பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சிரமத்துக்குள்ளாகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் முக்கியமானது. இதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாகச் சென்று முருகனை தரிசிப்பர். வரும் 2024 ஜன.19-ம் தேதி தைப்பூசத் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு முன்கூட்டியே பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
அவர்களில் ஏராளமானோர் தற்போது பழநிக்கு பாதயாத்திரையாக வரத் தொடங்கி விட்டனர். தற்போது ஒட்டன்சத்திரம் முதல் பழநி வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் இருக்கும் நடைபாதையின் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், செடி, கொடிகள் வளர்ந்தும் புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி பாதயாத்திரை பக்தர்கள் உயிரை பணயம் வைத்து சாலையில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்களில் விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது.
மேலும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பொள்ளாச்சி வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதி போன்றவற்றை இன்னும் ஏற்படுத்தவில்லை. பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி ஓய்வெடுக்க வசதியாக பழநி கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களும் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளன. இதேபோல், தற்காலிகத் தங்குமிடங்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் பாதுகாப்பின்றி சாலையோரம் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களையும் வெட்டி அகற்றி விட்டதால் பக்தர்கள் நிழலைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் அமைக்கப்படாததால் அவசர காலத்தில் மருத்துவமனையைத் தேடும் நிலை உள்ளது. தைப்பூச விழா நெருங்கும்போது அதிக அளவில் பக்தர்கள் வரத் தொடங்குவர். எனவே, மாவட்ட நிர்வாகம் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
» நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும்: மம்தா பானர்ஜி
» சுழற்சி முறையில் காய்கறிகள் சாகுபடி: முன்மாதிரியாக திகழும் மேலச்சாலூர் கிராமம்!
மதுரையைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர் பழனி கூறுகையில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதையைக் காணவில்லை. சில இடங்களில் நடைபாதை புதர் மண்டி நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. அதனால் ஆபத்தான முறையில் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆங்காங்கே சாலைப் பணிகள் நடந்து வருவதால் அச்சத்துடனே பாதயாத்திரை செல்ல வேண்டியுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக சாலையோரங்களில் அமைக்கப்படும் மின் விளக்கு வசதியையும் இன்னும் ஏற்படுத்தவில்லை. அதிகாலை நேரங்களில் யாத்திரையைத் தொடங்குவோர் மொபைல் போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் நடக்க வேண்டிய நிலை உள்ளது, என்று கூறினார்.
பாதயாத்திரை பக்தர் சோணைமுத்து கூறுகையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பதால் ஒட்டன்சத்திரம் - பழநி வரை நடைபாதைகள் மிகவும் மோசனமான நிலையில் உள்ளன. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லத் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும். வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. பல கி.மீ. தொலைவுக்கு நடந்து வரும் பக்தர்கள் கால் வலி, மூட்டு வலி, உடல் அசதியால் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வடைகின்றனர். அப்போது அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். இரவில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தற்காலிகத் தங்குமிடங்களை சாலையோரம் அமைக்க வேண்டும் என்று கூறினார்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago