பக்தர்களின் வாகனங்களால் திணறும் திருவண்ணாமலை: பொதுமக்கள் அவதி

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதால் கடும் இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத் தலமாக திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் உள்ளன.

உலக பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் வருகையும் உள்ளன. முந்தைய காலங்களில் பவுர்ணமி நாளில் மட்டும் அதிகளவு பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். இப்போது, வார விடுமுறை நாள் மற்றும் பொது விடுமுறை நாட்களை கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர்.

அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை நகரம் ஸ்தம்பித்துள்ளன. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுவாமியை தரிசனம் செய்ய கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகளில் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு (கார் பார்க்கிங்) திருவண்ணாமலையில் உரிய இடத்தை தேர்வு செய்து ஒதுக்கவில்லை. சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.

அண்ணாமலையார் கோயில் மாட வீதி, சன்னதி தெரு, அண்ணா சாலை, மத்தலாங்குளத் தெரு, சின்னக்கடை வீதி, காந்தி நகர் புறவழிச்சாலை, வேட்டவலம் சாலை, திண்டிவனம் சாலை, முத்துவிநாயகர் கோயில் தெரு உட்பட கோயிலை சுற்றியுள்ள அனைத்து வீதிகளையும் பக்தர்களின் வாகனங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் மிக கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு கிடுகிடுவென அதிகரித்துள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் தினசரி வருகின்றனர். இதேபோல், தமிழகத்தில் இருந்தும் பக்தர்களின் வருகையும் உள்ளன. இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முன்வரவில்லை.

பிரதான சாலை மற்றும் குடியிருப்புகள் உள்ள வீதிகளில் கிடைக்கும் இடங்களில், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வீட்டு வாசல் முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர். வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால், திருவண்ணாமலையில் வர்த்தக வீதிகள் உட்பட அனைத்து வீதிகள் மற்றும் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது.

திணறும் காவல்துறை... இந்த நிலையானது வாரத்தில் ஓரிரு நாட்கள் என்றால் அனுசரித்து செல்லலாம். இதே நிலை தினசரி நீடித்தால், பொதுமக்களால் என்ன செய்ய முடியும். அவசர தேவைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. திருவண்ணாமலை நகரை விட்டு வெளியேற வேண்டுமா?. அல்லது வெளியேற வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தப்படுகிறோமா? என்பதை ஆட்சி மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். போக்குவரத்தை ஒழுங்குப் படுத்த முடியாமல் காவல் துறையினரும் திணறு கின்றனர். உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் வாகனம் வரும்போது மட்டும், சாலையை விசாலமாக வைத்துக் கொள்கின்றனர். விஐபி, விவிஐபிக்கள் மீது அதீத அக்கறை செலுத்தும் காவல்துறையினர், சாமானிய மக்களை பற்றி கவலைப்படுவது கிடையாது.

திருப்பதியை போல் திருவண்ணாமலையை மாற்றுவோம் என பொதுமேடைகளில் அமைச்சர் எ.வ.வேலு சூளுரைத்து வருகிறார். இதனை மேற்கொள்காட்டி மாட வீதியில் ரூ.25 கோடியில் சிமென்ட் சாலையை அமைத்துக் கொடுத்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார். ஆனால், அவரது சொந்த தொகுதியான திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியும், மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகரம், ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதில் இருந்து விடுபடுவ தற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கார் பார்க்கிங் வசதி... - திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு, பெரு நகரங்களில் இருப்பதை போன்று “கார் பார்க்கிங்” வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக, கட்டணம் வசூலித்து பராமரித்து கொள்ளலாம். இதனை, தமிழக அரசு மூலமாகவும் அல்லது தனியார் நிறுவனம் மூலமாக மேற்கொள்ள ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் பக்தர்களின் வாகனங்களும் பாதுகாக்கப்படும். வாகன நிறுத் துமிடம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கான திட்டங்களை வகுக்க உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க துரிதமாக செயல்பட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE