னொரு ரகசியம்..?

- ஜி.காந்தி ராஜா | தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

| காட்டு வழிப் பயணம் தொடரும் |

முந்தைய அத்தியாயம்: பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE