உயிர் வளர்க்கும் திருமந்திரம் 15: குருவாய் வருவாய் அருள்வாய்

By கரு.ஆறுமுகத்தமிழன்

து ‘மிகக் கடினம்’ என்று பலராலும் சொல்லப்படுகிறதோ, ‘ஆமாம், கடினம்தான்’ என்று கேட்கிறவர்களாலும் நம்பப்படுகிறதோ, அதற்கு இடைத்தரகுகள் உருவாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு தேவைக்காக அரசை அணுக வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதிகார வட்டத்தோடு தொடர்பில்லாத எளிய மக்கள் அரசை அணுகுவது எளிதான செயல் இல்லை என்று நம்முடைய புத்தியில் செதுக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வோம்? இயல்பாக இடைத்தரகர்களை அணுகுவோம்.

இடைத்தரகர்கள் மூன்று வகை: முதலாவது வகை, நம்மிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, நமக்கு வர வேண்டியதைப் பெற்றுத் தருகிற ‘நேர்மையாளர்கள்.’ இரண்டாவது வகை, நம்மிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, நமக்கு வர வேண்டியதைப் பெற்றுத் தராமல் ஏய்த்துவிடுகிற ஏமாற்றுக்காரர்கள். மூன்றாவது வகை, நம்முடைய கோரிக்கை நியாயமானது என்பதை விளங்கிக்கொண்டு, நம்மிடம் எதையுமே பெற்றுக்கொள்ளாமல், நாம் பெற வேண்டியவற்றைப் பெற்றுத்தருகிற சேவையாளர்கள்; செல்வாக்குப் பெறுவது என்பதே பொதுச்சேவை செய்ய மட்டுந்தான் என்று கருதுகிறவர்கள். இந்த மூன்று வகையினரில் முதல் வகையினரும் இரண்டாம் வகையினரும் கணிசமான அளவினர். மூன்றாம் வகையினர் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய உயிரினமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

வானம் என்ன அத்தனை எளிதா?

இருக்கட்டும். எடுத்துக்காட்டுவதை நிறுத்திக்கொண்டு நம் விவகாரத்துக்கு வருவோம். நாம் பெற வேண்டுவது எதை? கடவுளை! அரசாங்கத்தை அணுகும் செயலே அரிது என்றால், கடவுளை அணுகும் செயல் என்ன எளிதோ?

தான்என்ற ஆணவத்தை நீக்க மாட்டார்;

சண்டாளக் கோபத்தைத் தள்ள மாட்டார்;

ஊன்என்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார்;

உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்;

பான்என்ற ஞானவெள்ளம் உண்ண மாட்டார்;

பதறாமல் மவுனத்தே இருக்க மாட்டார்;

வான்என்ற பொருள்என்ன எளிதோ மைந்தா?

மகத்தான மனம்அடங்க எய்யும் காணே!

-என்று கடவுளை அடையும் செயலின் எளிமையின்மையைப் பாடுகிறார் கைலாயக் கம்பளிச் சட்டைமுனி என்ற சித்தர். ஆணவம், கோபம், சுகபோகம், காமம் எதையும் தள்ள மாட்டீர்கள்; அடைய வேண்டிய ஞானம் எது என்பதை உணர மாட்டீர்கள்; சும்மா இருந்து சொல்லறுக்கவும் மாட்டீர்கள்; ஆனால், வானம் மட்டும் எங்களுக்கு வசப்பட வேண்டும் என்று வேண்டுவீர்கள். வானம் என்ற பொருள் என்ன அவ்வளவு எளிதா? ஏறாத ஏணியிட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டச் சொல்லும் ஆசைமனம் அடங்கட்டும்; வானம் தானாகக் கிட்டி வரும்.

நல்லது. ஐயத்திலிருந்து விடுபட்டுத் தெளிந்தவர்களுக்கு வையத்தைக் காட்டிலும் வானமே பக்கத்தில் இருக்கிறதென்று வள்ளுவரும் சொல்லுகிறார்தான். என்றாலும் ஐயங்களிலிருந்து விடுபட்டுத் தெளிதல் என்பதென்ன எளிதான செயலா? இல்லைதான். ஐயத்திலிருந்து தானாகவே நீங்குவது என்பது நடக்கவே இயலாத செயலில்லை என்றாலும், தக்க துணை இன்றிச் செய்யக் கடினமான செயல்தான். எனவே, எளியவர்கள் இடைத்தரகு வேண்டுவது நியாயம்தான். ஐயம் தெளியாமல் அயர்ந்து நிற்கும் எளிய உயிர்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் கைகாட்டி மரமாக நின்று திசைகாட்டிச் செலுத்துவிக்கும் குருமார் தேவைதான்.

சரியான குருவுக்கு அடையாளங்கள்

பிறகென்ன? கடவுளைக் கண்டுகொள்ளும் செயல் எளிதாகிவிடும் இல்லையா? ஆகாது. ஏன்? கடவுளைக் கண்டு சொல்லும் சரியான குருவைத் தேர்ந்துகொள்வது கடினமாகிவிடுகிறது இல்லையா? சரியான குருவுக்குச் சில அடையாளங்கள் சொல்கிறார் திருமூலர்:

குருஎன் பவனே வேதஆகமம் கூறும்

பரஇன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து

ஒருசிந்தை இன்றி உயர்பாசம் நீக்கி

வரும்நல் குரவன்பால் வைக்கலும் ஆமே. (திருமந்திரம் 2057)

குரு என்பவன், பற்றுதலை அறுத்தவன்; சிவயோகத்தைத் தன் வழிமுறையாகக் கொண்டவன்; எண்ணுவதற்கும் அடைவதற்கும் ஏதுமில்லாத நிலையில் எண்ணங்களே இல்லாமல் இருப்பவன்; சமய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பேரின்பத்தில் திளைத்து வாழ்பவன்; அவனிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.

அவ்வாறு நம்பிக்கை வைத்து அவன் வழிச் சென்றால் அவன் நமக்குச் செய்வதென்ன?

தவிரவைத் தான்வினை, தன்அடி யார்கோள்;

தவிரவைத் தான்சிரத் தொடுதன் பாதம்;

தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்;

தவிரவைத் தான்பிற வித்துயர் தானே. (திருமந்திரம் 2050)

‘இறைவனைப் போற்றுவது என் கொள்கை; போற்றாதவர்களும் மறுப்பவர்களும் ஒழிக’ என்று மூடத்தனமாய்க் கொள்கை பேசி, அந்த மூடக் கொள்கையை மேலும் முன்னெடுக்கும் வகையில் வசவு, மிரட்டல், அடிதடி போன்ற அடாவடி வினைகளுக்குத் துணியும் கடியவர்களான அடியவர்களை நெறிப்படுத்தி, அவர்களின் மூடத்தனத்தைத் தவிர்ப்பான். சாவைக் குறித்த அச்சத்தை விலக்குவான். சாவைப் பற்றி அச்சம் தவிர்ந்துபோகும்போது, ‘பிறவி ஒரு துன்பம்’ என்ற எதிர்நிலைக் கருத்து தானாகவே தகர்ந்து போகும். அறிவின்மையை, அடாவடியை, சாவச்சத்தை, வாழ்வின் துன்பத்தை என்று எல்லாவற்றையும் தவிர்த்தவன் திருவடி நம் தலைமேல் வைத்தான். அதைக் கொள்ளலாம்; பிழையில்லை.

தனை மறந்த தொண்டால், நமை நினைக்கச் செய்யும் அத்தகைய குரு ஒருவர் கிடைக்கும் நிலையில்,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்றே

-என்று ஔவை சொன்ன மூதுரைபோல,

தெளிவு குருவின் திருமேனி காண்டல்;

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;

தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே (திருமந்திரம் 139)

-என்று இருந்துவிடலாம். ஆனால், சிக்கல் என்னவென்றால், கைமாறாக ஏதும் கோராமல், அரசுக்கும் எளியவர்களுக்கும் நடுவில் நின்று, தன் செல்வாக்கால் சேவை செய்யும் செய்யும் மூன்றாவது வகை இடைத்தரகர்களைப்போலவே, கடவுளைக் கண்டு சொல்லும் உண்மைக் குருமார்களும் அரிதிலும் அரிதாகிவிட்டார்கள். இருபாலரையும் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்த கதைதான்.

அரிதிலும் அரிதாக இருக்கிற ஒன்றைக் கடவுளாகவே காண்பதும் கருதுவதும் வழக்கந்தானே? அந்த அடிப்படையில் குருவையே சிவமாக்கிவிடுகிறார் திருமூலர். அல்லது, எளிய மனிதக் குருக்களால் இத்தகைய செந்நிலையை எய்த முடியாது என்பதால் சிவனே குருவாக வந்தான் என்று வைத்துக்கொண்டாலும் பொருந்துந்தான்.

குருவே சிவம்எனக் கூறினன் நந்தி;

குருவே சிவம்என் பதுகுறித்து ஓரார்;

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்;

குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே. (திருமந்திரம் 1581)

குருதான் சிவம் அல்லது சிவம்தான் குரு. அறிக. இறைவனே குருவாக வருவான் என்னும் கருதுகோளைத் திருமூலர் மட்டுந்தான் முன்வைக்கிறாரா? பிறரும் வைக்கிறார்கள்.

...அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமை...

-என்று திருவாசகத்தின் போற்றித் திருவகவலில் மணிவாசகர் புல்லரிக்கிறார்.

...குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இது பொருள் என...

-உணர்த்தியதாக வினாயகர் அகவலில் ஔவை கிறுகிறுக்கிறாள்.

...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

-என்று கந்தர் அனுபூதியில் குகனையே குருவாக வரச்சொல்லி விண்ணப்பம் போடுகிறார் அருணகிரிநாதர்.

தமிழ்ப் பக்தி இயக்கத்தின் மாபெரும் அருளாளர்களும் காணாததைக் கண்டவர்களுமான இவர்களுடைய இத்தகைய வேண்டுதல்களும் முன்வைப்புகளும் ஆசாபாசங்களுக்குத் தாங்கள் இரையாகி அடிமைத்தனத்துக்குப் பக்தர்களை இரையாக்கும் மனிதக் குருக்களின் மேலான நம்பிக்கையை மறுதலிக்கின்றனவோ?

இந்த ஐயத்தைத் தெளிவிக்க எந்தக் குருவும் முன்வர மாட்டார். நம் அறிவுக்கு எட்டிய வகையில் நாமே தெளிவித்துக்கொள்ள வேண்டியதுதான்.

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்