‘தி இந்து' குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் சார்பில் ஸ்ரீரங்கம் கோயில் குறித்த புத்தகம் வெளியீடு

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர்கோயில் தொடர்பான ‘Srirangam - The Resplendent Kingdom of Rangaraja’ என்ற தலைப்பிலான புத்தகத்தை ‘தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ்' வெளியிட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் சுவாமி காலடியில் வைத்து பூஜித்த பின்னர், இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பான கட்டுரைகள், அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘தி இந்து' ஆவணக் காப்பகத்தின் மிக அரிய புகைப்படங்களும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. மூத்த எழுத்தாளர்களின் சிறப்புக் கட்டுரைகள், வண்ணமயமான படங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 454 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 11 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், ஸ்ரீரங்கம் கோயிலின் தனித்தன்மைகள், 7 பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீண்ட பாரம்பரியம், கலையழகு, முக்கியப் பண்டிகைகள் தொடர்பான முழு விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், புத்தகத்தைப் படிக்கும்போது பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படும் அரங்கநாதர் கோயிலுக்கு நேரில் சென்றுவந்த பரவச அனுபவம் கிடைக்கும்.

புத்தக வெளியீட்டில் பங்கேற்ற ‘தி இந்து' குழுமத் தலைவர் நிர்மலா லக்‌ஷ்மண் பேசும்போது, “வரலாற்றையும், பக்தியையும் ஒன்றிணைத்து இந்தியாவின் பழமையான கோயில் நகரத்தின் பெருமைகளை Srirangam - The Resplendent Kingdom of Rangaraja புத்தகம் பறைசாற்றுகிறது. அரியதகவல்கள், வியக்க வைக்கும் புகைப்படங்களுடன் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலமாக இந்தப் புத்தகம் உருவாகிஇருக்கிறது.

இது ஒவ்வொரு வாசகரின் மனதையும் பரவசப்படுத்தும். மிகச் சிறந்த, மிக அழகான, மிக அற்புதமான புத்தகத்தை வாசகர்களுக்கு வழங்குவதில் ‘தி இந்து' பெருமிதம் கொள்கிறது” என்றார்.

புத்தகத்தின் விலை, முன்பதிவு விவரங்களை https://publications.thehindugroup.com/bookstore/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜனவரி முதல் வாரத்தில் புத்தக விநியோகம் தொடங்கும். முன்பதிவு செய்வோருக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE