467-வது கந்தூரி விழாவையொட்டி நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆளுநர் பிரார்த்தனை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தர்காவில் பிரார்த்தனை செய்தார்.

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இன்று (டிச.24) அதிகாலை நாகூர் ஆண்ட வருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை நாகூர் தர்காவுக்கு வந்தார். அவருக்கு தலைமை அறங்காவலர் செய்யது அபுல் பதஹ் சாஹிப் மற்றும் நிர்வாகிகள் பாரம்பரிய முறைப்படி நகரா வாசித்தும், மேளதாளம் முழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றார்.

ஆசிர்வாதம் பெற்றதில் மகிழ்ச்சி

பின்னர், பெரிய ஆண்டவர் சமாதியில் சிறப்பு துவா செய்யப்பட்டது. ஆளுநர் ரவி, பெரிய ஆண்டவர் சமாதி முன்பு சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அப்போது, பெரிய ஆண்டவர் சமாதியில் இருந்து எடுத்து வரப்பட்ட பூ ஆளுநருக்கு வழங்கப்பட்டது. பின்னர், அங்குள்ள முக்கியப்பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில்கையெழுத்திட்ட ஆளுநர்,“467-வது ஆண்டு நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள்.

புனிதரின் ஆசிர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமையான நாகூர்தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் ஆளுநரிடம் அளித்த மனுவில், ‘‘450 ஆண்டு களுக்கும் மேல் பழமையான நாகூர் ஆண்டவர் தர்காவின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். நாகூர் தர்கா மராமத்துப் பணிக்காக மத்திய அரசு ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு, நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங், அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 4 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

49 பேர் கைது: இதற்கிடையே, திருச்சியில் இருந்து நாகூருக்கு காரில் சென்றஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திருவாரூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட 49 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE